தினமணி கதிர்

முகங்கள்: சமைப்பதற்கு மட்டும் விடமாட்டேன் மனைவியை!

பிளஸ் டூ படிக்கிற பையன். வெட்னரி டாக்டருக்குப் படிக்கும் மகள். பள்ளியில் தலைமையாசிரியர் வேலை. பவானியைச் சேர்ந்த வேலுசாமிக்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கை இப்படி மிக நன்றாகத்தான் போய்க் கொண்டிர

ஆ.ராஜூ சாஸ்திரி

பிளஸ் டூ படிக்கிற பையன். வெட்னரி டாக்டருக்குப் படிக்கும் மகள். பள்ளியில் தலைமையாசிரியர் வேலை. பவானியைச் சேர்ந்த வேலுசாமிக்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கை இப்படி மிக நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அவருடைய மனைவி பாரதிக்கு திடீரென்று கண்பார்வை போய்விட்டது.

  தனது ஆசிரியர் வேலையையும் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு, மனைவியையும் பராமரித்துக் கொண்டு வேலுசாமி பட்ட கஷ்டங்களைக் கேட்டால் யாருக்கும் மனம் உருகிவிடும்.

  ஆனால் தனது மனைவிக்குக் கண்ணுக்குக் கண்ணாக இன்று வரை  பராமரித்து வருகிறார் வேலுசாமி.

  ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வேலுசாமி வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

  இருந்தும் இன்று வரை மனைவியைப் பராமரிப்பது வேலுசாமிதான்.

  எத்தனையோபேர் கட்டிய மனைவியைக் கண்கலங்கச் செய்துவிட்டு ஓடிவிடும் இக்காலத்தில் மனைவிக்குக் கண்ணாக இருக்கும் வேலுசாமியிடம் பேசினோம்.

  ""பதினாறு வருடங்களுக்கு முன்பு எனது மனைவி பாரதி உடல் சுகமில்லை என்று படுத்திருந்தார். அப்போதுதான் அவருக்குக் கண்பார்வை போய்விட்டது. பெரிய பெரிய டாக்டர்களிடம் எல்லாம் அழைத்துப் போனேன். பார்வை திரும்ப வராது என்று சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டேன்.

  ரொம்ப வேதனையாக இருந்தது. ஆனால் வேதனையைச் சமாளிக்க வேண்டும் என்ற எண்ணமும், உறுதியும் அப்போது வந்தது. கண்பார்வை இல்லை என்றாகிவிட்டது. நாம் அப்செட்டாகி உட்கார்ந்துவிடுவது முட்டாள்தனம் என்று தோன்றியது.

  ஆனால் வெளியுலகிற்கு இதைத் தெரிவிக்க வேண்டாம் என்று தோன்றியது. இரண்டு வருடங்கள் வரை வெளியுலகிற்குத் தெரியாமலேயே சமாளித்து வந்தோம்.

  யாராவது நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் நண்பர் பெயரைச் சொல்லி "வாங்க' என்பேன். எனது மனைவி அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்பப் பேசிச் சமாளிப்பார். வெளியே செல்லும் போது என் கையை லேசாகத் தொட்ட மாதிரி அவர் என் கூட நடந்து வருவார்.

  பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிறருக்குத் தெரிய ஆரம்பித்தது. ""உங்க கண்ணிலே ஏதோ பிரச்னை போலிருக்கு... டாக்டரைப் பாருங்க'' என்று அவர்கள் என் மனைவியைப் பார்த்துச் சொல்ல ஆரம்பித்தனர். படிப்படியாக எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.

  இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் எனது மனைவிக்கு பார்வையில்லாவிட்டாலும் நான் நன்றாக  கவனித்துக் கொள்வேன் என்ற எண்ணம் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. பார்வையில்லை என்ற குறையுடன் தைரியமாக வாழப் பழகிவிட்டார்.

  என்னுடைய மகனும், மகளும் அப்போது படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய வேலைகளை எல்லாம் அவர்களே செய்து கொள்வார்கள். ஆனால் சமையல் வேலையை மட்டும் செய்யவிட மாட்டேன். நானே சமையல் வேலைகளைச் செய்தேன். இப்படித்தான் நாட்கள் கழிந்தன.

  என்னுடைய மகளுடைய திருமணம் வந்தது. மனைவிக்குக் கண்பார்வையில்லையென்றாலும் மகளுடைய திருமணத்தைச் சிறப்பாகச் செய்து முடித்தேன். முதலில் எல்லாம் திருமணம் செய்வது மிகக் கடினமான வேலையாக இருந்தது. இப்போது எளிதாகிவிட்டது. என்னுடைய சகோதர, சகோதரிகள், உறவினர்கள் திருமணத்தின் போது மிகவும் உதவி செய்தார்கள்.

  இப்போதுகூட என்னுடைய மனைவிக்கு எல்லா வேலைகளையும் நான் செய்து தருவது கிடையாது. காலையில் எழுந்ததும் அவர்களே எல்லா வேலைகளையும் செய்வார்கள். துணி துவைத்துவிடுவார்கள். ஆனால் துவைத்த துணிகளைக் காயப் போடுவது சிரமம். நான் காயப் போடுவேன். சமையலுக்குக் காய்கறி எல்லாம் வெட்டிக் கொடுப்பார்கள். நான் சமைப்பேன். உட்கார்ந்து கொண்டே வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வார்கள். இவையெல்லாம் நான் பழக்கிக் கொடுத்தது. அவர்களும் கண் பார்வையில்லாமல் எல்லா வேலைகளையும் செய்ய ஆர்வமாகக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் சமைப்பதற்கு மட்டும் மனைவியை அனுமதிக்க மாட்டேன். கேஸ் அடுப்பு ஆபத்தானது என்பதால் நானே சமைத்துவிடுவேன்.

  பக்கத்தில் உள்ள கடைக்குப் போகும்போது மட்டும் மனைவியைத் தனியே விட்டுச் செல்வேன். மற்றபடி எங்கே போனாலும் என் மனைவியைக் கூடவே அழைத்துச் செல்வேன்.   கடைவீதிக்குப் போனாலும், கல்யாணத்திற்குப் போனாலும், கோயிலுக்குப் போனாலும் தனியாகவிட்டுச் செல்லமாட்டேன். வெளியே போகிறோம். திரும்பி வீட்டுக்கு வருவோம் என்ற நிச்சயமில்லை. நான் வெளியே போன சமயம் ஏதாவது ஆகிவிட்டால் மனைவியை யார் பார்த்துக் கொள்வது? என்ற எண்ணமே காரணம். மனைவி ஒருபோதும் தனிமையை உணரக் கூடாது என்பது இன்னொரு காரணம்.

  யாராவது அவர்களுடைய வீட்டு நிகழ்ச்சிக்கு என் மனைவி வருவதை விரும்பவில்லை என்று தெரிந்தால் நானும் அந்த நிகழ்ச்சிக்குப் போகமாட்டேன்.

  மனைவிக்குக் கண்பார்வை போனதும் அதைச் சிரமம் என்று நினைத்ததில்லை. சிரமத்தைச் சிரமம் என்று நினைப்பதுதான் முதலில் சிரமம்.

  நாளை நடக்கப் போவது என்ன என்று யாருக்கும் தெரியாது. அதைத்தான் விதி என்கிறோம். என்னுடைய மனைவிக்குக் கண்பார்வை போனது விதி. அதை எதிர்கொள்வதுதான் சரியானது.

  நான் இந்த அளவுக்கு நன்றாக மனைவியைப் பார்த்துக் கொள்வதைப் பார்த்து, அவர் கண்பார்வை நன்றாக இருந்த காலத்தில் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார், அதனால்தான் இப்போது நான் அவரைக் கவனித்துக் கொள்கிறேனோ என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அவருக்குக் கண்பார்வை நன்றாக இருந்து எனக்கு கண்பார்வை போயிருந்தால்...அவர் என்னைப் பார்க்காமல் கைவிட்டிருப்பாரா?

  அதுவுமில்லாமல் கஷ்டம் என்று வந்துவிட்டால் அதற்காக கலங்கிப் போய்விடக் கூடாது என்று நினைப்பவன் நான். கொதிக்கும் எண்ணையில் ஒருவர் கையை விட்டுவிட்டார் என்றால் பதட்டப்படமாட்டேன். கையை விட்டாயிற்று. அடுத்து என்ன செய்ய வேண்டும் யோசிப்பேன். இப்படி நான் இருப்பதற்குக் காரணம் சிறுவயதில் இருந்து நான் பட்ட பல கஷ்டங்களே.

  மேலும் என் மனைவியின் நிலையில் நான் என்னை வைத்துப் பார்ப்பேன். இரவில் டாய்லெட் செல்லும் போது கண்களை மூடிக் கொண்டு பத்துச் சுற்று சுற்றிவிட்டு டாய்லெட்டுக்குப் போக நினைப்பேன். பலமுறை டாய்லெட்டுக்குப் பதிலாகச் சமையலறைக்குப் போயிருக்கிறேன். அதுபோல படிக்கட்டுகளில் கண்களை மூடிக் கொண்டு ஏறி, இறங்கிப் பார்ப்பேன். இப்படிச் செய்து பார்ப்பதால் என் மனைவியின் கஷ்டத்தை நான் உணர முடிகிறது. அப்படி உணர்வதால் என் மனைவியைப் பராமரிப்பது சிரமமாகத் தெரியவில்லை.

  இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். என் மனைவிக்குப் பார்வை இழப்பு ஏற்பட்டதிலிருந்து பெரிய அளவுக்கு எனக்கு உடல் நலக் குறைவு எதுவும் ஏற்பட்டதில்லை. இதற்குக் காரணம், மனவலிமை என்றுதான் நினைக்கிறேன். நாம் நன்றாக இருந்தால்தான் மனைவியைப் பார்த்துக் கொள்ள முடியும். எனக்கு முடியாமல் போய்விட்டால் யார் அவரைப் பார்ப்பது என்று அடிக்கடி நினைப்பேன்.

  நான் ஆரோக்கியமாக வாழ்வது ரொம்ப முக்கியம். அதனால் சாப்பாட்டு விஷயத்தில் நான் மிகக் கண்டிப்பாக இருப்பேன். அளவாகச் சாப்பிடுவேன். அளவுக்கும் குறைவாகக் கூடச் சாப்பிடுவேன். ருசிக்காக அளவுக்கு அதிகமாகச் சாப்பிடமாட்டேன்.

  என் மனைவி ஒரு பள்ளி ஆசிரியர். அவர் எம்.ஏ., பி.எட். படித்தவர். அவருக்குப் பார்வையிழப்பு ஏற்படும் வரை வேலை கிடைக்காமல்தான் இருந்தது. பார்வையிழப்பு ஏற்பட்டதும் அந்த ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது.

  மனைவியைத் தினமும் பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவேன். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வருவேன். அவர் மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடங்களைப் படித்துக் காட்டுவேன். அவர் தமிழ் ப்ரெயில் கற்றிருப்பதால் அதை அந்த முறையில் குறித்துக் கொள்வார்.

  மாணவர்களுக்குத் தேவையானவற்றை அவர் சிறப்பாகச் சொல்லிக் கொடுக்கிறார்.

  நானும் என்னுடைய மனைவியும் பிள்ளைகளுடன் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எதற்கு வீண் சிரமம்? மனிதன் பிறருக்குச் சந்தோஷத்தைத் தரலாம். ஆனால் ஒரு பெர்சன்ட் கூட கஷ்டத்தைத் தரக் கூடாது என்று நினைப்பவன் நான். முடிந்தவரை பிள்ளைகளுக்குத் தொல்லை தரக் கூடாது. முடியாத காலத்தில் வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம் என்பதால் நானும் மனைவியும் தனியாகவே இருக்கிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஓா் அணியில் இணைய வேண்டும்

ரிலையன்ஸ் ரீடெய்ல் வருவாய் 2-வது காலாண்டில் 18% உயர்வு!

தீபாவளி பண்டிகை: சென்னையில் 18,000 போலீஸார் பாதுகாப்பு

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை..!

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு

SCROLL FOR NEXT