முகப்பு
தினமணி கதிர்

நெகிழ்ச்சி: நடிக்கும் கனவு நிறைவேறியது... ஆனால்?

ரஜினி மாதிரி ஸ்டைல் பண்ண ஆசை... சிவாஜி மாதிரி அழுவதற்கு ஆசை... எம்.ஜி.ஆர். மாதிரி சிலம்பாட்டம் ஆட ஆசை... இப்படி நிறைய ஆசைகளோடு சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் எஸ்.ஆர்.முகேஸ். நடிக்க மட்டுமல்ல, படத்த

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:09 PM
பகிர்:

ரஜினி மாதிரி ஸ்டைல் பண்ண ஆசை... சிவாஜி மாதிரி அழுவதற்கு ஆசை... எம்.ஜி.ஆர். மாதிரி சிலம்பாட்டம் ஆட ஆசை... இப்படி நிறைய ஆசைகளோடு சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் எஸ்.ஆர்.முகேஸ்.

நடிக்க மட்டுமல்ல, படத்தின் தயாரிப்பாளருமாகிவிட்டார். "சைதா செல்லா' என்ற படத்தின் தயாரிப்பாளரும் அவரே. அந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஜோடியாக நடிகை சீதா.

மதுரையிலிருந்து சென்னைக்கு நடிக்க வந்த எஸ்.ஆர்.முகேஷ் நினைத்த மாதிரியே நடித்து விட்டார். ஆனால் நடிக்க வந்த இடத்தில் அவருக்கு ஏற்பட்ட பேரிழப்பு, அது யாருக்கும் வரக் கூடாது.

ஆம். அவருடைய அருமை மகனை இழந்துவிட்டார் எஸ்.ஆர்.முகேஷ்.

""இந்த சினிமா எனக்குக் கோடிகோடியாகக் கொடுத்தாலும்...என்ன பயன்? என் ஆசை...என் கனவு எல்லாவற்றையும் இழந்துவிட்டேனே'' எனக் கலங்கும் அவரிடம் பேசினோம்.

நடிக்க வந்தது எப்படி?



எனக்கு மதுரைதான் சொந்த ஊர். முதலில் ஏலக்காய், மிளகு, காப்பி போன்ற மலையில் விளையும் பொருட்களை வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். அதற்குப் பின் ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தேன். டிராவல்ஸ் ஒன்றையும் நடத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் மனதுக்குள் எப்போதும் சினிமா ஆசை ஓடிக் கொண்டிருந்தது.

அதற்கான சந்தர்ப்பமும் வந்தது. டைரக்டர் சீத்தாபதி என்னை அணுகிய போது உடனே ஓ.கே.சொல்லிவிட்டேன்.



படத்தையும் நானே தயாரிப்பது என்று முடிவாகியது.

   பிற தொழில்களைவிட சினிமாத் தொழில் கஷ்டமானதுதான். காலை ஆறு மணிக்கு எழுந்து 7 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போக வேண்டும். இரவு ஏழு மணிக்குத்தான் வேலை முடிந்து வர முடியும். மழையானாலும் வெயிலானாலும் கஷ்டப்பட்டு உழைக்க  வேண்டும்.

குடும்பத்தினரைப் பற்றி?

எனக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்த மகன் நாகேந்திரன். இரண்டாவது மகன் நரேந்திரன். மகள் நர்மதா.

நரேந்திரன்  கோவையில் பைலட் வேலைக்குப் படித்துக் கொண்டிருந்தான். மொத்தம் 3 வருடப் படிப்பு. இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருந்தான்.

 உங்கள் மகன் நரேந்திரன் சென்னைக்கு எதற்கு வந்தார்? அந்தத் துயரமான சம்பவம் எப்படி நிகழ்ந்தது?

நான் படத்தில் நடிக்கிறேன் என்றதும் ஷூட்டிங் பார்க்க நண்பர்களோடு வந்திருந்தான். ஐயப்பன் தாங்கலில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. நான் இன்ஸ்பெக்டர் கெட் அப்புடன் சீதாவுடன் நடித்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரம் ஷூட்டிங் பார்த்துவிட்டு நரேந்திரன் தனது நண்பர்களுடன் மெரினா பீச்சுக்குச் சென்றுவிட்டான்.

நரேந்திரன் பார்க்க நல்ல சிவப்பாக, ஆறடி உயரம் இருப்பான். என்னைவிட அவனுடைய அம்மாவிடம்தான் அவனுக்கு ரொம்ப ஒட்டுதல். பிளேன் ஓட்ட ரொம்ப ஆசை. பயம் என்றால் என்னவென்றே தெரியாது. நன்றாகப் படிப்பான். நன்றாக விளையாடுவான். நண்பர்கள் என்றால் உயிர்.  ஜாலியாக இருப்பான். ஷூட்டிங் பார்க்க வந்தபோது மிகச் சீக்கிரமாக எல்லாருடனும் பழகிவிட்டான்.  சீதாவுடன் நின்று போட்டோ கூட எடுத்துக் கொண்டான்.

அன்று ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. நடிகை சீதாவின் கால்ஷீட் அன்றோடு முடிகிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அன்றோடு முடித்துவிட வேண்டும். நான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தேன்.

ஒரு போன் வந்தது.

நரேந்திரனின் நண்பர்களிடம் இருந்து வந்த போன். என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

""அங்கிள், நரேந்திரனும் நாங்களும் பீச்சில் கிரிக்கெட் விளையாடிக்கிட்டிருந்தோம். பந்து தண்ணீருக்குள் போயிருச்சு. அதை எடுக்கப் போன நரேந்திரனைக் காணலை அங்கிள். ரொம்ப நேரம் தேடியும் காணலை''

எதிர்முனையில் கேட்ட குரல் என்னை உலுக்கியெடுத்தது. தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. மனது படபடவென அடித்துக் கொண்டது. போன் வரும் போது மணி மாலை ஐந்தரை இருக்கும். ஆறு மணிக்கு ஷூட்டிங் முடிந்துவிடும். ஷூட்டிங்கை நிறுத்துவதா? வேண்டாமா? என்று மனதுக்குள் ஒரே பதற்றம்.

என்ன செய்தீர்கள்?

ஷூட்டிங்கைப் பாதியில் நிறுத்திவிட்டால் திரும்பவும் சீதாவின் கால்ஷீட் கிடைக்காது. எதுவும் பேசாமல் சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தேன். எனக்குப் போன் வந்ததைப் பற்றியோ, என் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களையோ யாரும் கவனிக்கவில்லை. அவரவர் வேலையில் எல்லாரும் பிஸியாக இருந்தார்கள். போன் வந்ததைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஷூட்டிங் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. சீதா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டன. மனதைக் கல்லாக்கிக் கொண்டு நானும் நடித்தேன். வாழ்க்கையிலேயே யாருக்கும் வரக் கூடாத நிலைமை அது. மனது எங்கோ  இருந்தது. பேக் அப் செய்யத் தொடங்கினார்கள். அதுவரைக்கும் அடக்கி வைத்திருந்த என் உணர்ச்சிகளை அதற்குமேல் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. சீதாவிடம் விஷயத்தைச் சொன்னேன். அதிர்ச்சியில் எல்லாரும் பேச வார்த்தைகளின்றி நின்றார்கள்.

அதற்குப் பிறகு மகனைத் தேடி மெரீனா பீச்சுக்கு ஓடினேன். சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை தேடியும் கிடைக்கவில்லை. ""என் மகனுடைய உயிரைத்தான் பறித்துக் கொண்டாய் கடவுளே...உடலையாவது காட்டு'' என்று  கதறினேன். ஹெலிகாப்டர் வைத்துத் தேடியும் என் மகனின் உடலைக் காண முடியவில்லை.

இதற்குள் மதுரையில் இருக்கும் உறவினர்களுக்கு, மனைவிக்குத் தகவல் கொடுத்து...

இரண்டு நாட்கள் கழித்துத் தானாகவே என் மகனின் உடல் சென்னைக் கடற்கரையில் ஒதுங்கியது.

சினிமாவில் நடிக்க வந்து என் மகனைப் பறி கொடுத்து நிற்கிறேன்.

நினைக்க நினைக்க மனதில் இழப்பின் துயரம் அழுத்திக் கொண்டே இருக்கிறது. பைத்தியம் பிடித்தது போல இருக்கிறது.

ஒரு மாதம் இடைவெளிவிட்டு திரும்பவும் படப்பிடிப்பைத் தொடங்கினேன்.

மனதுக்குள் வேதனை இருந்து கொண்டே இருக்கிறது.

தீபாவளி நெருங்கி வரும் சமயம், மகன் நரேந்திரன் அவனுடைய அம்மாவின் கனவில் வந்து ""தீபாவளி டிரஸ் எடுக்கலையா எனக்கு?'' என்று கேட்டிருக்கிறான்.

இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகக் கழிந்தது.

இந்தப் படம் நன்றாக ஓடலாம். கோடிகோடியாகக் கொடுக்கலாம். ஆனால் என் மகன்...எனக்குத் திரும்பக் கிடைப்பானா? நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டு வெறும் ஆளாக நிற்பதைப் போல இருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →