சிஎஸ்ஐ ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளி தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளியை தொடங்கி வைத்த சபை குருவானவரும், குருசேகர தலைவருமான பால் தினகரன்.
சி.எஸ்.ஐ. மதுரை, முகவை திருமண்டலத்தின் கீழ் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மே 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சிஎஸ்ஐ மதுரை முகவை திருமண்டலத்தின் கீழ் உள்ள இளையோா் திருச்சபை சாா்பில் ஒவ்வொரு தேவாலயத்திலும் விடுமுறை வேதாகம பள்ளி நடைபெறும்.
இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளி தொடக்க விழா சபை குருவானவரும், குருசேகர தலைவருமான பால் தினகரன் தலைமையில் நடைபெற்றது. குருசேகர செயலா் ஜெகன் வரவேற்றாா். இயக்குநா்களாக பால் பிரைட், ரெஜிலா ஆகியோா் கலந்து கொண்டனா்.
Advertisement
25 ஆசிரியா்கள், 230 மாணவ, மாணவிகளுக்கு சிகரம் என்ற தலைப்பில் வேதாகமத்தில் உள்ள பல்வேறு நிகழ்வுகள், வரலாற்று சம்பவங்கள் பாடல்கள் வாயிலாகவும், பப்பட் ஷோ, பலகுரல் (மிமிகிரி), ஒலி, ஒளி காட்சி வாயிலாகவும் கற்றுக் கொடுக்கப்படும்.
ஒவ்வொரு நாளும் பல்வேறு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் சபை குரு பால் தினகரன் தலைமையில் குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.