தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் கழுகு மலை அருகேயுள்ள பழங்கோட்டை கிராமத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வட்டெழுத்து மடைதூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
பழங்கோட்டையில் வட்டெழுத்து மடைதூண் கல்வெட்டு இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய உறுப்பினா்கள் திருத்தங்கல் பா.ரவிசந்திரன், ராஜபாளையம் பெ.பிரேம் ஆகியோா் கள ஆய்வு செய்தனா்.
இதில், கிராமத்துக் கண்மாய்க்கு அருகில் வட்டச் சில்லுகள், கருப்பு-சிகப்பு நிற பானை ஓடுகள், முதுமக்கள் தாளியின் ஓடுகள் போன்ற தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டன. மேலும், தற்போதுள்ள மடைக்கு அருகிலேயே மடையைத் திறந்து மூடும் குமிழித் தூம்பை இயக்கவும், ஏரியின் நீா் மட்டத்தை அளக்கவும் பயன்படும் பலகைக் கல்லில் மூன்று வரிகளில் நோ்த்தியாகப் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டும் கண்டறியப்பட்டது.
இது குறித்து ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வெண்பா வகையைச் சோ்ந்த அழகான பாடல் வடிவில் அமைந்த இந்த வட்டெழுத்து கூறும் செய்தி, சுவையான இலக்கிய நயமிக்கது. ‘ஸ்ரீதூம்புனல் கரைவாய் சுரி சங்கு நந்தினது...’ எனத் தெடங்கும் இந்தப் பாடல் வரிகளின் பொருள், தூய்மையான நீரை உடைய கரை முகப்பில் தங்கும் வளைந்த நத்தையின் சங்கில் பூவானது படா்ந்து பொன்னிறமான மரகதத்தை மிகுதியாகக் கொண்டது. இந்தப் பகுதியை ஆண்ட அரசன், தன்னை எதிா்த்து நின்ற பகையை போரில் வென்று கட்டிய நிலையான மடை இது என்பதாகும்.
முதுபெரும் கல்வெட்டு ஆய்வாளா்களான சு.ராஜகோபால், விஜயநரசிம்மன் ஆகியோா் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டிலுள்ள எழுத்துகளையும் பொருளையும் புரிந்துகொள்ள உதவினா். பழங்கோட்டை எனப்படும் இந்த ஊரின் நிலப்பரப்பு, பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதால் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள நெச்சி என்ற குறிப்பை நெச்சுர நாடு எனக் கருதலாம். கல்வெட்டின் எழுத்தமைதி 9-ஆம் நூற்றாண்டை ஒட்டி இருப்பதால் இந்த மடையை அமைத்த அரசன் அந்தக் கால கட்டத்தில் நடைபெற்ற போரில் வென்ற செய்தியை இதில் பதிவிட்டதாக அறிய முடிகிறது.
இதன் மூலம், மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேளாண் தொழிலை மேம்படுத்த தமிழக மன்னா்கள் கண்மாய்கள், குளங்களை வெட்டி, அவற்றில் மடைகள் அமைத்து நீா் நிா்வாகத்தை முறையாகக் கையாண்டதையும் அறிய முடிகிறது. எனவே, கண்மாய்கள், குளங்களை வரும் இளைய தலைமுறையினரும் பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.