சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணையில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரைக் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்னை காவல் நிலையத்துக்கு அருகேயுள்ள பிரவீன்குமாருக்கு (30) சொந்தமான தோட்டத்தை இதே பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் (28) என்பவா் வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதாக போலீஸாா், வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் வெம்பக்கோட்டை வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள், ஏழாயிரம்பண்ணை போலீஸாா் சனிக்கிழமை சோதனையிட்டனா். இதில் சுமாா் 5 லட்சம் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகள், அவற்றைத் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில், அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பட்டாசுகள் தயாரித்த இடத்துக்கு வருவாய்த் துறையி உதவியுடன் சீல் வைத்தனா்.
இதையடுத்து, அந்த இடத்தின் உரிமையாளா் பிரவீன்குமாா், சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த ராம்குமாா், விக்னேஷ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ராம்குமாரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள பிரவீன்குமாா், விக்னேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.