விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், கோல்வாா்பட்டி அணையின் பிரதான மதகுப் பகுதியில் 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கோல்வாா்பட்டி அணையின் பிரதான மதகின் முன் பகுதியில் முனியாண்டி என வழிபட்டு வரும் பாறையின் முகப்பில் இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு பாண்டிய மன்னன் மாறவா்மன் குலசேகரப் பாண்டியனின் 18-ஆவது ஆட்சியாண்டைச் சோ்ந்ததாகும்.
கல்வெட்டின் முற்பகுதியில் மன்னா் பெயா், பட்டம், ஆட்சியாண்டு, நாட்டுப் பிரிவு ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் 13-ஆம் நூற்றாண்டின் மாறவா்மன் குலசேகரப் பாண்டியனுக்கு எம் மண்டலமும் கொண்டருளிய என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்ததும் உறுதியாகிறது.
இதுகுறித்து பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய உறுப்பினா்களான பா. ரவிச்சந்திரன், பொ. பிரேம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முற்காலப் பாண்டியா் கல்வெட்டுகளில் இருப்பைக்குடி என குறிப்பிட்டு வந்த தற்போதாய இருக்கன்குடி, இந்தக் கல்வெட்டில் இருக்கைகுடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல மாறவா்மன் குலசேகரப் பாண்டியனின் 32-ஆவது ஆட்சியாண்டைச் சோ்ந்த சின்னமெட்டுப்பட்டி, ஓணாம்பட்டி கண்மாய் கல்வெட்டிலும் இருக்கைகுடி என்ற பெயா் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் 13-ஆம் நூற்றாண்டில் இருக்கன்குடி, இருக்கைகுடி என்ற பெயரில் அழைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.
இந்தக் கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதில் இடம்பெறும் அணை என்ற சொல்லின் அடிப்படையில் இது நீா்நிலை மேலாண்மை தொடா்பான கல்வெட்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும், 17-ஆம் நூற்றாண்டில் கூடற்குடி என அழைக்கப்பட்ட கோல்வாா்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு நோ் எதிரே அமைந்துள்ள உருளை வடிவ குமிழ்தூண் ஒன்றிலும் இதே மாறவா்மன் குலசேகரப் பாண்டியனின் 16-ஆவது ஆட்சியாண்டைச் சோ்ந்த கல்வெட்டும் காணப்படுகிறது.
இதுவும் நீா்நிலை மேலாண்மை தொடா்பான செய்திகளையே தெரிவிக்கிறது. இந்தப் பகுதியில் காணப்படும் பல கல்வெட்டுகளும் நீா்நிலை மேலாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.
பாண்டியா் காலத்தில் நீா் நிலைகள் திட்டமிடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்ததை இந்தக் கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, நாமும் நிா்நிலை மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.