முகப்பு
தினமணி கதிர்

மருத்துவம்: இளமையே யோசி; முதுமையை நேசி!

முதியவர்களுக்கான பரிபூரணமான மருத்துவ சிகிச்சை முறையை இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே முதன்முதலாக உண்டாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் டாக்டர் ஆர்.சிவராமன்.   முதியவர்களுக்கான உயர்நிலை சிறப்பு சிகிச்ச

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:10 PM
பகிர்:

முதியவர்களுக்கான பரிபூரணமான மருத்துவ சிகிச்சை முறையை இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே முதன்முதலாக உண்டாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் டாக்டர் ஆர்.சிவராமன்.

  முதியவர்களுக்கான உயர்நிலை சிறப்பு சிகிச்சை மையத்தை 1980-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும், அரசு பொது மருத்துவமனையில் டீனாகவும் இருந்து பணி ஓய்வு பெற்றவர். எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகத்தின் உதவி துணைவேந்தராகவும் இருந்திருக்கிறார்.

  டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெüரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் டாக்டர் ஆர்.சிவராமனுக்கு இந்திய அரசின் கெüரவமிக்க விருதான பத்மஸ்ரீ விருதும் சமீபத்தில் வழங்கப்பட்டது.  தற்போது "கெஸ்ட்' மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார். முதியவர்களுக்கு அளிக்கப்படும் உயர்நிலை சிகிச்சையின் அவசியம் குறித்தும் தேவை குறித்தும் டாக்டர் ஆர்.சிவராமன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

  ""இந்திய மக்கள் தொகையில் 10 கோடி பேர் முதியவர்கள். உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் முதியவர்கள். இந்தியாவில் மருத்துவ அறிவியல் துறையின் வளர்ச்சியால் இந்தியரின் சராசரி வயது 65-ஆக உயர்ந்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் இந்தியரின் சராசரி வயது 40-45 என்ற அளவிலேயே இருந்தது. வரும் 2025-ம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். அதற்கேற்றாற்போல் முழுக்க முழுக்க முதியவர்களுக்கான ஒருங்கிணைந்த பரிபூரண சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை மாவட்டம் தோறும் அரசு உண்டாக்க வேண்டும்.

  சமூக மாற்றத்தால் மட்டுமே முதியோர் நலனைக் காக்க முடியும். "முதுமையை நேசி; உனக்கும் வரும் யோசி' என்பதை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லவேண்டும். அப்போதுதான் முதியோர் இல்லங்கள் நாட்டில் குறையும்.

  நமது நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அளவுக்கு அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதிகள் அதிகரிக்கவில்லை. வயதான காலத்தில் ஒரு நோய்க்கு மருத்துவம் பார்க்கும் போதே, இன்னொரு நோயின் அறிகுறி இருப்பதை கண்டறிவதற்கும், அதற்கான ஒருங்கிணைந்த சிகிச்சையை அளிப்பதற்கும் மிகுந்த அனுபவ அறிவு தேவை. அப்படிப்பட்ட அனுபவ அறிவுமிக்கவர்களின் ஆலோசனைப்படிதான் முதியவர்களுக்கான சிகிச்சை மையங்கள் உண்டாக்கப்படவேண்டும். ஒரே குடையின் கீழ் முதியவர்களுக்கான அனைத்து மருத்துவமும் செய்யப்படவேண்டும் என்பதுதான் அரசுக்கு என்னுடைய கோரிக்கை. அப்போதுதான் அவர்களுக்கு திடீர் திடீரென உண்டாகும் நோய்களைக் கண்டறிந்து அதற்கு மருத்துவம் பார்க்கமுடியும்.

  பொது மக்களிடையே முதியவர்களுக்கான சிகிச்சை முறையை வலியுறுத்தியும், அது தொடர்பான விழிப்புணர்வையும் "சுஷ்ருதா' என்னும் அமைப்பின் கீழ் கடந்த 15 வருடங்களாகச் செய்துவருகிறேன். இந்த அமைப்பின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதியோர் இல்லங்கள், ரோட்டரி சங்கங்கள், அரசு மருத்துவமனைகளில்... என ஆயிரக்கணக்கான முதியவர்களுக்கு வைத்தியம் பார்த்திருக்கின்றேன். அவர்களின் பரிபூரணமான ஆசீர்வாதத்தால்தான் எனக்கு இந்த பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்'' என்றார் நெகிழ்ச்சியோடு டாக்டர் ஆர்.சிவராமன்.

முழு கட்டுரையைப் படிக்க →