FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம் என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்திருப்பது....

Updated On : 30 ஏப்ரல் 2026, 11:53 am IST
மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம் - சிபிஐஎம்
பகிர்:

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம் என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மே நாள் வாழ்த்துச் செய்தியில்,

உழைப்பவருக்கே உலகம் உரியது என்று எட்டுத் திசையிலும் கொட்டி முழக்கமிடுவதே மே நாளாகும். எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்பதைக் குருதி சிந்தி, உயிர் நீத்து போராடிப் பெற்றுக் கொடுத்த தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான தியாகிகளுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றும் உலகம் உயிர்ப்புடன் இயங்கிட கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே நாள் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

Advertisement

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் விண்ணைத் தாண்டி வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்து வருகிறது. இத்தகைய வளர்ச்சிகள் அனைத்தையும் தன்வயப்படுத்தி லாபமீட்டும் முதலாளித்துவ வர்க்கம் மிகக் கொடூரமான சுரண்டலை தொழிலாளர்கள் மீதும், வெகுஜன மக்கள் மீதும் தொடுத்து வருகிறது. இதன் வெளிப்பாடே உலகம் முழுமையும் பில்லியனர்கள் எண்ணிக்கை 3000-த்தை கடந்திருப்பதும், இந்தியாவில் அது 300-ஐ தொட்டிருப்பதும் ஆகும்.

முதலாளித்துவத்தின் சுரண்டல் இந்திய மண்ணில் தங்குதடையின்றி நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டையே காணிக்கையாக்கி வருகிறது. 1961 இல் இந்திய முதலாளிகளில் முதல் 1 சதவிகிதப் பணக்காரர்களின் கையில், 11.9 சதவிகிதம் சொத்துக்கள் இருந்தது. இன்றோ கார்ப்பரேட் ஆதரவு மோடியின் ஆட்சியில் இந்திய முதல் 1 சதவிகித முதலாளிகளின் கைகளில் 70 சதவிகிதம் சொத்துக்கள் போய் சேர்ந்திருக்கிறது.

இந்தியாவின் இயற்கை வளங்களையும், வற்றாத ஜீவ நதிகளையும், கனிம சுரங்கங்களையும், அடர் காடுகளையும், ஏன் கடல் வளத்தையும் கூட கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து வருகிறது மத்திய மோடி அரசு. இதனால் மட்டும் திருப்தியடைந்து விடுமா முதலாளித்துவ வர்க்கம். அதன் அகோர கொள்ளை பசிக்கு மலிவான மனித உழைப்பும் வேண்டுமல்லவா?. எனவே, தான் கார்ப்பரேட்டுகளின் கட்டளைக்கு அடிபணிந்து மத்திய அரசு இந்திய தொழிலாளி வர்க்கம் 100 ஆண்டு காலம் போராடிப் பெற்ற உரிமைகளையும், தொழிலாளர் நலச் சட்டங்களையும் காவு வாங்குகிறது. அனைத்து மாநில அரசுகளையும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க நிர்ப்பந்தப்படுத்துகிறது.

வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணிச்சுமை, பற்றாக்குறை, வறுமை என இந்த தேசத்தின் ஒட்டுமொத்த அவலங்களையும் இந்திய உழைக்கும் மக்களும், வெகுஜன மக்களுமே சுமக்கிறார்கள். இதனோடு சேர்ந்து உலக முதலாளித்துவம் தனது லாப வெறிக்காக நடத்தி வரும் யுத்தங்களின் விளைவுகளும் பொதுமக்களின் தலை மீது இடியாக இறங்குகிறது.

இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணம் முதலாளித்துவமும், அதன் சுரண்டலுமே ஆகும். முதலாளித்துவத்தால் நெருக்கடிகளை ஒருபோதும் தீர்க்க முடியாது. கல்வி, வேலை, உணவு, சுகாதாரம், வாழ்விடம் என்கிற மனித வாழ்வின் தேவைகள் அனைத்தையும் தொழிலாளி வர்க்கம் போராடித்தான் பெற்றிருக்கிறது.

பாடுபடும் பட்டாளி வர்க்கம் இதுவரை போராடி பெற்றிட்ட உரிமைகளைப் பாதுகாத்திடவும், இழந்ததை மீளப் பெறவும், சாதி, மதம், இனம், மொழி கடந்து தொழிலாளர்களாய் ஒன்று சேர்வதும், உரிமைகளுக்காக விண்ணதிர முழங்கிடுவதுமே மே நாள் விடுக்கும் அறைகூவல் என்பதை உணர்வோம்.

இன்றும் தமிழ்நாடு உள்ளிட்டு நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் தற்காலிகப் பணி, தொகுப்பூதியம், மதிப்பூதியம், கேசுவல், காண்ட்ராக்ட், நாள்கூலி என்கிற பெயரால் நடைபெறுகிற உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக போராடி வருகிற அனைத்து தரப்பு தொழிலாளர்களோடு மார்க்சிஸ்ட் தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.

தொழிலாளி வர்க்கம் எனும் பெரும் படையே சுரண்டலுக்கு எதிராக ஆர்ப்பரித்து வா!, நமக்கான பொன்னுலகம் ஒன்றை நம்மால் தான் உருவாக்கிட முடியும். உழைப்பாளர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் மே நாள் வாழ்த்துகள் என அவர் கூறியுள்ளார்.

summary

Let Us Mobilize Against Labor Exploitation says P. Shanmugam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments