தொண்டு: முதுமைக்கு உதவும் முதுமை!
பெண் குழந்தை பிறந்துவிட்டால் செலவு என்று நினைப்பவர்கள்தாம் அதிகம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஊரில் வீட்டில் பெண் பிறந்துவிட்டால் அதைச் செல்வம் என்று நினைக்கிறார்கள். பெண் பிறந்தால் வீட்டிற்கு வருமா
பெண் குழந்தை பிறந்துவிட்டால் செலவு என்று நினைப்பவர்கள்தாம் அதிகம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஊரில் வீட்டில் பெண் பிறந்துவிட்டால் அதைச் செல்வம் என்று நினைக்கிறார்கள். பெண் பிறந்தால் வீட்டிற்கு வருமானம் என்று நினைக்கிறார்கள். அது உண்மையும் கூட.
தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள முக்கூடல்தான் அந்த ஊர். இந்த ஊரில் பீடித் தொழிலில் அதிகமாக ஈடுபட்டு வீட்டிற்கு வருமானம் தேடித் தருபவர்கள் பெண்கள்தாம்.
இளமையிலிருந்தே பீடித் தொழிலில் கடுமையாக உழைக்கும் இந்த ஊர்ப் பெண்களின்நிலை முதுமையடையும்போதுதான் பரிதாபமாக மாறிவிடுகிறது.
வயதான காலத்தில் உழைக்கவும் முடியாமல், தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் முடியாமல், ஒருவேளைச் சோற்றுக்கும் அவர்கள் படும்பாடு, வார்த்தைகளால் சொல்ல முடியாதது.
அப்படிப்பட்ட வயது முதிர்ந்த பெண்களுக்காக முதியோர் இல்லம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் 85 வயதான எஸ்.கல்யாணி அம்மாள்.
முக்கூடலிலிருந்து சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அவருடைய மகன் முத்தப்பாவின் வீட்டிற்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்.
""எங்கள் ஊர் முக்கூடல் பீடித் தொழிலுக்குப் பெயர் போனது. வீட்டிலிருக்கும் பெண்கள், படித்த பெண்கள், பட்டம் பெற்ற பெண்கள் யாராக இருந்தாலும் எல்லாரும் பீடி சுற்றும் தொழில் செய்வார்கள்.
எத்தனை கட்டு பீடி சுற்றுகிறார்களோ அந்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். சிறுவயதில் இருந்தே பீடி சுற்றப் பழகிவிடுவதால் மிக விரைவாகப் பீடி சுற்றுவார்கள்.
எங்கள் ஊர்ப் பெண்களைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் கேள்வி, "எவ்வளவு நகை போடுவீங்க?' என்பதாக இருக்காது. "பீடி சுற்றி பெண் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறது?' என்றே கேட்பார்கள்.
ஆண்களுக்குப் பெரும்பாலும் வேலை இருப்பதில்லை. பெண்களின் வருமானத்தில்தான் பெரும்பாலான குடும்பங்கள் நடக்கின்றன.
இதில் என்ன கஷ்டம் என்றால், 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் பீடித் தொழில் செய்பவர்களுக்கு டிபி வந்துவிடும். இதனாலேயே எங்கள் ஊரில் டிபி மருத்துவமனை கூட ஒன்று உள்ளது.
சின்ன வயதில் சுறுசுறுப்பாக வேலை செய்து அதிக வருமானம் சம்பாதிக்கும் பெண்களின் கைகள் வயதாக வயதாக வேகம் குறைந்து போகின்றன. இதனால் வருமானம் குறைந்து போகிறது. வயதான காலத்தில் வேலை செய்ய முடியாமல் போகிறது. மகன்களைத் தாய்மார்கள் நம்பியிருப்பதற்குப் பதிலாக மருமகள் உழைப்பில் வாழ வேண்டியிருக்கிறது. சில மருமகள்கள் மாமியாரை உதாசீனப்படுத்துவது, அவமரியாதையாக நடத்துவது அதிகரிக்கிறது. தொடர்கதையாகிறது.
கடைசியில் ஒரு வேளைச் சோற்றுக்கு ஏங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.
இப்படிப்பட்ட ஏழை முதிய பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட காலமாக இருந்துவந்தது.
இதற்குக் காரணம் நான் சிறுவயது முதலே தனியாக இருந்தது கிடையாது. என்னைச் சுற்றிப் பத்துப் பெண்கள் எப்போதும் இருப்பார்கள். சிறுவயது முதலே ஒன்றாகவே இருந்து பீடி சுற்றும் தொழில் செய்து, இருப்பதைப் பகிர்ந்துண்டு வாழும் பழக்கம் எங்களுக்குள் இருந்தது.
எனவே நான், எனது மகன் முத்தப்பாவின் உதவியோடும், மருமகன் ராதாகிருஷ்ணன் உதவியோடும் "அன்பாலயம் அறக்கட்டளை'யை உருவாக்கினேன்.
இப்படி சமூக சேவை செய்ய நான் முன்வந்ததற்குக் காரணமாக இன்னொன்றையும் சொல்லலாம். எங்கள் ஊரில் பூவம்மாள் என்ற அம்மையார் இருந்தார். அவர் சொக்கலால் பீடி நிறுவன உரிமையாளரின் மனைவி. கடைசிக் காலத்தில் அவர் தனிமையில் வாழும்படி ஆகிவிட்டது. அந்த அம்மாள் தனது தனிமையின் துயரத்தைப் போக்க அக்கம்பக்கம் உள்ள பெண்களுடன் நன்றாகப் பழகுவதும், ஏழை எளிய பெண்களுக்கு அவர்கள் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்வதுமாக இருந்தார். முன்பின் அறிமுகமில்லாத பெண்கள் கூட உதவி என்று கேட்டுவந்தால் அள்ளி அள்ளிக் கொடுத்து வந்தார். அப்படிப் பிறருக்கு உதவி செய்வதினால் கிடைக்கும் இன்பத்தில் தன் சொந்த வாழ்வின் துயரத்தை மறந்து வந்தார். அந்தக் காலத்தில் அந்த அம்மையாரின் பெயர் எங்கள் ஊர்ப் பக்கத்தில் மிகப் பிரபலமாக இருந்து வந்தது. அவரின் கொடை உள்ளம், பிறருக்கு உதவும் பண்பு என்னை மிகவும் கவர்ந்திழுத்தது. அந்த அம்மா அளவுக்கு நாம் பிறருக்கு உதவ முடியவில்லை என்றாலும் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைக்க வைத்தது.
அடுத்து என் மூன்றாவது மகள் பிறருக்கு உதவுவதில் மிகவும் ஆர்வம் உடையவள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவள் மறைந்துவிட்டாள். அவளின் நினைவாக அவள் விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்றும் நினைத்தேன். அதனால்தான் இந்த அன்பாலயா அறக்கட்டளையைத் தொடங்கி அதன்மூலம் முதிய ஏழைப் பெண்களை முழுமையாகக் கவனிக்கும் முதியோர் இல்லத்தை உருவாக்க நினைத்தேன்.
அதற்கான கட்டிடம் கட்ட தேவையான 20 சென்ட் நிலத்தை பொன்னம்மாள், வெங்கடேசன், முத்தப்பா, கயல்விழி ஆகிய நான்கு பேரும் ஆளுக்கு 5 சென்ட் வாங்கிக் கொடுத்தனர். கட்டிடத்திற்கு அடித்தளம் போட்டவுடன் வேலை அப்படியே நின்று போய்விட்டது. மேலும் அதைக் கட்ட நிதியில்லை.
முதியோர் ஆரம்பிக்கும் வரை சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக தினமும் மதியம் ஒருவேளை பத்து வயது முதிர்ந்த பெண்களுக்கு அன்னதானம் அளித்துவருகிறேன்.
இந்த எண்ணம் கூட எங்கள் ஊரில் நான் கண்ட ஒரு காட்சியால்தான் எனக்கு ஏற்பட்டது. எங்கள் ஊர் முத்துமாரியம்மன் கோவிலில் அன்னதானம் போடுவார்கள். அதற்காக நீண்டநேரம் காத்திருக்கும் முதிய பெண்களைப் பார்த்ததும் என் உள்ளம் உருகிவிட்டது. காலமெல்லாம் உழைத்த பெண்கள் உழைக்க முடியாத காலத்தில் ஒருவேளைச் சோற்றுக்காக இந்தப் பாடுபடுகிறார்களே என்று நினைத்து வேதனைப்பட்டேன். அதனால் நம்மால் முடிந்த அளவுக்கு ஒரு பத்துப் பேருக்காவது தினம் ஒருவேளையாவது சோறு போட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இதற்காகும் செலவை பலரும் பகிர்ந்து கொள்கிறார்கள். தேவையான அரிசியை மருமகன் ராதாகிருஷ்ணன் வாங்கித் தந்துவிடுகிறார். இதர செலவுகளைப் பலர் மாதத்திற்கு ரூ.50 - 100 என்று தந்து உதவுகிறார்கள்.
இங்கு வருகிற பெண்களே உணவைத் தினம்தோறும் சமைத்துவிடுகிறார்கள். இவர்களையும் இவர்களைப் போன்ற இன்னும் பலரையும் வைத்துக் காப்பாற்ற முதியோர் இல்லம் விரைவில் கட்டப்பட வேண்டும். அதற்கான நிதி உதவிக்காகத்தான் இப்போது காத்திருக்கிறேன்.
முதியோர் இல்லம் கட்டி வயது முதிர்ந்த பெண்களைப் பாதுகாப்பதுதான் எனது நோக்கம் என்றாலும் அன்பாலயம் அறக்கட்டளை சார்பாக பிற பணிகளும் செய்து வருகிறோம்.
பெண்களுக்கு எம்பிராய்டரி, தையல் வேலை, கூடை பின்னுதல் போன்றவற்றை இலவசமாகக் கற்றுத் தருகிறோம். மாலை நேரங்களில் 8வது முதல் 12 வது வரை படிக்கும் பிள்ளைகளுக்கு இலவசமாக ட்யூஷன் சொல்லித் தருகிறோம். இதற்காக இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
இதுதவிர, எனது மருமகன் ராதாகிருஷ்ணன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் இருந்தவர். அவர் இங்குள்ள பிள்ளைகளுக்கு கோடைவிடுமுறையில் இந்தி பேசக் கற்றுத் தருகிறார். இப்போது பள்ளி தொடங்கிவிட்டதால் வார விடுமுறைநாட்களில் கற்றுத் தருகிறார்
எனது வாழ்நாள் காலத்திற்குள் எப்படியாவது இந்த பெண்களுக்கான முதியோர் இல்லத்தைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எத்தனையோ வயது முதிர்ந்த ஏழைப் பெண்களுக்கு அது பெரிய உதவியாக இருக்கும்'' என்றார்.
வயதாகிவிட்டாலே சரியாகச் சிந்திக்க முடியாது என்று கூறுவார்கள். ஆனால் வயதானாலும் இன்றைய இளம் தலைமுறையினரைவிட அதிக சமூகப் பொறுப்புணர்வுடனும் பிறருக்கு உதவும் எண்ணத்துடனும் சிந்திக்கும், செயல்படும் கல்யாணி அம்மாள் போன்றவர்களின் சேவை, சமுதாயத்திற்குத் தேவை என்பதே உண்மை.