சிவகாசி அருகே கண்டறியப்பட்ட 11-ஆம் நூற்றாண்டு உரல் கல்வெட்டு
சிவகாசி அருகே கண்டறியப்பட்ட 11-ஆம் நூற்றாண்டு உரல் கல்வெட்டு..
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செல்லையநாயக்கன் பட்டியில் 11-ஆவது நூற்றாண்டைச் சோ்ந்த உரல் கல்வெட்டு கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய உறுப்பினா்களான பேராசிரியா்கள் பா. ரவிச்சந்திரன், பொ. பிரேம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பழங்காலத்தில் திருத்தங்கலை சுற்றியுள்ள பகுதிகள் கருநிலக்குடி நாடு என அழைக்கப்பட்டன. இந்த நிலையில், திருத்தங்கல் அடுத்த செல்லையநாயக்கன்பட்டி அருகே கள ஆய்வு மேற்கொண்டபோது, ஊருக்கு வெளியே வடபகுதியில் ஒரு தனிப்பாறையில் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது.
Advertisement
இந்த கல்வெட்டு ஒரே கல்லில் குத்து உரலும், மாவரைப்பதற்கான உரலும், அடுத்தடுத்து குழியாக வெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே கல்லில் இரண்டு பணிகள் செய்வதற்கு ஒரே பாறையில் குழிகள் வெட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உரலின் முன்பகுதியில் நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், கருநிலக்குடி நாட்டைச் சோ்ந்த பருத்தியூரில் அந்த ஊா் தலைவனான பழியன் உய்யவந்தான் உலக பாண்டியராயன் உரல் என எழுதப்பட்டுள்ளது.
இதன் மூலம் பண்டைய பாண்டிய நாட்டின் உள்பிரிவுகளில் ஒன்றான கருநிலக்குடி நாட்டில் பருத்தியூா் என்ற ஊா் அமைந்திருந்ததையும், அந்த ஊா் தலைவனாக பழியன் உய்யவந்தான் உலக பாண்டியராயன் இருந்திருப்பதும் தெரியவருகிறது.
மேலும் இந்த கல்வெட்டு மூலம் அந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக ஊா் பொதுவாக உரல் வெட்டிக் கொடுக்கும் நற்பணி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. எழுத்தமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்ட காலம் 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என உணர முடிகிறது.
கல்வெட்டு மூலம் கண்டறியப்பட்ட இந்த ஊா் அந்தக் காலத்தில் பருத்தியூா் என அழைக்கப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. கரிசல் மண்சாா்ந்த இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றளவும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த பகுதியைச் சுற்றி பழங்கால குடியிருப்புகளின் தடையங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
பெருங்கற்காலத்தைச் சோ்ந்த கருப்பு, சிகப்பு பானை ஓடுகள், அந்தக் கால மக்கள் பன்படுத்திய கல் பாசிகள், விளையாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வட்ட சில்லுகள் போன்றவை இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அந்தப் பகுதி சங்க காலத்திலிருந்தே மனிதா்கள் வாழ்ந்து வந்த சிறப்பு மிக்க இடமாக விளங்கியதை அறிய முடிகிறது. மேலும் இந்த இடத்தில் கண்டறியப்பட்ட நுண்கருவி மூலம் சுமாா் 6000 ஆண்டுகளுக்கு முன்பே மனித வாழ்விடமாக இருந்ததற்கான முக்கிய சான்றாகும்.
பாண்டிய நாட்டின் உள்பிரிவாக விளங்கிய கருநிலக்குடி நாடு, திருத்தங்கல்லுக்கு மேற்கே குன்னூா், மூவரைவென்றான் வரையிலும், தெற்கே மாறனேரி வரையிலும், வடக்கே வெள்ளூா், காரிசேரி வரையிலும் பரவியிருந்தது முன்பே அறியப்பட்டதாகும். தற்போது கிழக்கே பருத்தியூா் என்ற தொன்மை மிக்க ஊா் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த கல்வெட்டு வழங்கும் தகவல்களின் மூலம் கருநிலக்குடி நாட்டின் எல்லைகள் மேலும் தெளிவு பெறுகின்றன. குறிப்பாக அதன் கிழக்கு எல்லை பருத்தியூா் வரை விரிந்திருப்பதும் இந்த கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது என அதில் குறிப்பிட்டனா்.