இணையவழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் சாதாரண மக்களைக் குறிவைத்தும் பலவகையான மோசடித் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
அந்தவகையில் அரசுத் திட்டங்களின் பெயரில் மக்கள் ஏமாற்றப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அரசும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அரசுத் திட்டங்கள் பெயரில் மோசடி!
முதியோர்களுக்கு, குழந்தைகளுக்கு, பெண்களுக்கு என மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் பல இருக்கின்றன.
இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்புவோரை அறிந்துகொண்டு அவர்களைத் தொடர்புகொண்டு பணம் பறிக்கும் மோசடியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
மோசடி கும்பல், அரசு அதிகாரிகள்போல ஆள்மாறாட்டம் செய்து பெண்களுக்கு உதவித் தொகைகள், முதியோர்களுக்கான உதவித்தொகைகள், நிவாரண நிதிகள், வரி திரும்பப் பெறுதல் என அரசுத் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்குவதாகக் கூறுகிறார்கள்.
முதலில் இந்த சேவைகளை பெறுவதற்கு தனிப்பட்ட விவரங்களைக் கேட்கிறார்கள். ஆதார் எண், வங்கி விவரங்கள் ஆகியவற்றைக் கேட்டுப் பெறுகின்றனர்.
அரசு அதிகாரிகள் என்று தங்களை முழுவதுமாக மக்களை நம்பவைக்க தேவையான ஆவணங்களையும் பயன்படுத்துகின்றனர்.
மக்களும் இதை நம்பி அவர்களிடம் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.
மோசடி கும்பல் இந்த விவரங்களைப் பயன்படுத்தி மக்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தைத் திருடுகிறார்கள். சிலரிடம் குறிப்பிட்ட தொகையை அளித்தால் உங்களுக்கான நிதியுதவி பெற்றுத் தருவதாகவும் கூறி ஏமாற்றுகிறார்கள்.
பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?
1. எந்தவொரு நிதி உதவி வழங்குவதாக வரும் சலுகைகளை அதிகாரப்பூர்வ அரசு வலைத்தளங்கள் அல்லது உள்ளூர் அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சரிபார்க்க வேண்டும்.
2. போன் அழைப்புகள், செய்திகள் அல்லது மின்னஞ்சல்களில் உங்கள் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டால் கண்டிப்பாக பகிர வேண்டாம்.
3. மோசடியாளர்கள் பொதுவாக அவசரநிலையை உருவாக்கி, உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற அழுத்தம் காட்டுகின்றனர். அதனால் உங்கள் விவரங்களைக் கேட்டுப் பெறுவதில் யாரேனும் அவசரம் காட்டினால் கண்டிப்பாக பரிசோதிக்கவும்.
4. அரசின் திட்டங்களில் பயன்பெற வேண்டுமென்றால் சம்மந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகளை தொடர்புகொள்ள வேண்டும் அல்லது இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
5. அதிக தொகை கொண்ட அரசுத் திட்டங்களில்தான் இந்த மோசடி அதிகம் நடக்கிறது. உதாரணமாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி வழங்கும் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா போன்ற மத்திய அரசுத் திட்டங்களில்தான் அதிக மோசடிகள் நடக்கின்றன.
6. அந்த குறிப்பிட்ட தொகையை பெற்றுத்தர வேண்டுமானால் நீங்கள் முன்பணம் வழங்க வேண்டும் என்று கூறி பணத்தைப் பெறுகிறார்கள். அப்படி பணத்தைப் பெற்றவுடன் அவர்கள் தலைமறைவாகிவிடுகிறார்கள்.
7. எனவே அரசுத் திட்டங்களில் பயன்பெற அரசுகள், மக்களிடமிருந்து எந்த முன்பணமும் பெறுவதில்லை. அப்படி யாரேனும் கேட்டால் ஒருபோதும் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
8. மேலும் அரசு இணையதளங்கள் எல்லாமே 'gov.in' என்றுதான் இருக்கும். அரசு சின்னங்கள் இருப்பதை வைத்து வேறு இணையதளங்களை நம்ப வேண்டாம்.
8. அரசு துறை சார்ந்த அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்களின் மூலமாகவும் சரிபார்க்கலாம்.
9. மத்திய, மாநில அரசுகள் தகவல் சரிபார்ப்பு தலங்களையும் வைத்திருக்கின்றன. அதனையும் பயன்படுத்தி உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.
10. ஒருவேளை தெரியாமல் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டால் 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.