லாட்டரி அல்லது பரிசு விழுந்துள்ளதாக குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வரும். பல லட்சம் அல்லதுபல ஆயிரம் ரூபாய் உங்களுக்கு பரிசு விழுந்திருப்பதாக தகவல் வந்தால் யாருக்குத்தான் ஆசை வராது. அந்த ஆசைதான் இந்த மோசடியாளர்களுக்கு அறுவடையாகிறது.
எந்த லாட்டரியும் வாங்கவில்லையே, நமக்கு எப்படி லாட்டரி விழும், எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லையே, எப்படி பரிசு கிடைக்கும் என்றெல்லாம் கொஞ்சம் கூட யோசிப்பதில்லை.
அது மட்டுமா, கேரள லாட்டரியில் பரிசுத் தொகை விழுந்த லாட்டரி இருப்பதாகவும் அது விற்பனைக்கு வந்திருப்பதாகவும் கூட விளம்பரங்கள் வருவதுண்டு. இதனைப் பார்த்தும் பணம் செலுத்தி ஏமாறுபவர்களும் உண்டாம்.
சரி, பரிசுதானே விழுந்திருக்கிறது, இதில் எப்படி ஏமாற்ற முடியும் என்று கேட்டால், அந்த லட்சக்கணக்கான பரிசுத் தொகையை ஏமாறவிருப்பவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும் என்றால், அதற்கான செயல்பாட்டுக் கட்டணம் என்று ஒரு சில ஆயிரங்களை மோசடியாளர்கள் கட்டச் சொல்வார்கள்.
பெரிய தொகை வருகிறதே என்றெண்ணி, ஒரு சிறிய தொகையை மோசடியாளரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினால் போதும், அடுத்த அந்த மோசடியாளர் தலைமறைவாகிவிடுவார். அல்லது, கேட்டதும் பணம் வருகிறதே, ஆளு நல்ல பணம் உள்ளவர் போல என நினைத்து, பரிசுப் பணம் ஏதோ ஒரு விசாரணை அமைப்பிடம் மாட்டிக்கொண்டதாகவும் அங்கிருந்து விடுவிக்க மேலும் சில ஆயிரங்கள் தேவைப்படுவதாகவும் கூறுவார்கள்.
இப்போதாவது விழித்துக் கொண்டால் பரவாயில்லை. ஆனால், அப்போதும் நம்பி பணம் அனுப்புபவர்களும், அனுப்பி ஏமாந்தவர்களும் உண்டுதான். சிலர், இப்படியே தொடர்ச்சியாக மோசடியாளர்கள் கூறும் ஆசை வார்த்தையை நம்பி அடுத்தடுத்து பணம் அனுப்பி கடைசியாகத்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதையே உணர்கிறார்கள்.
என்னவெல்லாம் சொல்வார்கள்?
லாட்டரியில் பல லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது.
ஒரு லட்சம் பேருக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் அதில் நீங்களும் ஒருவர் என்பார்கள்.
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதப் பணம் வங்கிக் கணக்குக்கு வந்திருப்பதாகவும், அதனை வரவு வைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.
ஏதோ ஒரு பொருளை வாங்கியதற்காக பரிசு விழுந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.
எதற்கு கட்டணம்?
வந்தப் பணம் வங்கிக் கணக்கில் சேர செயல்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். அது செலுத்தப்பட்டால்,
வெளிநாட்டிலிருந்து வந்ததால், அதற்கான வரி கட்ட வேண்டும்.
அதையும் கட்டி முடித்தால், பணம் விசாரணை அமைப்பில் சிக்கிவிட்டது. அவர்களுக்கு இவ்வளவு தொகை கட்டிவிட்டால் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும் என படிப்படியாக ஏமாற்றுகிறார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
பரிசு விழுந்திருப்பதாக வரும் எந்த எஸ்எம்எஸ், மின்னஞ்சலையும் திறக்க வேண்டாம். அது நிச்சயம் மோசடி.
லாட்டரி அல்லது பரிசு விழுந்திருப்பதாக வந்த தகவலை படித்துவிட்டீர்கள். அடுத்து அதற்கு எக்காரணம் கொண்டும் பதிலளிக்க வேண்டாம்.
உங்கள் வங்கிக் கணக்குக்கு இத்தனை லட்சம் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று எஸ்எம்எஸ் வந்தால்.. திறக்க வேண்டாம்.
மின்னஞ்சல் மற்றும் செல்போனில் உரிய ஸ்பாம் ஃபில்டர்களை வைத்திருக்கவும்.
பெரிய தொகை வருகிறது என்பதற்காக, முன்பின் தெரியாதவர்களுக்கு ஒரு சிறு தொகையைக் கூட அனுப்ப வேண்டாம். அந்த பெரிய தொகை ஒருபோதும் வரப்போவதில்லை.
இதையும் படிக்க... அழைப்பு அனுப்புதல் மோசடி! இப்படியும் ஒரு மோசடியா? மக்களே எச்சரிக்கை!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.