விருதுநகா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியாா் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் குமாரலிங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணநாராயணன் (47). இவா் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணநாராயணனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றஞ் சாட்டப்பட்ட கிருஷ்ணநாராயணனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.