ஒருவர், வங்கியில் புதிதாக விண்ணப்பித்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்கும்போதும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன.
ஏற்கனவே பயன்படுத்தும் ஏடிஎம் அட்டை காலாவதியாகி புதிய அட்டையோ அல்லது புதிதாக விண்ணப்பித்து டெபிட் அல்லது கிரெடிட் அட்டையோ வீட்டு முகவரிக்கு வரும்போது, அந்தக் கடிதம் எந்த சேதாரமும் ஆகாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மூடி ஒட்டப்பட்ட கவருக்குள் இருக்க வேண்டிய உடைமைகள் பத்திரமாக இருக்கிறதா? ஒட்டப்பட்ட கவர் பிரிந்திருக்கிறதா என்பதை ஆராயவும்.
அப்படி ஏதேனும் இருந்தால், உடனடியாக வங்கிக்குத் தெரியப்படுத்தவும்.
கிரெடிட் அல்லது டெபிட் அட்டைக்கு புதிய பின் எண் உருவாக்கவும். இதற்கு நேரடியாக வங்கியின் ஏடிஎம் மையத்துக்கோ அல்லது வங்கியின் இணையதளத்துக்கோ செல்ல வேண்டும்.
மறக்கக் கூடாது என்பதற்காக 1234, 1111, 2222 என்பது போன்ற எளிதாக யூகிக்கும் பின் எண்களை போட வேண்டாம்.
ஒரு ஏடிஎம் மையத்துக்குள் சென்று பின் எண்ணைப் பதிவு செய்யும்போது, மற்றொரு கையால் அதனை மறைப்பது நல்லது. சிசிடிவி கேமரா வழியாக யாரேனும் நம்மைக் கண்காணிக்கும் அபாயம் உண்டு.
ஒவ்வொருவரும் தங்களது வங்கியில் இருக்கும் செல்போன் எண் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.
அனைத்துப் பணப்பரிமாற்றங்களும் குறுந்தகவல் மூலம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ஏடிஎம்-ல் பணமெடுக்கும்போது, உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இருங்கள். யாரேனும் பின்னால் இருந்து அழைத்தால் உங்கள் வேலையில் கவனம் செலுத்திவிட்டு திரும்பிப் பார்த்து பதில் சொல்லலாம்.
எப்போதும் வங்கியில் பணமெடுக்க வருபவர்களிடம் ஏடிஎம் கார்டை பயன்படுத்த உதவி கேட்கக் கூடாது. ஏடிஎம் மையத்தில் வேலை செய்பவர்களை மட்டுமே உதவி கேட்கலாம்.
பொதுவாக, கிரெடிட் கார்டு வாங்கியதும், அதில், வெளிநாட்டிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை, வெளிநாடு செல்பவராக இருந்தால், நாடு திரும்பியதுமே, வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையை முடக்கி வைக்கலாம்.
ஒருவரது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்கள் பெயரைச் சொல்லி அவர்கள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதாக மோசடியாளர்கள் அழைத்தால், அவர்கள் சொல்லும் நபரை உடனடியாகத் தொடர்புகொண்டு விவரம் அறியவும்.
பணம் சம்பாதிக்க அரிய வாய்ப்பு என்பது போன்று வரும் விளம்பரங்களில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். இவை பெரும்பாலும் ஸ்பேம் செய்தியாக இருக்கலாம்.
இணையதளங்களில் வரும் பொருள்களை பணம் செலுத்தி வாங்குவதற்கு முன்பு, அந்த இணையதளங்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
பொதுவாக பல பணமோசடி மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுக்கும்போதும், மக்கள் கவனக்குறைவாக இருந்து பணத்தை இழக்கும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பதும் ஒவ்வொருவருடைய கடமை. எனவே, இதுபோன்ற முன்னெச்சரிக்கைத் தகவல்களை அனைவரும் கவனத்துடன் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.