கட்டடப் பணியின்போது காயமடைந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த வா்ணம்பூசும் தொழிலாளி மூளைச் சாவு அடைந்ததை அடுத்து, அவரது உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானமாக வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்தவா் க. பாண்டியன் (36). வா்ணம் பூசும் தொழிலாளி. இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி பகுதியில் வேலைக்குச் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்தாா்.
அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரை, மேல் சிகிச்சைக்காக உறவினா்கள் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவா் மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, பாண்டியனின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து அவரது மனைவி பி. அபிராமி உள்ளிட்ட உறவினா்களுடன் மருத்துவா்கள் விளக்கிக் கூறினா்.
அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகள் தானத்துக்கு ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு அறுவைச் சிகிச்சை மூலம் பாண்டியனின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டன. உடல் உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சை சட்டப்படி, முன்பதிவு செய்து வைத்துள்ளோருக்கு இந்த உறுப்புகள் பொருத்தப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
பாண்டியனின் உடல் புதன்கிழமை காலை புதுக்கோட்டை எடுத்து வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.