முகங்கள்: ஆசிரியர்களுக்குத் தமிழில் திறமை வேண்டும்!
பொதுவாக எழுத்தாளர்கள் செயல் வீரர்களாக இருக்கமாட்டார்கள். "என் கடன் எழுதிச் செல்வதே' என்ற எண்ணத்தில் புத்தகங்களை எழுதிக் குவிப்பதோடு அவர்கள் பணிமுடிந்துவிட்டதாக நினைப்பார்கள். குழந்தை எழுத்தாளர் எஸ்.
பொதுவாக எழுத்தாளர்கள் செயல் வீரர்களாக இருக்கமாட்டார்கள். "என் கடன் எழுதிச் செல்வதே' என்ற எண்ணத்தில் புத்தகங்களை எழுதிக் குவிப்பதோடு அவர்கள் பணிமுடிந்துவிட்டதாக நினைப்பார்கள்.
குழந்தை எழுத்தாளர் எஸ்.ஆர்.ஜி.சுந்தரம் இதற்கு விதிவிலக்கு. தான் எழுதிய புத்தகங்கள் குழந்தைகளைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகப் பள்ளி பள்ளியாக ஏறி இறங்கி பாடப் புத்தகங்களாக வைக்கச் செய்திருக்கிறார்.
குழந்தைகளுக்கான நாடகங்களை உருவாக்கி அவற்றை மேடையேற்றுகிறார்.
தான் எழுதிய குழந்தைப் பாடல்களுக்கு ட்யூன் போட்டு அவற்றைக் கேட்கும் பாடல்களாக மாற்றுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக "பாற்கடல் சிறுவர் சங்கம்' என்ற ஒன்றை அமைத்து சிறுவர்கள் பங்கு பெறும் பல நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தியிருக்கிறார்.
இவ்வளவு சாதனைகள் படைத்திருக்கும் எஸ்.ஆர்.ஜி.சுந்தரத்துக்கு வயது 70.
அந்த இளைஞரை சென்னை மடிப்பாக்கம் அருகேயுள்ள மூவரசன் பேட்டை சபாபதி நகரில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினோம்.
* குழந்தை இலக்கியத்திற்குள் நுழைந்தது எப்படி?
நான் சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் 37 ஆண்டுகள் சுருக்கெழுத்தாளராக, சேர்மனுக்கு நேரடி உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறேன். அங்கே வேலை செய்யும் பணியாளர்களிடம் பொதிந்திருக்கும் பல்வேறு திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நானும் சில நண்பர்களும் சேர்ந்து "சென்னை துறைமுக இயல், இசை, நாடக மன்றம்' என்ற அமைப்பை 1983 இல் உருவாக்கி கிட்டத்தட்ட 83 நிகழ்ச்சிகளை 13 ஆண்டுகளில் நடத்திக் காட்டியிருக்கிறோம். நான் அந்த நாடக மன்றத்தின் தலைவராக இருந்திருக்கிறேன்.
என் சிறுவயதிலேயே இலக்கியத்தின் மீது எனக்கு ஆர்வம் வந்துவிட்டது.
என்னுடைய சிறுகதை "காட்டிக் கொடுத்த கடிதங்கள்' 1957 இல் என்னுடைய 17 வது வயதில் வெளிவந்தது. அப்போது டாக்டர் வாசவனை ஆசிரியராகக் கொண்டு "துப்பறியும் கதை' என்ற மாத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. 1960 ஆம் ஆண்டில்தான் "தேன்' என்னும் சிறுவர் இதழில் முதல் சிறுவர் கதை வெளிவந்தது. இதுவரை சிறுவர்களுக்கான சிறுகதைத் தொகுப்புகளே 5 வெளிவந்துவிட்டன. மொத்தம் 10 சிறுவர் நூல்களை எழுதியிருக்கிறேன்.
குழந்தைகளுக்காக சிறுகதைகள், நாவல், நாடகங்கள், பாடல்கள் எழுத வேண்டிய தேவை என்ன?
இன்று பள்ளி ஆசிரியர்களின் எண்ணம் முழுக்க குழந்தைகளை எப்படி அதிக மார்க் எடுக்க வைப்பது என்றாகிவிட்டது.
பெற்றோரின் கடமை குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டு பணம் செலவழிப்பதுடன் முடிந்துவிடுகிறது.
நல்ல குடிமக்களாகக் குழந்தைகளை உருவாக்க வேண்டிய தேவை அப்படியே நிற்கிறது. நமது பண்பாடு, தேசபக்தி, நல்ல பழக்க வழக்கங்கள், ஆரோக்கியம் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர யாருமில்லை.
பள்ளியில் சொல்லித்தரும் பாடத்தில் இவற்றைப் பற்றி எல்லாம் வருகிறது என்பது உண்மையே. என்றாலும் அவை பாடமாக - மனப்பாடம் செய்து - மார்க் எடுக்கப் பயன்படுவதாக ஆகிவிட்டது. குழந்தைகளின் மனதில் பதிவதாக இல்லை.
இந்த நல்ல விஷயங்களையெல்லாம் குழந்தைகளின் மனதில் பதிய வைப்பதற்காக அவற்றைக் கதை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதுகிறேன்.
* நீங்கள் புத்தகங்கள் எழுதினாலும் குழந்தைகளுக்கு அந்தப் புத்தகம் கிடைக்க வேண்டும். பின்பு அவற்றை அவர்கள் படிக்க வேண்டும். இதற்கெல்லாம் என்ன செய்திருக்கிறீர்கள்?
உண்மைதான். நிச்சயமாக குழந்தைகள் அவற்றைப் படிக்க வேண்டும். அதற்காக நான் எழுதிய புத்தகங்களை தமிழ்நாடு முழுக்க சுமார் 50 பள்ளிகளில் பாடப் புத்தகமாக வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். மதுரை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் என் புத்தகங்கள் நான் டீடெய்லாக உள்ளன.
குழந்தைகள் என்னுடைய புத்தகங்களில் வரும் கருத்துகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாடகங்களை எழுதி அவற்றை மேடை ஏற்றி இருக்கிறேன்.
குறிப்பாக "பாற்கடல் சிறுவர் சங்கம்' என்ற பெயரில் குழந்தைகளுக்கான சிறுவர் சங்கத்தை 1973 இல் ஆரம்பித்தேன். தொடர்ந்து 20 ஆண்டுகளாக 1993 வரை நிறைய நாடகங்களை மேடை ஏற்றி இருக்கிறேன்.
நீர், மின்சாரம், பெட்ரோல் ஆகியவற்றைச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் "புரிஞ்சுக்கோடா தம்பி' என்ற நாடகம், காப்பி அடித்துப் பாஸ் பண்ணுவது தவறு என்று சொல்லும் "வைரக் கல்' நாடகம், தகுதி உள்ளவரே பதவிக்கு வர வேண்டும் என்பதைச் சொல்லும் "பட்டத்து ராஜா' போன்ற நாடகங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நான் எழுதிய பாடல்களை நானே ட்யூன் போட்டுப் பாட வைத்திருக்கிறேன். அது அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. என்னுடைய 98 படைப்புகள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. தொலைக்காட்சியில் 12 படைப்புகள் ஒளிபரப்பப்பட்டன.
* இந்தக் காலத்துக் குழந்தைகள் மிக அறிவாளியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கருத்துகளைப் புத்தகங்களின் மூலமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லையல்லவா?
இந்தக் காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்கள். ஆனாலும் குழந்தைகளுக்கு இந்தக் கருத்துகளை சொல்லத்தான் வேண்டும்.
சமூகத்தில் அதிகமான குற்றங்கள் யாரால் செய்யப்படுகின்றன? 16 - 17 வயதுக்கு முன்பு மிக நல்லவராக இருக்கும் சில குழந்தைகள் அதற்குப் பின்புதான் தவறுகள் செய்கின்றனர். களவு போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
இதற்குக் காரணம் குழந்தைகளாக இருக்கும்போதே அவர்களுடைய மனதில் நல்ல கருத்துகள் ஆழமாகப் பதியாததே. எனவே குழந்தைகளின் மனதில் நல்ல கருத்துகளை விதைப்பதே என்னுடைய நோக்கம்.
* புத்தகங்கள் எழுதப்பட்டாலும் இப்போது படிக்கும் பழக்கம் மிகக் குறைவாக உள்ளதே?
எவ்வளவுதான் குழந்தைகளுக்காகப் புத்தகம் எழுதினாலும், பல வண்ணங்களில் அவற்றை அச்சிட்டாலும் குழந்தைகள் அவற்றைப் படிக்க வேண்டும். இப்போது தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் பெருக்கத்தால் சமூகத்தில் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. பெரியவர்களே தங்களுடைய ஓய்வு நேரங்களில் டிவி முன் உட்கார்ந்திருக்கும்போது, குழந்தைகள் என்ன செய்வார்கள்?
அது தவிர, பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி மிகவும் குறைந்துவிட்டது. நர்சரி பள்ளியிலிருந்து உயர் கல்வி வரை தமிழ் வழியில் படிக்காமலேயே ஒருவர் பாஸ் செய்துவிடலாம். இதனால் குழந்தைகளுக்குத் தமிழில் படிப்பது மிகவும் சிரமமான காரியமாகப் போய்விட்டது. இந்த ஆங்கில மோகம் குறைய வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்க முடியும்.
பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தமிழில் ஆர்வம் உடையவர்களாக, தமிழில் திறமை உடையவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு தமிழில் ஆர்வத்தை ஊட்டுவார்கள்.
கிராமத்தில் உள்ள பள்ளிகளில் நல்ல தமிழ்ப் புத்தகங்களை வாங்க வசதியிருக்காது. அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு அரசே நல்ல புத்தகங்களை இலவசமாக அளிக்க வேண்டும். இப்படியெல்லாம் பல வழிகளில் முயன்றால்தான் குழந்தைகளை படிக்கும் பழக்கம் உள்ளவர்களாக ஆக்க முடியும்.
* நீங்கள் குழந்தைகளுக்காக நிறைய நூல்களை எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய புத்தகங்களைப் படித்துவிட்டு நல்ல பழக்க, வழக்கங்களை மேற்கொண்ட குழந்தைகள் இருக்கிறார்களா?
இருக்கிறார்களே. உதாரணமாக, "வீரச் சிறுவன் வைரமணி' என்ற நாவல் ஒன்றை எழுதினேன். அதில் தபால் தலையை ஒரு சிறுவன் நாவில் தடவி ஒட்டுவதை கண்டிக்கும் நிகழ்ச்சி ஒன்று வரும். தபால் தலையை நாக்கில் தடவுவது சுகாதாரக் கேடு என்பதற்காக சிறுவனைக் கண்டிக்கும் அவனுடைய மாமா, நமது பாரத நாடு படம் போட்ட தபால் தலையை எச்சில் பட வைக்கலாமா? என்று கேட்பார்.
இதைப் படித்துவிட்டு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பிரபா என்ற சிறுமி, தனக்கும் அப்படிப்பட்ட பழக்கம் இருந்ததாகவும், என்னுடைய கதையைப் படித்தவுடன் அந்தப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டதாகவும் தெரிவித்தாள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.