முகப்பு
விவாதமேடை

நலத் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு ரூ.1,000, ரூ.2,000, ரூ.5,000, ரூ.10,000 என அரசுப் பணத்தை நேரடியாக வழங்குவது சரிதானா? வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நலத் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு ரூ.1,000, ரூ.2,000, ரூ.5,000, ரூ.10,000 என அரசுப் பணத்தை நேரடியாக வழங்குவது சரிதானா? வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Updated On : 10 மார்ச், 2026 at 9:06 PM
பகிர்:

வாக்குகளைப் பெற...

மக்களுக்கான சில நலத் திட்டங்கள் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர முடியாமல் தொய்வு கண்டுள்ள நிலையில், அந்தத் திட்டங்களில் இந்தத் தொகையைப் பயன்படுத்தினால் அர்த்தமுள்ளதாக்கும் என்பதில் ஐயமில்லை. மாறாக, எவ்வித முன்னறிவிப்பும், முறையான வழிகாட்டுதலும் இன்றி, மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணத்தை வரவு வைப்பது குறுகியகால கண்ணோட்டத்துடன், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக பகிரங்க பணப்பட்டுவாடா என்றே கருதப்படும்; இது சரியானதல்ல!

கே. ராமநாதன், மதுரை.

அதிகரிக்கும் வரிச் சுமை

இலவசங்களை முற்றிலும் தவிர்க்க முன்வராத எந்த அரசாலும் மக்களின் வறுமையை ஒழிக்கவே முடியாது. நலத் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அரசுப் பணத்தை நேரடியாக வழங்குவது சரியல்ல. அது அவர்களை சோம்பேறிகளாகத்தான் மாற்றும். வருவாய் இல்லாமல் அரசின் கஜானாவும் காலியாவதுடன், அதைச் சமாளிக்க மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றும்படியான சூழலும் உருவாகும். அதற்குப் பதிலாக, நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கூடுதல் நாள்கள் வேலை வழங்கலாம்.

ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.

தேர்தல் வெற்றிக்காக...

இன்றைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகள், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் நலத் திட்டங்கள் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கின்றன. ஆட்சியில் உள்ள கட்சிகள் மக்களின் பணத் தேவையை நிறைவு செய்ய மக்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மீனை இலவசமாகக் கொடுப்பதைக் காட்டிலும், மீன் பிடிப்பதற்கான வலையை சலுகை விலையில் கொடுத்து, மீன் பிடிக்கக் கற்று கொடுக்க வேண்டும். மக்களின் தேவைகளை வேலைவாய்ப்பின் மூலம்தான் நிறைவு செய்ய வேண்டும்.

ஸ்ரீராமன், பெங்களூரு.

சட்டப்படி தவறல்ல

நலத் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அரசுப் பணத்தை நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் வழங்குவது மிகச் சரியானது. அதை இந்திய அரசமைப்புச் சட்டமும் ஏற்றுக் கொள்கிறது. ஆனாலும், அது வழங்கப்படும் காலம்தான் பேசுபொருளாகிறது. நான்காண்டுகளில் இல்லாத கோடைகாலம் ஐந்தாவது ஆண்டில் மட்டும் வருவதும், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலமுறை கேட்டும் கிடைக்காத தொகை தற்போது அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதும் இந்த நலத் திட்டங்கள் இயல்பானதுதானா? எனச் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

அரசியல் சாணக்கியம்

ஆட்சிக்கு வந்தவுடன் அல்லது ஆட்சிக்கு வந்து ஓரிரு ஆண்டுகளில் நலத் திட்டங்கள் என்கிற பெயரில் தகுதியானவர்களுக்குப் பணம் கொடுத்தால் அது வாக்களித்த மக்களுக்கு

நன்றியுடன் செய்யும் நல்ல திட்டமாகும். தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பது வாக்குக்கு பணம் கொடுப்பதாகத்தான் கருதப்படும். இது தேர்தலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சம வாய்ப்பை வழங்காது. வாக்காளர்களுக்குக் கட்சி பணம் வழங்காமல் அரசுப் பணத்தைக் கொடுத்து ஏமாற்றும் அரசியல் சாணக்கியம் . இது எந்த விதத்திலும் நியாயம் அல்ல.

சங்கர், சேலம்.

நிதி ஒதுக்கீடு குறையும்

தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் உதவித் திட்டங்கள் அறிவிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இது ஏழை மக்களுக்கு தற்காலிக நிவாரணமாக இருக்கலாம். இவ்வாறு பணம் வழங்குவதால் அடிப்படை வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைய வாய்ப்புள்ளது. உலகத் தரம் வாய்ந்த வசதிகளை உருவாக்க வேண்டிய நிலையில், நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் அபாயமும் உள்ளது. நேரடியாகப் பணம் வழங்குவதற்குப் பதிலாக, தரமான சாலை, தூய்மையான குடிநீர், முறையான வடிகால் அமைப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

ரமேஷ் ராஜேந்திரன்,சேலம்.

சலுகை வழங்கலாம்

நலத் திட்டங்கள் அவசியம்தான். அதற்காக இலவசங்களாக பணத்தைக் கொடுப்பது ஏற்புடையதல்ல. கல்வி, மருத்துவத்துக்கு மட்டுமே பண உதவி அளிக்கலாம். எல்லாமே இலவசமாகக் கிடைக்கிறது என்றால் மக்களின் மனநிலை என்னவாக மாறும்? மாற்றுத் திறனாளிகள், உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற முதியோர், அனாதைக் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கலாம். இலவசமாகப் பணமாக வழங்காமல் சலுகைகளை வழங்கி மக்களை உழைக்கச் செய்யலாம்.

கலைப்பித்தன், கடலூர்.

நிதிச் சுமை அதிகரிக்கும்

பணப் பரிமாற்றத் திட்டங்களால் மக்கள் இனி வேலை செய்வார்களா என உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விதான் நினைவுக்கு வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படுவதே வாக்குகளைப் பெறுவதற்காகவே தவிர, மக்கள் நலனை முதன்மைப்

படுத்தி அல்ல. அவை தற்காலிகமான குறுகிய பலனை மட்டுமே தரும்; அரசுக்கு நிதிச் சுமை அதிகரிக்கும். இதற்கு மாறாக சிறந்த கல்வி, தரமான மருத்துவம், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு, மேம்பட்ட உள்கட்டமைப்பு முதலியவற்றை அரசு நேர்த்தியாக அனைவருக்கும் வழங்குவதே நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.

மூ. கிருத்திகா, திருப்பூர்.

வெளிப்படைத்தன்மை

மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது தொடர்பாக விமர்சிக்கும் எதிர்க்கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் இதுபோன்றதொரு வாக்குறுதியை அளிக்கின்றனர். கல்வி உதவித்தொகை போன்ற நலத் திட்டங்கள் வளர்ச்சிக்கான பாதை என்பது ஏற்கத்தக்கது. மகளிர் உரிமை என்பது தேர்தல் ஆதாயமே. பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் பலருக்கும் அதைப் பெறும் வழிமுறை தெரியாததால் பெற முடியாத நிலையில் உள்ளனர். மகளிர் உரிமை தொகை, அதைப் பெறும் பயனாளிகள் விவரம் வெளிப்படையாக இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆ. லியோன், மறைமலைநகர்.

மிகச் சரியானதே

நலத் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அரசுப் பணத்தை நேரடியாக வழங்குவது சரியானதே. கடந்த காலங்களில் மக்களிடம் சேமிப்பு இருந்தது; தற்போது பொருளாதார ரீதியாக மக்கள் நலிவடைந்து உள்ளனர். மக்களின் இத்தகைய நிலைக்கு, அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் அடுத்தடுத்து வகைப்படுத்த இயலாத இடர்ப்பாடுகள் காரணமாக அமைந்துள்ளன. எனவே, பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைப்பது என்பது சரியானதே.

ந. கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

விமர்சனம் வேண்டாம்

மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் நலத் திட்டங்கள் என்கிற பெயரில் அரசு மக்களுக்கு வங்கிகள் மூலம் பணம் வழங்கினால் ஏழைகள், குறைந்த வருவாய்ப் பிரிவினரின் உடனடித் தேவைகளை நிறைவு செய்ய உதவும். இது ஒரு தற்காலிக நடவடிக்கையே. ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் உதவும். அரசு வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு பணம் வழங்குவதால் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. இதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.

கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

வாக்கு வங்கி அரசியல்

நலத் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அரசுப் பணத்தை நேரடியாக வழங்குவது சரியா என்ற கேள்வி நியாயமானதுதான். மக்களுக்கு உழைப்பையும் உழைப்பின் மூலம் வாழக்கூடிய பொருளாதார முன்னேற்றத்தையும் உருவாக்கித்தர வேண்டும். ஆனால், இங்கு வாக்கு வங்கி அரசியல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிலையில்தான் உள்ளது. மக்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து சிந்திக்காத அரசியல்வாதிகள் இருக்கும்வரை இதுபோன்ற நலத் திட்டங்கள் தொடரத்தான் செய்யும்.

மா. பழனி, கூத்தப்பாடி.

ஏற்புடையதல்ல

நலத் திட்டம், பரிசு, கோடை சிறப்பு முன்பணம் போன்ற பல பெயர்களில் பல லட்சம் கோடிகளை நேரடியாக மக்களுக்கு வழங்குவது முற்றிலும் தவறானது. இவ்வாறு வழங்குவது சமூகத்தை முற்றிலும் சோம்பேறியாக்கும். நாட்டு நலன் கருதி இது போன்ற திட்டங்களைக் கைவிடுதலே சிறப்பு. செயல்திறன்மிக்க தொழில் முனைவோர்களாக மக்களை உருவாக்க அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரம் கோடி நிதிப் பற்றாக்குறையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வேளையில் பணத்தை நேரடியாக மக்களுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல.

வீ. வேணுகுமார், கண்ணமங்கலம்.

அரசின் சாதனையே

முந்தைய ஆட்சிக் காலங்களில் மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை பொருள்களாக வழங்கியதில் பல முறைகேடுகளும், வழங்கப்பட்ட பொருள்களும் தரமற்றதாய் இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து அந்தத் திட்டங்கள் தோல்வியில் முடிந்தன. தற்போது, நலத் திட்ட உதவிகள் அனைத்தும் வங்கியில் பணமாக வரவு வைக்கப்படுவதால் எந்த முறைகேட்டுக்கும் வழியில்லாமல் போய்விட்டது. அண்மையில் மகளிர் உரிமைத் தொகையாக அரசுப் பணத்தை ஒரே நேரத்தில் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை அரசின் சாதனை என்றுதான் கூற வேண்டும். வருங்காலங்களிலும் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே மக்களைச் சென்றடைய வேண்டும்.

ஐ. ரஃபீக், திருச்சி.

முழு கட்டுரையைப் படிக்க →