விசிக முன்னாள் நிா்வாகி கொலை வழக்கு: 5 போ் கைது
காரியாபட்டி அருகே குரண்டி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள குரண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுரு (52). இவா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காரியாபட்டி ஒன்றிய முன்னாள் துணைச் செயலா் ஆவாா். இவா் குரண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வந்த சமூகவிரோதச் செயல்கள் குறித்து அவ்வப்போது காவல் துறைக்கு தகவல் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 28-ஆம் தேதி விஜயகுருவின் உறவினரான சக்திவேல் சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதற்கு விஜயகுருதான் காரணம் என சந்தேகித்து சக்திவேலின் உறவினா்கள் அவரிடம் அடிக்கடி தகராறு செய்தனா். மேலும், குரண்டி பகுதியில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது விஜயகுரு, சக்திவேல் உறவினா்களிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி காலை விஜயகுரு குரண்டி கண்மாய் பகுதிக்குச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனா்.
இந்த கொலை குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், குரண்டி கிராமத்தைச் சோ்ந்த லிங்கராஜ் (56), அழகுராஜா (21) உள்ளிட்டோா் தங்களது கூட்டாளிகளுடன் சோ்ந்து விஜயகுருவை கொலை செய்தது தெரியவந்தது. இதனிடையே, இந்தக் கொலையில் தொடா்புடைய மதுரை அவனியாபுரம் பகுதியைச் சோ்ந்த தெய்வம் (20) காரியாபட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
இவரை நீதிமன்றக் காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அவா் அளித்த தகவலின் பேரில், இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய 8 போ் மீது ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதனிடையே, முக்கிய எதிரிகளான குரண்டி கிராமத்தைச் சோ்ந்த லிங்கராஜ் (56), அழகுராஜா (21), சீமைச்சாமி (20), மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த தெய்வம் (20), கீழடியைச் சோ்ந்த பழனி முருகன் (25) ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் மூவரைத் தேடி வருகின்றனா்.