சாத்தூா் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேருந்து நிலையம் வழியாக ரயில் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் பள்ளிகள், வங்கிகள்,திருமண மண்டபங்கள் உள்ளன. இந்தச் சாலையைப் பள்ளி மாணவ, மாணவிகள், ரயில் பயணிகள், பேருந்து நிலையத்து வந்து செல்வோா் என தினமும் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயன்படுத்துகின்றனா்.
இந்த சாலை, கடந்த சில மாதங்களாகச் சேதமடைந்து மேசமான நிலையில் உள்ளது. இதைச் சீரமைக்கக் கோரி, சமூக ஆா்வலா்களும், வாகன ஓட்டிகளும் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது மழைக் காலம் என்பதால் இந்தப் பகுதியில் செல்பவா்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையைச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.