நாட்டில் பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. தீபாவளியை முன்னிட்டு ஆடை, ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
மற்றொரு பக்கம், வீட்டில் இருந்துகொண்டே பலரும் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள்.
ஆடைகள், செல்போன் என லட்சக்கணக்கிலான பொருள்கள் மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு, வீட்டு வாசலிலேயே பெற்றுக் கொள்கிறார்கள். பண்டிகைக் காலத்தில் அதிகப்படியான பணப்பரிமாற்றங்களும் நடைபெறுகிறது என்பதால், இதனை மோசடியாளர்கள் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவார்கள்.
அதாவது, வீட்டு உபயோகப் பொருள்கள் மிகப்பெரிய தள்ளுபடி விலையில் விற்பனை என இணையதள லிங்குகள் அல்லது செயலிகளுக்கு விளம்பரங்கள் வரும், அதனை உண்மை என நம்பி லிங்குகளை தொட்டால், பண மோசடி நடக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கிறது.
சைபர் மோசடியாளர்கள், செய்யறிவைப் பயன்படுத்தி, உண்மையான வணிக நிறுவனங்களின் தகவல்களைப் போல உருவாக்கி, மக்களை ஏமாற்றும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப்பரிமாற்ற மோசடி முதல், க்யூஆர் குறியீடு மற்றும் யுபிஐ பணப்பரிமாற்ற மோசடிகளும் நடந்தேறும் என்று கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் மட்டும் பொருள்கள் வாங்குங்கள்.
எஸ்எம்எஸ், மின்னஞ்சல், ஃபார்வேர்டு செய்யப்படும் செய்திகளில் வரும் லிங்குகள் மூலம் ஒருபோதும் பொருள்கள் வாங்க வேண்டாம்.
ஒரு இணையதளத்துக்குள் சென்றால், அங்கிருந்து மட்டும் பணப்பரிமாற்றம் செய்யுங்கள். வெளியிலிருந்து வரும் லிங்குகளில் பணம் செலுத்த வேண்டாம்.
பரிசுக் கூப்பன், ரொக்கம் திரும்ப கிடைக்கும், குலுக்கல் பரிசுகள் என வரும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டாம்.
திடீரென உங்களுக்கு ஏதேனும் ஓடிபி வந்தால் உடனடியாக வங்கி அல்லது சைபர் பிரிவுக்குத் தகவல் கொடுப்பது நல்லது.
ஏதேனும் தொலைபேசி அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் பார்த்து அவசரமாக எந்தப் பணப்பரிமாற்றத்துக்கும் முயல வேண்டாம். சற்று அமைதியான பிறகு தெளிவாக எதையும் செய்ய வேண்டும்.
கூகுளில் சென்று ஏதேனும் இணையதளத்தை அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை தேடும்போது சில வேளைகளில் தவறான மோசடியான இணையதளங்களும் கிடைக்கப்பெறலாம். எனவே பாதுகாப்பான இணையதளமா என்பதை உறுதி செய்துகொண்டு உள் நுழையவும்.
புதிதாக இணையதளங்களில் வரும் விளம்பரத்தைப் பார்த்து, அதற்குள் சென்று பொருள்கள் வாங்க வேண்டாம்.
தீபாவளியை தீப ஒளியுடன் கொண்டாடுவோம். தீராத மன வலியுடன் கொண்டாட வேண்டாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.