முகப்பு
தினமணி கதிர்

வேலைவாய்ப்பு: படித்தால் மட்டும் போதாது!

முதலில் எல்லாம் மாணவர்கள் 60 சதம் மதிப்பெண்கள் எடுப்பதே பெரிய விஷயம். இப்போது மாணவர்கள் சர்வசாதாரணமாக 80 சதம், 90 சதம் என்று மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கிறார்கள். இப்படி எல்லாரும் மதிப்பெண்களை அதிகமாக

Updated On : 20 செப்டம்பர், 2012 at 3:21 PM
பகிர்:

முதலில் எல்லாம் மாணவர்கள் 60 சதம் மதிப்பெண்கள் எடுப்பதே பெரிய விஷயம். இப்போது மாணவர்கள் சர்வசாதாரணமாக 80 சதம், 90 சதம் என்று மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கிறார்கள். இப்படி எல்லாரும் மதிப்பெண்களை அதிகமாக எடுத்துவிட்டால் யாருக்குத்தான் வேலை கொடுப்பது?

""படிப்பைத் தவிர வேறு பல திறமைகளும் மாணவர்களுக்குத் தேவை'' என்கிறார் தாரா கணேசன். வினாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் "அறுபடைவீடு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் 'டீனாகப் பணிபுரிகிறார் தாரா கணேசன்.

தாரா கணேசன் ஒரு கவிஞரும் கூட. நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்கிறார்.

Advertisement

உலகம் முழுவதும் இணையதளத்தில் தமிழ் கோலோச்சி வரும் இக்காலத்தில் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தகங்களைப் பற்றியும்,நவீன தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக "சிக்கி முக்கி.காம்' என்ற இணைய தளத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். தமிழின் முன்னணி இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகள் அந்த இணையதளத்தில் வெளிவருகின்றன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக சமீப ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. பெரிய ஐடி நிறுவனங்கள் 2008 ஆம் ஆண்டில் நடத்திய கேம்பஸ் இண்டர்வியூவில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்னும் வேலை கொடுக்காமல் இருக்கின்றன.  அவ்வாறு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலையில் சேராமல் வீட்டில் இருக்கும் மாணவர்கள் மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஆனால் சமீபத்தில் எடுத்த ஓர் ஆய்வின்படி வரும்

4 ஆண்டுகளில் சுமார் 6 கோடி வேலைவாய்ப்புகள் தகவல் தொழில் நுட்பத்துறையில் உருவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். எனவே இனி வரும் காலங்களில் ஐடி தொழில்நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கப் போகிறது. இப்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அந்த வேலை வாய்ப்பைக் கைப்பற்றிக் கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது எல்லாருமே 80-90 சதவீதம் மதிப்பெண்களை எடுத்துவிடுகிறார்கள். எனவே அதிக மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும் இப்போது வேலை கிடைக்காது. ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் தகுதியை மாணவர்கள் படிக்கும்போதே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக வைக்கும் திறனறி  தேர்வில்  மாணவர்கள் வெற்றி பெற வேண்டும். ஸôப்ட் ஸ்கில்ஸ் என்று சொல்லப்படுகிற திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் படிக்கிற மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சி, சி++, டாட்.நெட், ஜாவா, அட்வான்ஸ் ஜாவா, வெப் டெவலப்மென்ட், சன் மைக்ரோ ஸôப்ட் ஷர்டிபிகேஷன் என்று வெவ்வேறு பகுதிகளில் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வழக்கமான கல்லூரிப் படிப்புகளுடன் கூடவே இவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே இவற்றைக் கற்றுக் கொண்டால் இறுதியாண்டில் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் எளிதாக வெற்றி பெறலாம்.

நீங்கள்  சொல்வது உண்மைதான். ஐடி நிறுவனங்களுக்கு மிக முக்கியமாகத் தேவை ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறமை. மாணவர்கள் இந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள வகுப்பில் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டும். பொதுவாக என் அனுபவத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் தங்கள்  மாநில மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு அவரவருடைய தாய் மொழியில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். வருங்கால வேலை வாய்ப்புக்கு உதவும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும். அப்போதுதான் வேலை எளிதாகக் கிடைக்கும்.

ஆங்கிலம் தவிர, ஸ்பானிஷ், ஜப்பான், ஜெர்மன், சீன மொழி போன்ற மொழிகளில் ஏதோ ஒரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த நாட்டு நிறுவனங்கள் நிறைய வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.

திறனறி தேர்வுக்கான புத்தகங்கள் நிறைய இப்போது கிடைக்கின்றன. மாணவர்கள் தங்களுடைய அன்றாடப் பாடங்களுடன் இந்தப் புத்தகங்களில் உள்ள கணக்குகளை, வினாக்களை தினம்தோறும் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற முடியும்.

பாடப் புத்தகங்கள் தவிர இதர புத்தகங்களை மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பொது அறிவு அதிகமாகும். நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்போது விரல் நுனியில் கோடிக்கணக்கான தகவல்களைத் தர இணையதளங்கள் வந்துவிட்டன. எதைப் பற்றியும் தகவல்களை உடனே மாணவர்கள் பெற முடியும்.

இப்போது ஐடி நிறுவனங்கள் பட்டப் படிப்பில் மட்டும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ ஆகியவற்றில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சில பெரிய ஐடி நிறுவனங்கள் 70 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் சொல்கிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும்

உள்ளது. ஒரு மாணவர் 90 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அரியர்ஸ் வைத்திருந்தால் அவரை ஐடி நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக் கொள்வதில்லை. எனவே அரியர்ஸ் வைப்பதை மாணவர்கள் கனவிலும் வெறுக்க வேண்டும்.

அதற்கடுத்து ஐடி நிறுவனங்கள் முக்கியமாகக் கவனிப்பது, கல்லூரியில் படிக்கும் காலத்தில் நாள் தவறாமல் கல்லூரிக்கு மாணவர்கள் சென்றிருக்கிறார்களா? என்பதைத்தான். கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்லும் மாணவர்கள் வேலைக்கும் ஒழுங்காகச் செல்வார்கள் அல்லவா?

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஐடி நிறுவனங்களில் பெரிய அளவுக்கு வேலை வாய்ப்புகள் இருந்தன. எனவே நன்கு படிக்கும் மாணவர்களை நிறுவனங்கள் வேலைக்குத் தேர்ந்து எடுத்து அவர்களே வேலைக்குத் தேவையான பயிற்சிகளையும் கொடுத்துவிடுவார்கள். ஆனால் இப்போது வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், முதல் மாதிரி எல்லாரையும் வேலைக்கு எடுப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான திறமையுள்ளவர்களையே வேலைக்கு எடுக்கிறார்கள்.

அதுவுமில்லாமல், ஐடி நிறுவனங்களுக்கு புராஜெக்ட் எதுவும் இல்லையென்றாலும் கூட இதற்கு முன்பு வேலைக்கு ஆட்களைத் தேர்ந்து எடுத்து சும்மா உட்கார வைத்துச் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தேவையில்லாமல் அதிக ஆட்களை எடுப்பதில்லை. எனவே மாணவர்கள் தங்களுடைய திறமைகளையே நம்ப வேண்டியிருக்கிறது.

ஐடி நிறுவன வேலைகள் தவிர எலக்ட்ரானிக் இன்ஜினியர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. எலக்ட்ரானிக் சம்பந்தப்படாத தொழில்துறையே இப்போது இல்லை என்று சொல்லலாம். மருத்துவம், ஏரோநாட்டிகல்,ராணுவம் எனப் பலதுறைகளிலும் எலக்ட்ரானிக் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் ஏற்படுகிற பிரச்னைகளுக்கு நடைமுறை சார்ந்த தீர்வுகளைக் கொடுக்கும் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இப்போது அதிகப் படிப்புச் சுமை  இருக்கிறது என்பது உண்மைதான். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மாணவரும் குறைந்தது கல்லூரிக்குச் செல்வதற்குத் தினம் தோறும் 60 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்கிறார்கள். பயணத்தின்போது, புகை, வாகனங்களின் அதிக சப்தம் எல்லாம் சேர்ந்து அவர்களை மிகக் களைத்துப் போக வைக்கிறது. கல்லூரியில் வகுப்பிற்கு வரும்போதே சோர்ந்து போய்த்தான் வருகிறார்கள். எனவே அவர்கள் தங்களுடைய சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பிராணாயமம், எளிய உடற்பயிற்சிகள், தியானம் போன்றவற்றை அதிகாலையில் எழுந்து செய்யலாம். எங்கள் கல்லூரியில் நாங்கள் இதற்கான வகுப்புகளை நடத்துகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.