நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். மிகவும் ஒல்லியாகவும், தேக வலுவின்மை, மனம் மற்றும் உடல் உறுதியின்மை, நினைத்தவற்றைச் செய்யும் கட்டுப்பாடின்மை, சோம்பேறித்தனம், எண்ணச் சிதறல் போன்றவற்றால் அதிகத் துன்பப்படுகிறேன். இதிலிருந்து தீர்வு எப்படிக் கிடைக்கும்?
குமார், களக்காடு.
எப்போதும் சுகத்தோடு வாழ வேண்டும் என்று மனிதர்கள் விரும்புவது இயற்கையே. நிலைத்த உடல் மற்றும் மன இன்பத்தைத் தரும் வழிகளை ஆயுர்வேதம் கீழ்காணும் வகையில் கூறுகிறது.
1.காலோ அனுகூல: காலம் அனுகூலமாக இருத்தல். காலம் என்பது பருவமாகலாம். ஜீர்ணாஜீர்ண காலமாகலாம். நோயின் விஸ்வரூபத்திற்கு எதிரான மருந்துகள் மற்றும் செய்கைகள் காலமாகலாம். வயதையும் காலத்தையும் இணைக்கலாம்.
பருவகாலம் மனிதர்களுக்கு வசப்படாதவை. அதற்குத் தக்கவாறு நம் உடலைப் பாதுகாக்க வேண்டும். கடும் கோடையில் கரும்புச்சாறு, இளநீர், நுங்கு, தர்பூஸ், கிர்ணிப்பழம் போன்றவற்றைச் சாப்பிட்டு, உடல் நீரை வற்றிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளும் செயல்களில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்தவும். வெளியே தெரியும் இந்தக் கால மாற்றத்தைப் போல, நீங்கள் உங்களுடைய உடல் உட்புற மாற்றங்களை மலம், சிறுநீர், வியர்வை ஆகிய கழிவுகளின் வழியாக நன்றாக அறியலாம். இவற்றில் ஏற்படும் நிறமாற்றம், வாசனை, அளவு, நேர அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உணவு மற்றும் செயல்களில் செய்யப்படும் மாற்றத்தின் வாயிலாக, நாம் இழந்த ஆரோக்கியத்தை மறுபடியும் பெறலாம். உதாரணத்திற்கு இவை அனைத்தும் மஞ்சள் நிறமாகவும், துர்நாற்றம் கொண்டவையாகவும், அளவில் அதிகமாகவும், அடிக்கடி வெளியேறினால் பித்ததோஷத்தின் சீற்றம் ஏற்பட்டிருப்பதை ஊகித்து, அதற்கு எதிரான கசப்பு, துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவைகளின் மூலம் பித்தத்தைக் கீழடக்கி, உடல் ஆரோக்கியம் பெறலாம். இதுபோன்ற மாற்றங்களை நீங்கள் கூர்ந்து கவனித்து அவற்றை ஏற்படுத்திய காரணங்களைத் தவிர்த்து ஏற்பட்டுள்ள சீற்றத்தைத் தணிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஜீர்ணாஜீர்ணகாலம் என்பது உண்ட உணவு நன்றாக ஜீரணமாகிவிட்ட நிலை அல்லது ஜீரணமாகாத நிலையைக் குறிப்பது. இவ்விஷயத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். விடும் ஏப்பம் சுத்தமாக இருத்தல், உற்சாகம், மலம் சிறுநீர் தடையின்றி வெளியேறுதல், உடல் லேசாக இருத்தல், பசி தாகம் நன்றாக எடுத்தல் போன்றவை, நீங்கள் முன் உண்ட உணவு நன்றாகச் செரித்துவிட்டதற்கான அடையாளங்கள். இவற்றிற்கு நேர்எதிரான அடையாளங்கள் வயிற்றில் உணவுத் தேக்கத்தைத் தெரியப்படுத்துகின்றன. அவற்றின் தேக்கம் நீங்கும் வரை நீங்கள் அடுத்த உணவைச் சாப்பிடாதிருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.
ஒரு நோய் உங்களிடம் விஸ்வரூபம் எடுத்தால் அதை உதாசீனப்படுத்தாமல் உணவு மற்றும் மருந்துகளைச் சரியான முறையில் அமைத்து அதிலிருந்து விரைவில் விடுபட முயற்சி செய்வது நீண்ட ஆயுளுக்கான வழியாகும்.
கப தோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, மினுமினுப்பு, நிலைப்பு ஆகியவை காணப்பட வேண்டிய உங்களுடைய வயதில் ஒன்றையும் காணவில்லை. அதற்குக் காரணம் பசித் தீயின் செயல்திறன் உங்களுக்கு மந்தமாகியுள்ளது. பசித்தீயை வளர்க்கும் உணவையும் மருந்தையும் மருத்துவரிடம் நீங்கள் உங்களுடைய உடலைக் காண்பித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
2.விஷயா மனோஞா: மனதை இன்பமுறச் செய்யும் செய்கைகளில் ஈடுபடுத்துதல். மனமகிழ்ச்சியால் உடல் புஷ்டி ஏற்படும். மனத்துன்பம் உடல் வாட்டத்தை ஏற்படுத்தும்.
3. தர்ம்யா:கிரியா: செய்யும் செயல்கள் அனைத்தும் தர்மத்திற்கு உட்பட்டவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அதுவே உடல் மற்றும் மனவலிமைக்கு சிறந்த விதையாகவும் அமையும்.
4. கர்ம ஸýகானுபந்தி: நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் சுகமான அனுபவத்தைத் தரும்படியாக இருக்க வேண்டும். தீய செயல்கள் என்றும் சுகத்தைத் தராது.
5. சத்வம்விதேயம்: சத்வம் என்றால் மனம். விதேயம் என்றால் சுதந்திரம். சுதந்திரமான உள்ளத்திற்கு விவேக சக்தி கூடுகிறது. நல்லதும் கெட்டதும் அது போன்ற உள்ளத்தினால் நன்கு ஆராயப்பட்டு, நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, உள்ளம் சுதந்திரமாக இருக்கும்போது பெறுகிறது.
6.விசதா புத்தி: தெளிந்த அறிவு. நல்ல நண்பர்களின் சேர்க்கையினாலும், சான்றோர்களின் சொற்பொழிவுகளின் மூலமாகவும் நீங்கள் தெளிந்த அறிவைப் பெற்றால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உபாதைகள் பலவும் நீங்கிவிடும்.
7.தீரஸ்ய: நல்லவற்றை மனம் நாடி, தெளிந்த அறிவைப் பெற்று அதைச் செயலாக்குவதில் வைராக்யம் கொண்டிருத்தல்.
மேற்குறிப்பிட்ட ஏழு விஷயங்களிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு நீடித்த நிலைத்த இன்பத்தை நீங்கள் நிச்சயம் பெறலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.