முகப்பு
தினமணி கதிர்

முகங்கள்: விரல்கள் பின்னும் நினைவுகள்!

நாற்பது வயதைக் கடந்தாலே பலருக்கு எதையும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் போய்விடுகிறது. "ஆமாம், இனி மேல் கற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்' என்பார்கள். ஆனால் இப்போதும் சிறு பெண் போலவே ஆர்வம் பொங்

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:10 PM
பகிர்:

நாற்பது வயதைக் கடந்தாலே பலருக்கு எதையும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் போய்விடுகிறது. "ஆமாம், இனி மேல் கற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்' என்பார்கள். ஆனால் இப்போதும் சிறு பெண் போலவே ஆர்வம் பொங்க எம்பிராய்டரி கற்றுக் கொண்டிருக்கிறார் தயாநிதி அம்மாள். அவருக்கு வயது 75. இந்த வயதிலும் தனக்கு எம்பிராய்டரியில் தெரியாததைக் கற்றுக் கொள்வதற்காக சென்னையிலிருந்து விருதுநகருக்கு சமீபத்தில் போய் வந்திருக்கிறார் அவர்.

  அவர் புடவைகளில் செய்து காட்டியிருக்கும் மிகுந்த கலைத்திறன் உள்ள எம்பிராய்டரி வேலைப்பாடுகள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கின்றன.

  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம். பேசிய பின்தான் தெரிந்தது இந்த எம்பிராய்டரி வேலையில் அவர் இறங்கியதற்கான சோகமான பின்னணி....

  எப்போதிலிருந்து இந்த எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்வதில் இறங்கினீர்கள்?

  நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போதே எம்பிராய்டரி வேலையைக் கற்றுக் கொண்டேன். ஆசிரியர்கள் அப்போது கற்றுத் தந்தது அடிப்படையாக அமைந்தது. எனக்கு இதில் ஆர்வம் அதிகம். யார் எம்பிராய்டரி போட்டாலும் அதை ஆர்வமாகக் கவனிப்பேன். என்ன புதிதாகப் போடுகிறார்கள் என்று பார்ப்பேன். என் அக்கா மிக நன்றாக எம்பிராய்டரி போடுவார்கள்.

  திருமணத்திற்குப் பின் உங்கள் கணவர் எதுவும் சொல்லவில்லையா?

  அந்தக் கால வழக்கப்படி, 15 வயதிலேயே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. கணவர் பருப்பு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். என்னிடம் மிகவும் பிரியமாக இருப்பார். மிக மிக அன்பாக நடந்து கொள்வார். நான் எம்பிராய்டரி போடுவதில் அவருக்கு ரொம்பப் பெருமை. என்னை மிகவும் ஊக்குவிப்பார்.

  எனக்குக் குழந்தைகள் பிறந்தன. 1955 இல் எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. என் கணவர் மாரடைப்பு வந்து என்னைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டார். அப்போது எனக்கு 21 வயது. இரண்டு குழந்தைகள். மூன்றாவது பையன் வயிற்றில். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எதிர்காலம் இருண்டு கிடந்தது.

  பெற்றோர் வீட்டிலும், கணவர் வீட்டிலும் கொஞ்சம் வசதி இருந்தது. பொருளாதாரரீதியாக பெரிய அளவுக்குக் கஷ்டமில்லை. ஆனால் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அந்த இளம் வயதில் தனியாக வாழ்வது எவ்வளவு கொடுமை?

  அவர் பிரிவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் பிள்ளைகள் முன் அழ மாட்டேன். அவர்கள் முன்பு நான் அழுதால் அவர்களை யார் தேற்றுவது? அவர்கள் தைரியத்தை இழந்துவிடக் கூடாதல்லவா? அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்வேன். பிள்ளைகள் இரவு தூங்கியதும் மனம் உடைந்து அழுவேன். இப்படி எத்தனையோ நாட்கள்?

  அவர் மறைந்த கவலையை மறக்க எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் வேலைகள் முடிந்த நேரங்களில் எம்பிராய்டரி போட்டுக் கொண்டிருந்தேன். எனது முழுக் கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் அதுவே என் கவலையை மறப்பதற்கு மருந்தாயிற்று.

  மிகச் சிறந்த வேலைப்பாடுகளுடன் உங்களுடைய எம்பிராய்டரி வேலைகள் இருக்கிறதே, எங்காவது பயிற்சி எடுத்துக் கொண்டீர்களா?

  புதுப் புது வடிவங்களில் எம்பிராய்டரி போடுவதற்காக எந்நேரமும் யோசித்துக் கொண்டிருப்பேன்.

  பள்ளியில் படிக்கும்போது கற்றுக் கொண்டது போக பின்னர் சென்னையில் இதற்கென்று உள்ள வகுப்புகளுக்குச் சென்றும் கற்றுக் கொண்டேன்.

  கற்றுக் கொள்வதில் நான் கெüரவம் பார்ப்பது கிடையாது. என் பேத்தியிடம் இருந்து கூட கற்றுக் கொண்டிருக்கிறேன்.

  இத்தனை வருடங்களாக நான் இந்த எம்பிராய்டரி வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் இதில் உள்ள ஆர்வம் மட்டும் எனக்கு இப்போதும் குறையவில்லை. எம்பிராய்டரி எனக்கு உயிர் மாதிரி. ஒரு சேலையில் எம்பிராய்டரி போட்டு முடித்ததும் அடுத்த சேலையில் எம்பிராய்டரி போட வேண்டும்போல் இருக்கும்.

  ஏதாவது கண்காட்சிக்குப் போனாலும் அங்கே உள்ள எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகளை ஆர்வமுடன் பார்ப்பேன். அதில் ஏதாவது புதிதாகச் செய்திருந்தால் அதைக் கவனமாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நானே அதே மாதிரி செய்து பார்ப்பேன்.

  எம்பிராய்டரி போட்டுத் தருவதை ஒரு தொழிலாகச் செய்திருந்தால் வருமானம் கிடைத்திருக்குமே?

  ஒரு சேலையில் எம்பிராய்டரி போட 4 - 5 நாள் கூட ஆகும். நான் நன்றாக எம்பிராய்டரி போடுவதைப் பார்த்து சிலர் என்னிடம் எம்பிராய்டரி போட்ட புடவைகளை விலைக்குக் கேட்பார்கள். அந்தப் புடவையைக் கடையில் போய் வாங்கினால் 7 ஆயிரம் ரூபாய் ஆகும் என்றால் என்னிடம் அவர்கள் 3 ஆயிரத்துக்குத் தருகிறாயா? என்பார்கள். எம்பிராய்டரி போடப்பட்ட ஒரு ப்ளவுஸ் கடையில் 50 ரூபாய் என்றால் என்னிடம் 20 ரூபாய்க்குக் கேட்பார்கள். இதனால் பிறருக்கு எம்பிராய்டரி வேலைகள் செய்து கொடுப்பதில்லை.

  இது ஒரு வெட்டி வேலை என்று அக்கம்பக்கம் உள்ளவர்கள் குறை சொல்லவில்லையா?

  நான் மிக அழகாக எம்பிராய்டரி வேலைகளைச் செய்வதைப் பார்த்து எல்லாரும் பாராட்டினார்கள். யாரும் குறை சொல்லவில்லை. சொந்தக்காரர்கள், அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு எல்லாம் போட்டுக் கொடுத்தேன். அமெரிக்காவிலும் மலேசியாவிலும் உள்ள என் உறவுப் பெண்களுக்கு எல்லாம் நான் சேலையில் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்து கொடுத்திருக்கிறேன்.

  நான் செய்யும் இந்த வேலைப்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு மலேசியாவில் உள்ள "சினி பேஷன்' என்ற பத்திரிகையில் என்னைப் பற்றி கட்டுரை வந்தது.

  எப்போது பார்த்தாலும் எம்பிராய்டரி போடுவதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததால் இது உங்களுடைய வீட்டு வேலைகளைப் பாதிக்கவில்லையா?

  இப்படி ஏதாவது ஒரு துறையில் ஒருவர் மிகுந்த ஆர்வமாக இருந்தால் பிறவற்றில் கவனம் செலுத்தமாட்டார்கள். அல்லது ஏனோதானோவென்று கவனம் செலுத்துவார்கள். ஆனால் நான் வீட்டு வேலைகளையும் கூட மிகுந்த கவனத்துடன் செய்வேன்.

  சமையல் செய்யும் போது அதிலேயே என் முழுக் கவனமும் இருக்கும். சமையல் வேலையை முடித்துவிட்டு அதற்குப் பிறகுதான் எம்பிராய்டரி செய்வதைப் பற்றி யோசிப்பேன்.

  எம்பிராய்டரி வேலை செய்வது தவிர வேறு என்ன பொழுதுபோக்கு?

  டிவியில் சீரியல் பார்ப்பேன். என்றாலும் அப்போதும் கை தைத்துக் கொண்டிருக்கும். எனக்கு எம்பிராய்டரி பொழுதுபோக்கல்ல. அவரில்லாத என் வாழ்வுக்கு இதுவே துணை.

  அவர் மறைந்த கவலையை மறக்க, அவர் இல்லாத பொழுதுகளை ஈடுகட்ட எனக்கு இந்தக் கலை மட்டுமே துணையாக இருந்தது; இருக்கிறது. அதனால்தான் இத்தனை வயதானாலும் இதை விட்டுவிட எனக்கு மனம் வரவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →