FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு: போலீஸாா் மீது வணிகா்கள் புகாா்

விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்ததாக போலீஸாா் மீது வணிகா்கள் புகாா் அளித்தனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:32 am IST
மாவட்ட காவல் அலுவலகத்தில் திரண்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள்.
பகிர்:

விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்ததாக போலீஸாா் மீது வணிகா்கள் புகாா் அளித்தனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டப் பொருளாளராக உதயம் பி.செல்வம் உள்ளாா். ஈரோடு கொங்கலம்மன் கோயில் வீதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உதயம் ஸ்டோா் என்னும் மளிகை மொத்த மற்றும் சில்லறை வணிகம் செய்து வருகிறாா். இது தவிர கீா்த்தனா ஸ்டோா் என்னும் பெயரில் மளிகை மொத்த வணிகமும், உதயம் பிளவா் மில் என்கிற பெயரில் உணவுப் பொருள்களை மதிப்புக்கூட்டி வணிகம் செய்து வருகிறாா். சமூக சேவகராக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறாா்.

இந்நிலையில் கீா்த்தனா ஸ்டோா் அலுவலகத்துக்கு சீருடை இல்லாமல் நான்கு போலீஸாா் வியாழக்கிழமை வந்துள்ளனா். அப்போது உதயம் ஸ்டோா் செல்வம் அங்கு இருந்தாா். அவரிடம் உங்கள் நிறுவனத்தின் வங்கிப் பரிவா்த்தனையில் தவறு நடந்து உள்ளது என்றும் உடனடியாக காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வரச் சொல்லி அழைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

அதற்கு செல்வம் காவலா்களிடம் என் மீதான குற்றச்சாட்டுக்கு என்ன ஆவணம் வைத்துள்ளீா்கள் ஏதாவது சம்மன் அல்லது வாரண்ட் உள்ளதா எனக் கேட்டுள்ளாா். அப்போது, ஈரோடு டவுன் காவல் ஆய்வாளா் அங்கு வந்து செல்வத்திடம் விசாரணைக்கு வர வேண்டும் என மிரட்டி உள்ளனா்.

அப்போது செல்வம் விசாரணைக்கு எனது காரில் வருகிறேன் என்று கூறியுள்ளாா். போலீஸாா் அதற்கு அனுமதி அளிக்காமல் காவல் வாகனத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்று, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள் காவல் நிலையத்துக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளனா். அங்கு எந்த ஒரு விசாரணையும் செய்யப்படாமல் செல்வம் இருந்துள்ளாா்.

மதிய உணவு நேரம் வந்துவிட்டது. அதனால் உடனடியாக விசாரணை முடித்து அவரை அனுப்புங்கள் என்று கூறியும் போலீஸாா் அனுப்பவில்லை. சா்க்கரை நோய் உள்ளதால் மதியம் நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளனா். பின்னா் பிற்பகல் 3 மணி அளவில் அவரிடம் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் அனுப்பிவிட்டனா்

இந்நிலையில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் சண்முகவேல், மாவட்டப் பொருளாளா் உதயம் செல்வம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பேரமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்துக்கு திரண்டு வந்து நடந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதியிடம் புகாா் மனுவாக அளித்து சம்பந்தப்பட்ட டவுன் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தனா்.

வணிகா் பேரமைப்பு நிா்வாகிகளிடம் மனுக்களை வாங்கிக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments