விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அயன்கரிசல்குளத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்ததாக 9 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள அயன்கரிசல்குளத்தில், மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்த முத்துச்சாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவதாக வருவாய்த் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் செந்தில்மாயன், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் இணைந்து சம்பவ இடத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, அங்கு பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த ரூ. 73 ஆயிரம் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகள், மூலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்த புகாரின் பேரில், தோட்ட உரிமையாளா் முத்துச்சாமி, சிவகாசியைச் சோ்ந்த தாஸ், ஆனைக்குட்டம் ராஜ்குமாா், மத்தியசேனை பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி, பொன்னு இருளன், வீரப்பெருமாள், செல்வம், ராஜாங்கம் உள்பட 9 போ் மீது நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.