தானம்: சர்வமும் சமர்ப்பணம்!
மனிதர்கள் நினைத்தால் எந்த நிலையிலும் வாழ்வை அர்த்தமுடையதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு மேலும் ஓர் எளிய உதாரணம் மா. தங்கவேலன் - மீனா தம்பதி. மன்னார்குடி பக்கத்திலுள்ள சின்ன கிராமமான சேரன்குளத்தி
மனிதர்கள் நினைத்தால் எந்த நிலையிலும் வாழ்வை அர்த்தமுடையதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு மேலும் ஓர் எளிய உதாரணம் மா. தங்கவேலன் - மீனா தம்பதி.
மன்னார்குடி பக்கத்திலுள்ள சின்ன கிராமமான சேரன்குளத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த தங்கவேலனுக்கு வாழ்க்கை எந்த கட்டத்திலும் எளிதானதாக இல்லை.
""ஆரம்ப வயதுகளிலேயே தாய், தகப்பனை இழந்துவிட்டேன். வறுமை காரணமாக பால்யப் பருவம் முழுவதையும் சைக்கிள் தொழிலில் இழந்தேன். இளமைப் பருவத்தில் சற்று நிதானித்த தருணத்தில் திருமணமானது.
Advertisement
ஆனால், ஒரு கொடிய நோய் என் இளம் மனைவியைப் பிரித்துச் சென்றது. கூடவே அதுவரை சேர்த்து வைத்திருந்த கொஞ்ச நஞ்ச ஆதாரங்களும் பறிபோயின. விரக்தியில் முடங்கினேன்'' என்று தன் பழைய வாழ்வை அசை
போடும் தங்கவேலனின் அடுத்த அத்தியாயம் மீனாவைக் கைப்பிடித்ததும் தொடங்கியிருக்கிறது.
மீனா மனைவியாகிறார். அன்பான வாழ்க்கை. சைக்கிள்களை வித்தியாசமாக வடிவமைக்கும் தங்கவேலனின் லாகவமான தொழில் வித்தை அவரை வசதியான நிலைக்கும் உயர்த்துகிறது. ஆனால், இப்போது துயரத்தின் முகம் வேறாக மாறுகிறது. தம்பதிக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை. எல்லா கோயில்களையும் மருத்துவமனைகளையும் சுற்றிவிட்டு, கடைசியாக பிள்ளைகளை தத்தெடுத்து வளர்ப்பது என்ற முடிவுக்கு வருகின்றனர்.
மீனா தொடர்கிறார்:
""முதலில் உள்ளூரிலேயே இரு குழந்தைகளைத் தத்தெடுத்தோம். ஆனால், விவரம் தெரிந்ததும் தன் தாய் - தந்தையைத் தேடி ஓடிவிட்டன அந்தக் குழந்தைகள். அடுத்து வெளியூர் சென்று ஒரு பச்சிளம் குழந்தையைத் தத்தெடுத்தோம்; 7 ஆண்டுகள் சீராட்டி வளர்த்த அந்தக் குழந்தையை பாதியிலேயே பறித்துச் சென்றது நோய். அடுத்தும், ஒரு குழந்தையை வளர்த்தோம். அவனோ வளர்ந்ததும் திருடனாக மாறி ஒருகட்டத்தில் வீட்டிலிருந்த பொருட்களையே சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டான். இதற்குள் நாங்கள் இருவரும் முதுமைக்குள் முழுமையாகத் தள்ளப்பட்டிருந்தோம்'' சிரிப்பில் விரக்தியைப் புதைக்க முயன்றவராகச் சிரிக்கிறார்.
புறக்கணிப்பின் உச்சத்திலிருந்த அன்றைய சூழலில்தான் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கின்றனர் தங்கவேலன் - மீனா தம்பதி. என்னவென்றால், தம்முடைய எஞ்சிய வாழ்வையும் தம்மையும் தேசத்துக்கே அர்ப்பணிப்பது என்பதாகும்.
இறப்புக்குப் பின்னர் தம்முடைய சொத்துகள் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்று உயில் எழுதிய அவர்கள், தம் உடல்களும் மருத்துவ ஆராய்ச்சிக்காக அரசிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று எழுதி இருக்கின்றனர்.
இந்தக் காலத்தில் உடல் தானம் என்பது வியப்பை அளிக்கக் கூடிய ஒரு செய்தி இல்லைதான். ஆனால், தங்கவேலன் - மீனா தம்பதி பத்தாண்டுகளுக்கு முன்னரே இதைச் செய்திருக்கின்றனர் என்பதுதான் இங்கு ஆச்சர்யம் அளிக்கும் உண்மை.
உடல் தானம் அன்று அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை என்று கூறுகின்றனர் இருவரும்.
""நாங்கள் இருவருமே படிக்காதவர்கள். அதுவும் கிராமத்தான் என்று முகத்திலேயே எழுதி ஒட்டப்பட்டவர்கள். எதுவும் எளிதாக நடந்துவிடுமா என்ன? ஏராளமான மருத்துவர்கள், மருத்துவமனைகளை நோக்கி அலைந்தோம். சீந்துவார் எவருமில்லை. சொல்லப் போனால், நிறையவே துரத்தப்பட்டோம்.
அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. சட்டபடி இதை எப்படி செய்வது என்று அன்றைக்கு யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. கடைசியாக ஊரில் முக்கியமானவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் வரவழைத்து அனைவர் முன்னிலையிலும் எங்கள் விருப்பத்தை உயிலாக்கினோம். பத்திரப் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று அதைப் பதிவுசெய்தோம்.
பின்னாளில், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக திரு. உமாசங்கர் பதவியேற்றபோது மக்கள் எளிதில் அணுகக் கூடியவராக அவர் இருந்தார். திருவாரூர் சென்று அவரைப் பார்த்தோம். உயிலைக் காட்டினோம். "எல்லோரும் அரசிடமிருந்து எதையாவது கேட்டுதான் வருவார்கள்; நீங்கள் மட்டுமே அரசுக்கு கொடுக்க வந்திருக்கிறீர்கள்' என்றார். நாங்கள் அரசுக்குரியவர்கள் என்று அறிவித்தார். இப்போது மேலே உள்ளவன் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்'' புன்னகைக்கின்றனர் இருவரும்.
உடல் ஒத்துழைக்காததால் இப்போது தன்னுடைய சைக்கிள் நிறுவனத்தை மூடிவிட்டார் தங்கவேலன். ஆனால், வீட்டில் மனிதர் சும்மாயில்லை. மனைவியுடன் சேர்ந்து வீட்டின் பின்புறத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேக்கு மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார். நாம் சந்தித்த அன்றும்கூட இருவரையும் தோட்டத்திலேயே சந்திக்க வேண்டியிருந்தது.
யாருக்காக இந்த மரக்கன்றுகள்? மெüனமாகச் சிரிக்கின்றனர் இருவரும். உங்களுக்குப் புரியவில்லையா என்ன?