முகப்பு
தினமணி கதிர்

முகங்கள்: துணிச்சலின் மறு பெயர்!

தேநீர்க் கடைகளில், பேருந்துப் பயணத்தில் இருவர் பேசிக் கொள்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நாட்டு நடப்பைப் பற்றி, அரசியலைப் பற்றி அவர்கள் பேசுவதை எந்த பத்திரிகையிலும் அப்படியே எழுதிவிட முடியாது. அவ்வளவு

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:41 PM
பகிர்:

தேநீர்க் கடைகளில், பேருந்துப் பயணத்தில் இருவர் பேசிக் கொள்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நாட்டு நடப்பைப் பற்றி, அரசியலைப் பற்றி அவர்கள் பேசுவதை எந்த பத்திரிகையிலும் அப்படியே எழுதிவிட முடியாது. அவ்வளவு காரசாரமாகவும், காட்டமாகவும் பேசுவார்கள். ஆனால் அவர்களை அழைத்து அவர்கள் பேசியதை அப்படியே எழுதித் தர முடியுமா என்று கேட்டுப் பாருங்களேன். திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

நம் ஆட்களைப் போல பேச்சில்  மிஞ்சக் கூடிய வீரர்கள் உலகத்திலேயே இருக்கமாட்டார்கள். ஆனால் தனது உரத்த சிந்தனைகளைத் தைரியமாக எழுதுகிறார் ஒருவர். அதுவும் நான்கு பேர் அவற்றை வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது வீட்டு வெளிச் சுவரில் பெரிய கரும்பலகையில் எழுதிப் போடுகிறார்.

சென்னை கிழக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள மோகன்ராஜ்தான் அவர்.

இதில் என்ன வியப்பு என்றால், அவர் இப்படி எழுதிப் போடுவதற்கு முழு ஒத்துழைப்பும் கொடுக்கிறார் அவருடைய மனைவி ஆனந்தி.

மோகன்ராஜை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

"" நான் 1976 இல் சப்-இன்ஸ்பெக்டராக தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்தேன். திண்டுக்கல் பகுதியில் அந்த நேரம் கள்ளச் சாராயத்தை ஒழிக்கக் கடுமையாக, மிகத் தீவிரமாகப் பாடுபட்டேன். குடிகாரர்கள் பலரையும் திருத்தியிருக்கிறேன். அதை அப்போது திண்டுக்கல் மீட்டிங் ஒன்றில் அப்போதைய அமைச்சர் நெடுஞ்செழியன் பாராட்டிப் பேசியிருக்கிறார். அவ்வளவு கடுமையாக கள்ளச் சாராயத்தை ஒழிக்க நான் போராடிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசே சாராயக் கடையைத் திறந்துவிட்டு விட்டது. இது எனக்கு உறுத்தலாக இருந்தது.

1997 இல் இன்ஸ்பெக்டராக வேலை செய்தபோது பல்வேறு காரணங்களால் விருப்ப ஓய்வு பெற்றேன்.

மக்களுக்கு நாட்டு நடப்புகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் என் வீட்டுச் சுவரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிப் போட ஆரம்பித்தேன். நான் எழுதிப் போடுவதை வாசிக்க இப்போது ஒரு ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது.

பொதுமக்களுக்குத் தேவையான பல விஷயங்களை இதில் எழுதிப் போட்டிருக்கிறேன். நாட்டில் அன்றாடம் நடக்கும் விஷயங்களைப் பற்றி என் கருத்துகளை மிகச் சுருக்கமாக, மக்களின் சிந்தனையைத் தூண்டும்விதமாக எழுதிப் போடுகிறேன். ஏதாவது நாட்டில் வித்தியாசமாக நடந்தால் அதைப் பற்றி எழுதிப் போடுகிறேன். அரசியல் விமர்சனங்களைத்தான் அதிகமாக எழுதிப் போட்டிருக்கிறேன். ஒரு நாள் எழுதினால் சிலவற்றை மூன்று நாட்கள் வரை அழிக்கமாட்டேன். சிலவற்றை ஒருநாளிலேயே அழித்துவிடுவேன். அது எழுதிப் போடும் விஷயத்தைப் பொறுத்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு "தாலிக்குத் தங்கம் இல்லை; தாளிக்க வெங்காயம் இல்லை' என்று எழுதிப் போட்டேன். அதன் பின் தமிழக அரசே தாலிக்குத் தங்கம் தரும் திட்டத்தை அறிவித்துவிட்டது. நான் எழுதிப் போட்ட விஷயம் நடைமுறைக்கு வந்ததில் எனக்குச் சந்தோஷம்.

நிறைய தொலைக் காட்சிகள், ஊடகங்கள் வந்துவிட்ட இந்நாளில் நான் எழுதிப் போடுவது என்பது மிகச் சிறிய விஷயம். இப்படி எழுதிப் போடுவதால் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அதே சமயம் குறைந்த அளவு மக்களாவது நான் எழுதிப் போடுவதைப் பற்றி ஒரு நிமிஷம் சிந்திக்கிறார்கள்.

இந்தப் பகுதி நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழ்கிற ஒரு பகுதி. காலையில் வாக்கிங் போகிறவர்கள் ஒரு நிமிடம் நின்று நான் எழுதிப் போடுவதை வாசித்துச் செல்கிறார்கள். என்றாவது ஒருநாள் எழுதிப் போடவில்லை என்றால், ஏன் எழுதிப் போடவில்லை என்று விசாரிக்கிறார்கள்.

எழுதிப் போடுவதைப் படித்துவிட்டு சண்டை போட வந்தவர்களும் உண்டு. எப்படி இவ்வாறு எழுதலாம் என்று கேட்டு நான்கைந்து பேர் வந்துவிட்டார்கள். நான் அவர்கள் கையில் சாக்பீûஸக் கொடுத்து, எனது கருத்துக்கு மாற்றுக் கருத்தை நீங்கள் எழுதிப் போடுங்கள் என்று பொறுமையாக அவர்களிடம் சொன்னேன். என்னுடைய துணிச்சலான பேச்சையும் அணுகுமுறையையும் பார்த்துவிட்டு, ஒன்றும் பேசாமல் போய்விட்டார்கள்.

இப்படி எழுதிப் போடுவதால் மட்டும் எந்தச் சமூகப் பிரச்னையையும் தீர்த்துவிட முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க போராட்டத்திலும் இறங்கியிருக்கிறேன்.

மணற் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குப் பாத யாத்திரையாக கடந்த ஆண்டு நடந்து வந்தேன்.

தாமிரபரணியில் தண்ணீர் திருட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்தி கைதாகியிருக்கிறேன்.

தேசிய கீதத்தை வியாபாரப் பொருளாக மாற்ற சிலர் முயன்றதைப் போராடித் தடுத்தேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகள் பெற்றேன்.

என்னைப் பொறுத்தளவில் என்னாலான பணியை மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதில் ஒன்றுதான் சுவரில் எழுதிப் போடுவது. நான் எவ்வளவுதான் நல்ல விஷயங்களைச் செய்தாலும் ஊடகங்கள் போதுமான முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான் எனது மனக்குறை'' என்றார் சிரித்துக் கொண்டே.

பொதுவாக வீட்டில் உள்ள பெண்கள் தங்களுடைய கணவர் இப்படி சமூக சேவை செய்யக் கிளம்பினால் அதற்கு எதிராக இருப்பார்கள். உங்கள் வீட்டில் உங்களுக்கு உதவியாக இருக்கிறார்களே? என்று கேட்டோம்.

""நீங்கள் இதை என் மனைவியிடமே கேளுங்கள்'' என்றார்.

  ""இவர் எது செய்தாலும் அதில் நியாயம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவருக்கு உதவியாக இருக்கிறேன்'' என்று ஆரம்பித்தார் அவருடைய மனைவி ஆனந்தி.

வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு பொதுவேலைகளில் இறங்கினால் குடும்பத்தின் பொருளாதாரநிலையில் பாதிப்பு ஏற்படுமே? என்று தயக்கத்துடன் கேட்டோம்.

""அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நமக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ..அது நிச்சயமாகக் கிடைக்கும். எனவே பணத்தைப் பெரிதாக நினைக்கவில்லை'' என்கிறார் தெளிவாக.

""இவர் தினமும் ஏதாவது எழுதிப் போடும்போது நான் அவருக்கு உதவுவேன். வாக்கியங்கள் கோர்வையாக இல்லை என்றால் திருத்தம் சொல்வேன்.

மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதே என் எண்ணமும். எனக்கு காமராஜர் மேல் சின்ன வயதில் இருந்தே ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. எனது மாமனாரின் பொதுச் சேவையையும் நான் பார்த்திருக்கிறேன். எனவே இவர் இப்படிச் சமூக சேவை செய்வது எனக்குப் பிடிக்கிறது.

இவர் 2002 இல் ஏரல் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துப் பெரிய நிறுவனங்களுக்குக் கொண்டு செல்வதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். பைப் போகும் இடத்தில் நின்று மறியல் செய்தார். அப்போது அவரைக் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். நான் அப்போது ஒரு பஸ்ஸில் உட்கார்ந்திருந்தேன். போலீஸ் வேனில் இருந்த இவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கையாட்டினேன்.

இதைப் பார்த்த சொந்தக்காரர்கள் என்னைத் திட்டினார்கள். அவரைக் கைது செய்து கொண்டு போகிறார்கள். இவள் கையாட்டுகிறாள் பாரேன் என்று பேசினார்கள். இன்னும் சிலர் சென்னையில் உங்கள் வீட்டுக்குத் தண்ணீர் வருகிறது. அப்புறம் ஏன் இங்கே வந்து உங்கள் வீட்டுக்காரர் போராடுகிறார் என்று கேட்டார்கள். ஆனால் நான் அதற்காக வருத்தப்படவில்லை. அவர் நியாயத்திற்காகப் போராடுகிறார் அதற்கு நான் துணையாக இருக்கிறேன் என்பதுதான் என் நினைப்பு'' என்றார்.

கடைசியாக ஒரு தகவல்: மோகன்ராஜ் மறைந்த காங்கிரஸ் தலைவர் நெல்லை ஜெபமணியின் மகன்.

முழு கட்டுரையைப் படிக்க →