வெளிநாட்டு வேலை, நல்ல சம்பளம் என்று கூறி பல்வேறு நாடுகளுக்கு சைபர் அடிமைகளாக மனிதர்கள் விற்கப்படும் கொடூர மோசடிகள் உலகளவில் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தான மோசடியாகும்.
வெளிநாட்டு வேலை என்றாலே பெரும்பாலானோருக்கு ஒரு எதிர்பார்ப்பும் ஆசையும் இருக்கிறது. சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஓரளவு சம்பாதித்துவிட்டு சொந்த நாட்டிற்கு வந்து ஏதேனும் வணிகம் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்றே பலரும் திட்டமிடுகின்றனர்.
ஒவ்வொரு நாடுகளுக்கும் செல்ல ஒவ்வொரு பகுதிகளிலும் முகவர்கள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என்று செல்வதற்கான விசா உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்கின்றனர். இதற்காக வேலை தேடுவோரிடம் ஒரு குறிப்பிட்ட பணத்தைப் பெறுகின்றனர். இது சாதாரணமாக நடப்பது.
ஆனால் இப்போதெல்லாம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சீன நிறுவனங்களுக்கு மனிதர்களை விற்பனை செய்கிறார்கள்.
சமீபத்தில்கூட மகாராஷ்டிரத்தில் நடைபெற இருந்த ஒரு மோசடியை சைபர் குற்றப்பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சைபர் அடிமைத்தனம் மோசடி என்பது இணையத்தில் நபர்களை போலி வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மூலம் ஏமாற்றுவதைக் குறிக்கும். இந்த மோசடிகள் சீக்கிரத்தில் அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்பு என்ற வாக்குறுதியை அளிக்கின்றன. வேலை தேடுவோர், இதற்கு ஒப்புக்கொண்டவுடன் விசா செயலாக்கம், பயணச் செலவுகள் அல்லது பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றை முன்கூட்டியே செலுத்தும்படி கேட்கின்றனர். பாதிக்கப்பட்டவர் பணியிடத்திற்கு வந்த பிறகு அவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
அதாவது வெளிநாட்டில் கால்சென்டரில் வேலை, நல்ல சம்பளம் என்று கூறி ஏமாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விடுகிறார்கள். அங்கு அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். பெரும்பாலும் தவறான செயல்களுக்காக பயன்படுத்தப்படுகின்றனர்.
இந்தியப் பெண்களின் பெயர்களில் போலியான பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி பிறருடன் பேசி பணத்தை அபகரிக்கவும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுடன் ஆன்லைன் மூலமாக நட்புறவை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் மோசடித் திட்டங்களில் அவர்கள் பணத்தை முதலீடு செய்ய வைக்கவும் இந்த சைபர் அடிமையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்கள் மூலமாகவோ பல்வேறு செயலிகள் மூலமாக நண்பர்களை ஏற்படுத்தி பின்னர் அவர்களை முதலீடு செய்யச் சொல்லி ஏமாற்றுவது என இதில் ஒவ்வொரு நபருக்கு ஏற்ப அனைத்து வகை மோசடிகளும் நடக்கின்றன.
சைபர் அடிமைகள் முழுவதும் அந்த சைபர் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். அவர்கள் சொல்லும் வேலையைச் செய்யவில்லை என்றால் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகின்றனர். யாரையும் தொடர்புகொள்ள அனுமதிக்காதது, பாஸ்போர்ட் தர மறுப்பது என கடுமையான விளைவுகளைச் சந்திக்கிறார்கள். பெண்களாக இருந்தால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
வெளிநாடுகளில் இதுபோன்று சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு வழிகள் என்ன?
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் தன்மையை எப்போதும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். முகவர்கள் நம்பக்கூடியவர்கள்தானா என்பதை சோதித்துக்கொள்ளவும்.
நீங்கள் எந்த நாட்டுக்குச் செல்கிறீர்களா அந்த நிறுவனத்துடன் தொடர்புகொண்டு பேசுவது உங்களுக்கு தெளிவைக் கொடுக்கும். அந்த நிறுவனம் குறித்த தகவல்களையும் கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்.
ஒரு வேலைக்கு நீங்கள் பயிற்சி அல்லது பதிவுக் கட்டணத்தை அதிக தொகையாக முன்கூட்டியே செலுத்த வேண்டியிருந்தால் அது ஒரு மோசடியாக இருக்கலாம்.
அதிக சம்பளம் என பல ஆஃபர்களை வழங்கினால் கவனமாக இருக்கவும்.
தெளிவற்ற வேலை விவரங்கள் அல்லது விரைவாகச் செயல்படுவதற்கான அழுத்தம் இருந்தால் தவிர்த்துவிடுங்கள்.
நன்கு அறியப்பட்ட மற்றும் நம்பகமான வேலைவாய்ப்புத் தளங்கள் அல்லது ஏஜென்சிகள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவும்.
ஒவ்வொரு நாடும் சர்வதேச ஒத்துழைப்பு மூலமாக இதுபோன்று மோசடி நிறுவனங்களில் சிக்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இது தொடர்பாக மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள்.
ஒருவேளை யாரேனும் இந்த மோசடி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டால் காவல்துறைக்கு அல்லது அந்த நாட்டில் உள்ள தூதரகத்தில் தகவல் தெரிவிக்கலாம்.
இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.