"பாண்டி' படத்தை இயக்கிய ராசுமதுரவன் இயக்கத்தில் 10 இயக்குநர்கள் இணைந்து நடிக்கும் "மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இத்தனை பேரையும் ஒருங்கிணைத்து இயக்கிய அனுபவம் குறித்து ராசுமதுரவனிடம் கேட்டபோது...
""உண்மையில் ஒரு நாள் கூட எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. பத்து ஹீரோக்களை நடிக்க வைத்திருந்தால் ஒருவேளை ஈகோ பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். "திமிரு', "காளை' படங்களை இயக்கிய தருண்கோபிதான் கதாநாயகன். அவருடன் சீமான், மணிவண்ணன், ராஜ்கபூர் உள்ளிட்ட பத்து இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் தொடங்கிய நாளிலிருந்து சீமான் சிறைக்கு போவதும் வருவதுமாக இருந்தார். அவருக்குப் பதிலாக வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே என்று கூட பலர் யோசனை கூறினார்கள். ஆனால் அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போதெல்லாம் படப்பிடிப்பு, டப்பிங் என அவருடைய போர்ஷன்களை முடித்தோம்.
இது ஓர் ஆக்ஷன் படம்தான். ஆனால் அரிவாள், வன்முறை, அடிதடி, ரத்தம் என எந்த விஷயமும் இல்லை. மாறாக மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தரும் வித்தியாசமான ஆக்ஷன் படமாக எடுத்திருக்கிறோம்'' என்றார்.
வித்தியாசமானவன் வித்தகன்!
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு "வித்தகன்' படம் மூலம் மீண்டும் கதாநாயகன் ஆகியிருக்கிறார் பார்த்திபன். இடைவெளிக்கான காரணம் குறித்துக் கேட்டபோது...
""பச்சைக்குதிரை' படத்துக்குப் பிறகு உடனடியாகத் தொடங்கியிருக்க வேண்டிய படம். ஆனால் அப்போது படத்துக்குத் தேவையான பொருளாதார வசதி இல்லை. அதன்பிறகு செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்தேன். மூன்று மாதத்தில் முடிந்துவிடும் என்று நினைத்தால் அந்தப் படம் ஒன்றரை ஆண்டு இழுத்துவிட்டது. அதற்காக செல்வராகவனைக் குறை சொல்ல வில்லை. என்னுடைய சினிமா கேரியரிலேயே "ஆயிரத்தில் ஒருவன்' போல ஒரு படத்தை இனி நானே செய்யமுடியுமா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு அந்த படம் சிறப்பாக வந்துள்ளது. "வித்தகன்' படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக வருகிறேன். மாணிக்கம் நாராயணன் தயாரிக்கிறார். நான் இயக்கி நடிக்கும் படங்களிலேயே மிக அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இதுதான். இதுவரை வந்த எந்த போலீஸ் கதையையும் நினைவுபடுத்தாத வகையில் வித்தியாசமாகவும் முழுக்க முழுக்க கமர்ஷியலாகவும் உருவாக்கியிருக்கிறேன்'' என்றார் பார்த்திபன்.
சரித்திர சரத்குமார்!
கேரள ஸ்டார் மம்முட்டியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள படம் "பழஸிராஜா'. கதாநாயகியாக கனிஷ்கா நடித்துள்ளார். ரூ.25 கோடியில் தயாராகும் இந்தப் படம் பல சர்ச்சைகளை எழுப்பும் என்கிறது சினிமா வட்டாரம். இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஹரிஹரன் கூறியதாவது:
""இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் தயாராகிறது. இந்திய விடுதலைக்குப் போராடிய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மலபார் மன்னர் பழஸிராஜாதான். ஆனால் இந்த உண்மை சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் வில்லியம் லோகனின் "மலபார் மேனுவல்' என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பழஸிராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். 1797 முதல் 1805-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தைப் பற்றி விவரிக்கும் இந்தப் படம் வெளிவந்த பிறகு யார் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற சர்ச்சை எழலாம். இதில் பழஸிராஜாவாக மம்முட்டியும் அவருடைய வீரத் தளபதியாக சரத்குமாரும் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். படம், சர்வதேச அளவில் வசூலையும் பாராட்டுகளையும குவிக்கும் என்றார்.
மலையனுக்கு முருகதாஸ் வாழ்த்து!
படத்துக்குப் படம் புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தும் சில ஹீரோக்களின் பட்டியலில் கரணின் பெயரும் இடம்பெற்றுள்ளது. தற்போது கரண் நடித்து வரும் "மலையன்' படத்தை புதியவர் எம்.பி.கோபி இயக்குகிறார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கரண் பற்றி கூறுகையில்...
""வில்லன், குணசித்திர நடிகர் என பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தைரியமாக படங்களில் நடிப்பதை நிறுத்தினார் கரண். அதற்கு பெரிய துணிச்சல் வேண்டும். அதன்பிறகு கடின உழைப்பு, விடா முயற்சி காரணமாக இன்று பெரிய இடத்துக்கு உயர்ந்துள்ளார். புதிய இயக்குநர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுடைய படங்களில் தைரியமாக நடிக்கிறார். சினிமாவில் ஜெயிக்கப் போராடிக் கொண்டிருக்கும் திறமையுள்ள புதிய இயக்குநர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடைய படங்களில் நடிப்பதற்கு தைரியம் வேண்டும். அது கரணிடம் இருக்கிறது. இதே மனோபாவம் மற்ற ஹீரோக்களுக்கும் வரவேண்டும்'' என்றார் அஜித்தால் "தீனா' படத்தில் அறிமுகமாகி இன்று இந்தியாவின் வெற்றிகரமான இயக்குநர் எனப் பெயரெடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.