முகப்பு
தினமணி கதிர்

அந்த நாள்: கூவம் நதிக்கரையில் நடந்த புத்தகக் கண்காட்சி!

தமிழ்நாட்டில் முக்கியமான நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுவது இப்போது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிகளின்போதும் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் 57 ஆண்டுகளுக்கு முன்பாகவே புத்தகக் கண்க

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:05 PM
பகிர்:

மிழ்நாட்டில் முக்கியமான நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுவது இப்போது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிகளின்போதும் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் 57 ஆண்டுகளுக்கு முன்பாகவே புத்தகக் கண்காட்சியை நடத்தியிருக்கிறது என்சிபிஎச் நிறுவனம். பட்டிதொட்டிகளில் எல்லாம் வேன்களின் மூலமாகப் புத்தக விற்பனை செய்திருக்கிறார்கள்.

என்சிபிஎச் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.ராதாகிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்துப் பேசினோம். 85 வயதாகும் ராதாகிருஷ்ணமூர்த்தி தனது பழைய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 



முதன்முதலில் புத்தகக் கண்காட்சியை நடத்திய அனுபவம் பற்றி?

என்சிபிஎச் 1951 இல் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் புத்தகங்களைத்தான் அதிக விற்பனை செய்தோம். அதிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகம். புத்தகங்களைத் தெருதெருவாக எடுத்துக் கொண்டு போய் விற்பனை செய்வோம். சோவியத் புத்தகங்கள் விலை மிகவும் குறைவு. தமிழ் எழுத்து, ஆங்கில எழுத்துப் புத்தகங்களின் விலை ரூ.1 தான்.

முதன்முதலில் 1951 ஆம் ஆண்டு சென்னையில் மூர்மார்கெட் அருகே உள்ள பூங்காவிற்குப் பின்புறம் ரேக்ளா ரேஸ் நடக்கும். அந்த இடத்தில் கூவம் நதிக்கரையில் புத்தகக் கண்காட்சியை நடத்தினோம். நிறைய கொசு இருக்கும். மக்கள் ஆர்வமாக வந்து புத்தகங்கள் வாங்கினார்கள். அப்போது வேறு பதிப்பாளர்கள் யாரும் புத்தகக் கண்காட்சியை நடத்தவில்லை.

அதுதவிர தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் முக்கியக் கண்காட்சிகளை நடத்தினோம். சிறிய ஊர்களிலும், நகரங்களிலும் கொட்டகை போட்டு கண்காட்சி நடத்தினோம். தமிழ்நாட்டில் ஓர் இடத்தைக் கூட விட்டு வைக்கவில்லை.

தமிழ்நாட்டில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது, அறிவு வளர்ச்சியைப் பரவலாக்குவது இதுதான் எங்களுடைய நோக்கமாக இருந்தது.

"நமது படைப்பு மட்டுமல்ல, உலகத்தின் நல்ல இலக்கியங்கள் எல்லாம் நமது சொத்து' என்ற அடிப்படையில் எங்கள் பதிப்பகத்தின் வெளியீடுகள் அமைந்து இருந்தன.

புத்தக விற்பனையில் வேறு என்ன முயற்சிகள்?

சென்னை அண்ணாசாலையில் புத்தக விற்பனை நிலையம் திறந்தோம். சென்னை மட்டுமல்ல மதுரை, கோவை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, சேலம், ஓசூர் எனத் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் எல்லாம் ஷோ ரூம்கள் திறந்தோம்.

வேன் மூலமாகப் புத்தகங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்வதை 1974 இல் ஆரம்பித்தோம். அந்த வேனுக்கு "பாரதி நடமாடும் புத்தக விற்பனை நிலையம்' என்று பெயர் வைத்தோம். அந்தப் பெயரைச் சொன்னவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அதற்குப் பின் "பாவேந்தர் பாரதிதாசன் நடமாடும் புத்தக விற்பனை நிலையம்' என்கிற பெயரிலும் நடமாடும் புத்தக விற்பனை நிலையங்களை அமைத்தோம்.

பதிப்பு முயற்சிகளைப் பற்றி?

சோவியத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின் அந்நாட்டு வெளியீடுகளை விற்பனை செய்வது குறைந்துவிட்டது. 1990 இலிருந்து எங்களுடைய பதிப்பக வெளியீடுகள் வர ஆரம்பித்தன. இதுவரை 3000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. பதிப்பகத்தின் வைரவிழா 2010 இல் வரவிருக்கிறது. அதற்குள் இன்னும் 2000 புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று நினைத்திருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே விற்பனை செய்த சோவியத் புத்தகங்களை மறுபதிப்புக் கொண்டு வரவிருக்கிறோம்.

பிற பதிப்பக நூற்களை விற்பனை செய்கிறீர்களே?

பதிப்பகத்தில் இடதுசாரி புத்தகங்களைப் பதிப்பிப்போம். ஆனால் விற்பனை என்று வருகிற போது மக்களுக்குத் தேவையான எல்லாப் புத்தகங்களையும் விற்பனை செய்வோம். உதாரணமாக, ராஜாஜியின் "வியாசர் விருந்து' புத்தகத்தை 10 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்திருக்கிறோம்.

இன்னும் சொல்லப் போனால் நாங்கள் அடுத்து வெளியிட உள்ள புத்தகங்களே செவ்வியல் இலக்கியங்கள்தாம்.

செவ்வியல் இலக்கியங்களைப் பாதுகாப்பது மிக அவசியம்.

புதிய முயற்சிகள்?

சீனப் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறோம். சீனாவில் வெளியிடப்பட்டுள்ள ஆங்கிலப் புத்தகங்களை விற்பனை செய்வோம். அவற்றைத் தமிழாக்கிப் பதிப்பிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.