இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் என்றாலே அதுவும் தங்களது ஊர்களில் போட்டிகள் நடைபெறும்போது, அதனை நேரில் சென்று காண வேண்டும் என்ற ஆவல் அதிகரிப்பது வழக்கம்.
அதுபோன்ற வேளைகளில், கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் பல நூறுகள் வரை விற்பனையாகி வரும். அதனை வாங்க, விளையாட்டரங்கில் மிகப்பெரிய வரிசை நிற்கும். பல மணி நேரம் காத்திருந்தும் கூட, டிக்கெட் பெற முடியாமல் ஏமாற்றமடையும் ரசிகர்களும் அதிகம்.
ஆனால், இதெல்லாம் ஒரு ஏமாற்றமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, கிரிக்கெட் போட்டியைக் காண விரும்பும் இளைஞர்களை இலக்காக வைத்து நடத்தப்படுவதுதான் ஆன்லைன் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை மோசடி.
சமூக வலைத்தளம் மூலம் வலை!
மோசடியாளர்கள், சமூக ஊடகங்களில் சலுகை விலையில் ஐபிஎல் அல்லது ஏதேனும் ஒரு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்துகிறார்கள்.
ஏற்கனவே, நண்பர்களுடன் சேர்ந்து டிக்கெட் எடுக்க திட்டமிடுபவர்கள், சலுகை விலையில் டிக்கெட் என்ற விளம்பரத்தைப் பார்த்ததும், முன்பின் தெரியாதவர்கள் நமக்கு எதற்காக சலுகை விலையில் டிக்கெட் விற்பனை செய்கிறார்கள் என்றெல்லாம் யோசிப்பதில்லை.
விளம்பரத்தைப் பார்த்து அதிலிருக்கும் தொடர்பு எண்ணில், டிக்கெட் வாங்குவதற்காக மோசடியாளரை தொடர்புகொள்கிறார்கள் இளைஞர்கள். மோசடியாளர்களும், உண்மையில் டிக்கெட் விற்பவர் போலவே பேசுவார்கள். பல்வேறு விலைகளில் இருக்கும் டிக்கெட் விலை, சலுகை விவரங்களை மிக அழகாக விவரிப்பார்கள். குறைந்த அளவே டிக்கெட் இருப்பதாக தூண்டில் போடுவார்கள்.
இதைக் கேட்கும் இளைஞர்கள், அனைத்தும் உண்மை என்று நம்பி, அவர்களுக்கு டிக்கெட்டுக்கான கட்டணத்தை அவர்கள் சொல்லும் வழியைப் பின்பற்றி அனுப்புவார்கள். அவ்வளவுதான், அதன் பிறகு அந்த மோசடியாளரை தொடர்புகொள்ள முடியாது. போன பணம் போனதுதான். பணத்தையும், டிக்கெட்டையும் இழந்து விடுகிறார்கள் இளைஞர்கள்.
உண்மை என்ன?
ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்றால், அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் மட்டுமே டிக்கெட் விற்கப்படும்.
இவ்வாறு தனிநபர்கள் யாரும் டிக்கெட் வாங்கி அதனை சலுகை விலையில் விற்பதுமில்லை, விற்கவும் முடியாது.
என்ன செய்ய வேண்டும்?
1. டிக்கெட்டுகளை வாங்குவதற்கு முன், அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது நம்பகமான தளங்கள் மூலம் விற்பனையாளர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும்.
2. சமூக வலைத்தளங்களில் வரும் எந்தவொரு விளம்பரத்தையும் முதலில் அப்படியே நம்பக்கூடாது.
3. அறிமுகமில்லாத விற்பனையாளர்களிடமிருந்து சலுகை விலையில் டிக்கெட்டுகள் வாங்குவது குறித்த விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
4. எப்போதும் ஒருவர் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நம்பகமான செயலிகளை மட்டும் பயன்படுத்தவும்.
5. எந்தவொரு மோசடிக்கு இலக்கானாலும், உடனடியாக அது தொடர்பாக புகார் அளிப்பது அவசியம்.
சைபர் குற்றத்துக்கு இலக்காக வேண்டாம், அழையுங்கள் உதவி எண் 1930.
இதுபோன்ற சைபர் மோசடி குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.