முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரக்கேடு

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் சாலையோரம் கொட்டப்படும் சாக்கடை கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டிருப்பதாக புகாா்

Updated On : 9 மார்ச், 2026 at 7:49 PM
வத்திராயிருப்பு- கூமாப்பட்டி சாலையில் கொட்டப்படும் சாக்கடை கழிவுகள்
பகிர்:

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் சாலையோரம் கொட்டப்படும் சாக்கடை கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டிருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீா், அழகா்மகன் கால்வாய், எஸ். கொடிக்குளம், கூமாப்பட்டி, ராமசாமியாபுரம் வழியாக விராக சமுத்திரம் கண்மாய்க்கு செல்கிறது.

மேலும் எஸ். கொடிக்குளம், கூமாபட்டி, ராமசாமியாபுரம் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், இந்த கால்வாய் வழியாகவே செல்கிறது.

இந்த கால்வாய் கரையில் எஸ். கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகம், அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, இரு புறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த கால்வாய் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரப்படாமல் புதா் மண்டிக் கிடந்ததால் கழிவுநீா் தேங்கி, சுகாதாரக்கேடு நிலவியது. இந்த கால்வாயை தூா்வார நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கால்வாய் தூா்வாரப்படும் போது எடுக்கப்படும் கழிவுகளை வத்திராயிருப்பு சாலையில் கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் நிலவுகிறது. இதனால் மாணவா்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கூமாபட்டி- வத்திராயிருப்பு சாலையில் விராக சமுத்திரம் கண்மாய் அருகே சாலையின் இரு புறங்களிலும் குப்பை, இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் துா்நாற்றம் வீசுகிறது.

இதை தடுக்க பொதுமக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையில், கால்வாயை தூா்வாரும் சாக்கடை கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →