பக்தி: சிடி நாலாயிரம்!
பழைய விஷயங்கள் புதிய வடிவம் எடுக்கும் காலம் இது. "ரீமிக்ஸ் சினிமாப் பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என்று நினைத்துவிடாதீர்கள். நாம் சொல்வது, பழந்தமிழ் நூல்கள் குறுந்தகடு வடிவம் எடுப்பதை
பழைய விஷயங்கள் புதிய வடிவம் எடுக்கும் காலம் இது. "ரீமிக்ஸ் சினிமாப் பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என்று நினைத்துவிடாதீர்கள். நாம் சொல்வது, பழந்தமிழ் நூல்கள் குறுந்தகடு வடிவம் எடுப்பதைப் பற்றி.
காலத்தால் அழியாத பழைய இலக்கியங்கள் கால மாறுதல்களுக்கேற்ப புதுவடிவம் எடுப்பது இயற்கை. அந்த வகையில் இப்போது குறுந்தகடு வடிவம் எடுத்திருக்கிறது நாலாயிர திவ்ய பிரபந்தம். அதுவும் இசைப் பாடல் வடிவில்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களை இசை வடிவில் தயாரித்து வெளியிட முன்முயற்சி எடுத்திருக்கிறது சென்னையில் நாதாமிர்தம் கல்வி அறக்கட்டளை என்னும் அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்த ராதா ரவியை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இசைக் குறுந்தகடாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
தமிழில் மிக அருமையான பக்தி நூல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நாலாயிர திவ்ய பிரபந்தம். அதற்கு முன்பு தோன்றிய திருக்குறளுக்கோ, அதற்குப் பின்பு தோன்றிய தேவார, திருவாசகத்திற்கோ தமிழ்நாட்டில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏனோ நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்குக் கொடுக்கப்படவில்லை.
தேவாரம், திருவாசகம் போன்றவற்றை நாள்தோறும் பாட ஓதுவார்கள் இருக்கிறார்கள். வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும் கூட அவற்றின் பாடல்களைக் கேட்கலாம். ஏற்கனவே நாலாயிர திவ்ய பிரபந்தம் சிடி புத்தகமாக வெளிவந்திருக்கிறது. ஆனால் அதிலுள்ள பாசுரங்கள் இசையோடு பாடப்பட்டு குறுந்தகடுகள் வடிவில் வந்தவை மிகக் குறைவே. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாசுரங்களைத் தவிர பிற பாடல்களை நீங்கள் கேட்பது அரிது. தமிழில் வெளிவந்த சிறந்த பக்தி இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பரப்ப வேண்டும் என்ற முயற்சியின் விளைவாக உருவானதுதான் இந்த இசைக் குறுந்தகடுகள்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பரப்ப சொற்பொழிவு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தலாம். இசைக் குறுந்தகடுகளை வெளியிட முயன்றது ஏன்?
எதுவுமே இசை வடிவில் வந்தால் மக்கள் மனதை எளிதில் ஈர்த்துவிடும். மக்கள் கவனம் மிக எளிதாக அதன்மீது திரும்பும்.
சொற்பொழிவு நிகழ்ச்சி என்றால் பாமர மக்கள் அதைக் கேட்க ஆர்வத்துடன் வருவார்கள் என்று சொல்ல முடியாது. எனவே நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை இசை வடிவில் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம்.
உங்கள் அறக்கட்டளை மூலமாகத் தயாரிக்கப்பட்ட குறுந்தகடுகள் மக்களைச் சென்றடைய வேறு என்னவெல்லாம் செய்கிறீர்கள்?
இந்தக் குறுந்தகடுகள் கிராம மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்காக இந்தக் குறுந்தகடுகளை மாயவரம் பக்கத்தில் உள்ள சிறுபுலியூர் என்ற கிராமத்திற்கு எடுத்துச் சென்றோம். அந்த கிராமத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடல் பெற்ற கோயில் உள்ளது. அந்த ஊரில் படிப்பறிவில்லாத மக்களிடமும், குழந்தைகளிடமும் சென்று நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பெருமையை எடுத்துச் சொன்னோம். அவர்களுடைய ஊரைப் பற்றி அதில் சொல்லியிருக்கிருக்கிறது என்று சொன்னதும் அவர்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது.
அந்த ஊரில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல அந்த ஊர்க் குழந்தைகளுக்கு இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை நடத்தினோம்.
கோயில் திருவிழாக்களில், விசேஷ நாட்களில் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களுக்கான நடன நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறோம். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள தலங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறோம். அந்தப் புத்தகத்தில் தலம் எங்கிருக்கிறது, தலத்தின் அருமை, பெருமைகள் எல்லாவற்றையும் விளக்கியிருக்கிறோம்.
இந்த இசைக் குறுந்தகடுகளைக் கோவில்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம். அவர்கள் பிற பாடல்களைக் கோவில்களில் ஒலிக்கச் செய்வதைப் போல நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் ஒலிக்கச் செய்கிறார்கள்.
உங்கள் முன்முயற்சியால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் குறுந்தகட்டில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுமையாக இடம் பெற்றிருக்கிறதா?
நாலாயிரம் பாடல்களையும் ஒரே குறுந்தகட்டில் கொண்டு வர முடியாது. அதுபோல ஒரே நேரத்தில் கொண்டு வரவும் முடியாது. இப்போது 250 பாடல்களை மட்டும் இசை வடிவில் கொண்டு வந்துள்ளோம். நாலாயிரம் பாடல்களில் எந்தப் பாடலைத் தேர்ந்து எடுத்து இசை வடிவில் கொடுப்பது என்று எங்களுக்கு மலைப்பாக இருந்தது. எங்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த எம்.கே. சம்பத், உப்பிலி சீனிவாசன், என் கணவர் ரவி எல்லாரும் கலந்து ஆலோசித்தோம்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களைப் பற்றி உள்ள பாசுரங்களில் தலா இரண்டு பாடல்களைத் தேர்ந்தெடுத்தோம். இன்னும் கூடுதலாக சில பாடல்களைச் சேர்த்து மொத்தம் 250 பாடல்களை இசை வடிவில் அளித்திருக்கிறோம். பிற பாடல்களையும் இசைக் குறுந்தகடு வடிவில் நிச்சயம் கொண்டு வருவோம்.
இந்தக் குறுந்தகடுகளில் உள்ள பாடல்களைப் பாடியவர்கள் ஜானகி ராமானுஜம், என்.ஆர்.பத்மநாபன், ஜெயஸ்ரீ ஆகியோர். இதில் ஜானகி ராமானுஜமும், என்.ஆர்.பத்மநாபனும் பாடல்களைப் பாடியதோடு இசையும் அமைத்திருக்கிறார்கள்.
250 பாடல்கள் என்றால் நீண்ட நேரம் ஒலிக்குமே?
ஆமாம். இந்தக் குறுந்தகடு ஏழரை மணி நேரம் ஒலிக்கும். எம்பி 3 வடிவில் கொடுத்திருக்கிறோம்.
இது நவீனயுகம். மேல்நாட்டுக் கலாசாரம் ஊடகங்களின் உதவியால் நமது வாழ்வில் ஊடுருவும் காலம். இந்தக் காலத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பரப்ப முயற்சி எடுக்கிறீர்களே?
நமது வாழ்க்கைமுறையில் எவ்வளவுதான் மாறுதல்கள் வந்தாலும் எல்லாக் கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு கோவிலுக்கு வருகிறார்கள். இதற்கு என்ன காரணம்? வாழ்க்கைமுறையில் எவ்வளவு மாறுதல்கள் வந்தாலும் நமது அடிப்படையான மனோபாவம் மாறவில்லை.
இங்கிருந்து அமெரிக்காவுக்குச் செல்கிறவர்கள் நமது கலாசாரத்தை மறக்காமல் அங்கே கோயில்களை உருவாக்கவில்லையா? நமது நாட்டின் கர்நாடக சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும் அங்கே கற்றுக் கொடுக்கவில்லையா? எனவே பக்திக்கும், பக்தி இலக்கியங்களுக்கும் எல்லாக் காலத்திலும் மதிப்பு இருக்கவே செய்கிறது.
உங்களுடைய இந்த முயற்சியால் பயன் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. நாங்கள் வெளியிட்டிருக்கும் நாலாயிர திவ்ய பிரபந்த இசைக் குறுந்தகடுகளைக் கேட்டோ அல்லது திவ்ய பிரபந்த பாடல்களுக்கான நடன நிகழ்ச்சியைப் பார்த்தோ பத்தில் ஒருவர் ஈர்க்கப்பட்டால் அதுவே எங்களுக்கு அது பெரிய விஷயம். அந்த பத்தில் ஒருவர் இன்னொருவருக்கு இதை அறிமுகப்படுத்தினால் போதும் என்று நினைக்கிறோம்.