கையில் அவ்வப்போது சில்லறையாக புழங்கும் ஒரு ரூபாய் நாணயத்தின் தயாரிப்பு செலவு, அதன் மதிப்பை விட அதிகம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதுபோல, ரூ.2,000 நோட்டுகளை அச்சிட ரூ.4 செலவானதாகவும் கூறப்படுகிறது.
இந்திய ரூபாய்கள், நோட்டுகளாகவும் நாணயங்களாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. நோட்டுகள் அச்சிடுவதற்கான செலவு குறைவு என்றாலும் அதன் ஆயுள் காலமும் குறைவுதான். ஆனால் நாணயங்கள் தயாரிப்புக்கான செலவு அதன் மதிப்பைக் காட்டிலும் அதிகம் என்றாலும் பல ஆண்டுகளுக்கு அது பயன்பாட்டில் இருக்கும்.
கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்பிஐ முன் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்க ஒரு ரூபாய் 11 காசுகள் (ரூ.1.11) செலவாகிறது என்று தெரிவித்திருந்தது. நிச்சயம் இந்த செலவினம் தற்போது அதிகரித்துதான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதுபோலவே, 2 ரூபாய் நாணயத்துக்கு ரூ.1.28 காசுகளும், ரூ.5 நாணயம் தயாரிக்க ரூ.3.69 காசுகளும் ரூ.10 நாணயம் தயாரிக்க ரூ.5.54 காசுகளும் செலவானதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாணயங்களின் தயாரிப்பு செலவுகளை அறிந்து கொண்டோம். ரூபாய் நோட்டுகளை அதாவது 1,000 நோட்டுகளை அச்சிட ஆகும் செலவு எவ்வளவு என்றால் ரூ.10 நோட்டு அச்சிட ரூ.960ம், ரூ.100 அச்சிட ரூ.1770ம், ரூ.200 அச்சிட ரூ.2,370ம் ரூ.500 நோட்டுகளை அச்சிட ரூ.2,290ம் செலவாகிறதாம்.
அதாவது, ரூ.50 நோட்டு ஒன்றை அச்சிட ரூ.1.11ம், ரூ.100 நோட்டு ஒன்றை அச்சிட ரூ.1.77 காசுகளும் ரூ.500 நோட்டு ஒன்றுக்கு ரூ.2.29 காசுகளும் செலவாகிறது.
இதைவிட சுவாரசிய தகவல் என்னவென்றால், ஒரு ரூ.2000 நோட்டு அச்சிட ரூ.4 செலவாகியிருக்கிறது.
இந்த செலவினம் என்பது கச்சா பொருள்களின் மதிப்பு, இயந்திரங்களின் இயக்கும் செலவினம், தொழிலாளர்கள் ஊதியம், ஆலைகளுக்கான செலவினங்களையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது.
ஏன் மதிப்பை விட தயாரிப்பு செலவு அதிகம்?
துருப்பிடிக்காத எஃகு கொண்டு ஒரு ரூபாய் உள்ளிட்ட சில நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் விட்டம் 21.93 மி.மீ. தடிமன் 1.45 மி.மீ. எடை 3.76 கிராம். மத்திய அரசின் காசு தயாரிப்பு ஆலைகள் மும்பை மற்றும் ஹைதராபாத்துகளில் இயங்கி வருகின்றன. இந்த செலவினக் கணக்குகளை ஹைதராபாத் நாணயச்சாலை வெளியிட்ட நிலையில், மும்பை நாணயச்சாலை 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(டி) இன் கீழ் ரகசியம் காக்கப்பட வேண்டிய தரவுகள் என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டிருந்தது.
ரூபாய் நோட்டுகள், நாணயங்களை தயாரிப்பது யார் ?
ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை தயாரிப்பதில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பங்குண்டு. நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சிடும். ரூ.2 முதல் ரூ.500 வரையிலான நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிடும். முன்பு, புழக்கத்தில் இருந்த வரை ரூ.2000 நோட்டுகளையும் ஆர்பிஐ ஆச்சிட்டு வந்தது.
இந்திய பொருளாதாரத்தில் தற்போதைக்கு பணமும் நாணயங்களும் அத்தியாவசியம் என்பதால், மதிப்பை விடவும் செலவினம் அதிகமாக இருந்தாலும் அதனை உற்பத்தி செய்ய வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.