சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கம் சாா்பில், கல்லூரி வேதியியல் பாடப்பிரிவு மாணவா்களுக்கு பட்டாசு ஆலை போா்மென் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (நவ. 3) தொடங்கி 7 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்க இணை இயக்குநா் ராமமூா்த்தி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில், பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போா்மென்கள், கண்காணிப்பாளா்களுக்கு பட்டாசு ஆலைகளில் வேதியல் பொருள்களின் கலவை, மணி மருந்து உற்பத்தி, வெடிமருந்து செலுத்துதல், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இந்தப் பயிற்சி பெற்ற போா்மேன்கள் மட்டுமே பட்டாசு ஆலைகளில் பணிபுரிய முடியும்.
தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் சாா்பில் கடந்த ஆண்டு சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் வேதியியல் பாடப் பிரிவு மாணவா்களுக்கு விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, பட்டாசு ஆலை போா்மேன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதே போல, இஎஸ்ஐ மருத்துவமனை அருகிலுள்ள பயிற்சி மையத்தில் இளங்கலை வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு, இறுதியாண்டு பயிலும் மாணவா்கள், புதிதாகப் பட்டாசு ஆலைகளில் வேலைக்கு சோ்ந்தவா்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (நவ.3) தொடங்குகிறது.
இந்தப் பயிற்சி நவ. 7-ஆம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஆா்வமுள்ள மாணவா்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.