முகங்கள்: யாரும் யாரையும் திருத்த முடியாது!
வீட்டில் பையன் சரியாகப் படிக்கவில்லை என்றால் "படி படி' என்று சொல்வார்கள். அடுத்து வரும் தேர்வில் மதிப்பெண் குறைவாக இருந்தால் "படி' என்று சொல்ல மாட்டார்கள்; சிறிய பையன் என்று கூடப் பார்க்காமல் அடி பின்
வீட்டில் பையன் சரியாகப் படிக்கவில்லை என்றால் "படி படி' என்று சொல்வார்கள். அடுத்து வரும் தேர்வில் மதிப்பெண் குறைவாக இருந்தால் "படி' என்று சொல்ல மாட்டார்கள்; சிறிய பையன் என்று கூடப் பார்க்காமல் அடி பின்னிவிடுவார்கள். அப்படியாவது அந்தப் பையன் படிப்பானா? படிக்காமல் இருப்பதற்காகவே பிறந்தவன் மாதிரி படிப்பைத் தவிர பிறவற்றில் அவன் சுறுசுறுப்பாக இருப்பான். அவனால் பெற்றோருக்கு டென்ஷன், அவனுக்கும் டென்ஷன். ""படிக்காத பிள்ளையை அடித்துப் பயனில்லை '' என்கிறார் மனநல ஆலோசகர் ஆஷா சம்பத். "" பையன் ஏன் படிக்கவில்லை... அவனுக்கென்ன பிரச்னை? என்ன குறை? என்று பார்க்க வேண்டும்'' என்றும் சொல்லும் ஆஷா சம்பத் மதுரையைச் சேர்ந்தவர்.
அவர் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். தன்னை நாடி வரும் பெரியவர்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.
டென்ஷன் நிறைந்த இந்த உலகில் மனஇறுக்கம் இல்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்வது? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி நம்மிடம் அவர் பேசினார்.
""நான் இந்த மனநல ஆலோசனைத் துறைக்கு வந்ததே எதிர்பாராத ஒன்றுதான். எனது சொந்த ஊர் சென்னை. 15 வயதிலேயே திருமணமாகி மதுரைக்கு வந்துவிட்டேன். பத்தாவதுதான் படிப்பு. எனக்கோ படிப்பில் கரையில்லாத ஆர்வம் இருந்தது. எனது ஆர்வத்தைக் கண்ட என்னுடைய கணவர், நான் தொடர்ந்து படிக்க ஆதரவாக இருந்தார். உதவியாக இருந்தார். அதற்குப் பின்பு என் படிப்பு எல்லாம் கரெஸ்பான்டன்ஸ் கோர்ஸின் மூலமாகத்தான்.
பிளஸ் ஒன், பிளஸ் டூவிற்குப் பதிலாக ஃபவுண்டேஷன் கோர்ஸ் படித்தேன். பி.ஏ. எகனாமிக்ஸ் முடித்தேன்.
குடும்பம் என்றால் ஆயிரம் டென்ஷன் இருக்கும். அப்போது எனக்கும் இருந்தது. என் டென்ஷனைப் போக்க என்ன வழியென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தேன். எனவே மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஏதாவது படிக்க வேண்டும் என்று நினைத்தேன். எம்.ஏ., சைக்காலஜி சேர்ந்தேன். அதன் பின் கவுன்சிலிங்கில் பிஜி டிப்ளமாவும் படித்தேன். இதற்கிடையில் காந்தியச் சிந்தனையில் ஓர் எம்.ஏ.வும் முடித்து வைத்தேன். குடிசையில் வாழும் குழந்தைகளின் மனநிலை பற்றி ஆய்வு செய்து எம்ஃபில் முடித்தேன். இப்போது பெண்களின் மனநிலை தொடர்பான பிஎச்டி ஆய்வு செய்து வருகிறேன்.
மனநல ஆலோசனை தொடர்பான படிப்பு படித்த எனக்கு நான் படித்ததைப் பிறரிடம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நண்பர்கள், உறவுக்காரர்கள் பலர் அவர்கள் வீட்டுப் பிரச்னைகளை என்னிடம் சொல்வார்கள். நான் எனக்குத் தெரிந்தவரை மன நல ஆலோசனைகளைச் சொல்வேன். கொஞ்ச நாட்கள் கழிந்த பின்புதான் தெரிந்தது, எனது ஆலோச னையைக் கடைப்பிடித்தவர்களுக்கு வெற்றி கிடைத்திருப்பது. இது என்னைப் பற்றி எனக்குள்ளிருந்த நம்பிக்கையை அதிகரித்தது.
தைரியமாக வெளி ஆட்களுக்கு மனநல ஆலோசனை வழங்கத் தொடங்கினேன்.
மதுரையில் "விடியல் ' என்ற அமைப்பின் மூலமாக குடிசைகளில் வாழும் குழந்தைகளின் மனநலம் பற்றி ஆய்வு செய்தேன். நத்தம் அருகே உள்ள சிற்றூரிலிருக்கும் குடிசைகளுக்கு இதற்காகச் சென்றேன். அங்குள்ள பெண்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை ஏன் படிக்க வைக்க வேண்டும்? குடிசைவாழ் பெண்களுக்கு அரசு தரும் சலுகைகள் எவை? என்பது பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னேன்.
குடிசையில் வாழும் குழந்தைகளின் மனநலத்திற்கு அவர்களுடைய குடும்பச் சூழ்நிலையே மிகப் பெரிய கேடாக அமைந்திருப்பதை அப்போது நான் தெரிந்து கொண்டேன்.
பெரும்பாலும் குடிசையில் வாழும் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா இருவரும் உள்ள குடும்பம் இருக்காது. அம்மா, அப்பா இருவரில் யாராவது ஒருவர் மட்டுமே இருப்பார்கள். அம்மாவை விட்டுவிட்டு அப்பா வேறு கல்யாணம் செய்து கொண்டிருப்பார். புதிய அம்மாவின் கொடுமைகளை நிறைய குழந்தைகள் அனுபவித்து வருவார்கள். கடைசியில் மனநலப் பிரச்னைகளுக்கு உள்ளாகிறார்கள்.
கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நான் கடந்த 15 ஆண்டுகளாக மனநல ஆலோசனைகள் வழங்கி வருகிறேன்.
பொதுவாக மாணவர்களிடம் காணப்படும் மனநலப் பிரச்னைகளில் தாழ்வு மனப்பான்மை முக்கியமான ஒன்று. இவர்கள் பிறருடன் எப்போதும் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தான் இருப்பதைப் பிறருக்குக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். பிறர் தன்னைவிட சிறப்பாக ஏதாவது செய்து பெயர் வாங்கிவிடுவார்களோ என்று பயந்து கொண்டே இருப்பார்கள். பிறர் முன்னேறுவதை இவர்களால் தாங்க முடியாது. இப்படிப்பட்டவர்களிடம் நான் சொல்வது இதைத்தான்: "முதலில் உங்கள் திறன் என்ன? என்பதைச் சரியாக மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய சூழ்நிலையில் இதைவிடச் சிறப்பாக இருக்க முடியுமா? என்று யோசியுங்கள். பிறருடன் உங்களை ஒப்பிட்டு உங்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள். தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்க இதுதான் வழி'
"எனக்குச் சுட்டுப் போட்டாலும் படிப்பு வரவில்லை' என்று சில மாணவர்கள் நினைப்பார்கள். நான் ஆலோசனைக்காகச் செல்லும் பள்ளிகளில், கல்லூரிகளில் இத்தகைய மாணவர்கள் இருப்பார்கள். நான் மதுரைக்கு அருகில் உள்ள கேஎல்என் என்ஜினியரிங் கல்லூரியில் கெüரவ மனநல ஆலோசகராக இருக்கிறேன். சில மாணவர்களுக்குக் கணக்கே வராது. அப்படிப்பட்டவர்களைப் பெற்றோர் வற்புறுத்தி என்ஜினியரிங் படிப்பில் சேர்த்திருப்பார்கள். அவர்கள் எந்த ஆர்வமுமில்லாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் என்னிடம் ஆலோசனைக்கு வந்தால் அவர்களிடம் தனியாகப் பேசுவேன். "முதலில் சூழ்நிலையை ஒத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய எதிர்காலத்திற்காகப் படிக்க வேண்டும். வகுப்பில் நடக்கும் தேர்வுகளில் ஒழுங்காகப் படித்துப் பாஸ் செய்ய வேண்டும். தெரியாத கணக்குகளை அடிக்கடி போட்டுப் பார்க்க வேண்டும்' என்றெல்லாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவேன்.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்குகிறேன்.
சில திறன்குறைந்த மாணவர்களை எல்லாருடைய முன்னிலையிலும் ஆசிரியர்கள் மட்டம் தட்டிப் பேசுவார்கள். இதனால் திறன்குறைந்த மாணவர்கள் மேலும் திறன் குறைந்தவராக ஆவதோடு, மனநலப் பிரச்னை களுக்கும் உள்ளாவார்.
தேவைப்பட்டால் ஒரு மாணவரின் பெற்றோரையும் அழைத்துப் பேசுவேன். மாணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வேன். எந்தக் குழந்தையையும் அடிப்பதாலோ, திட்டுவதாலோ ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. அவர்கள் அதனால் எல்லாம் தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அவர்களிடம் அன்பாக, ஆதரவாகப் பேசினால் மட்டுமே நிச்சயமாக மாறுவார்கள். அதுபோல நான்கு பேர் உள்ள இடத்தில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. அது அவர்களின் மனநிலையைப் பாதிக்கும். தனியாக இருக்கும்போது அன்பாகப் பேசினால்தான் எதையும் மாற்ற முடியும். அதுமட்டுமல்ல, ஒருவரால் இன்னொருவரைத் திருத்த முடியாது. யாருமே தானாக மாறினால்தான் உண்டு. அவர்கள் தானாக மாறும் அளவுக்கு அவர்களிடம் இணக்கமாகப் பேச வேண்டும். இவையெல்லாம் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நான் வழங்கக் கூடிய ஆலோசனைகள்.
சிலர் எடுத்ததற்கெல்லாம் டென்ஷன் ஆவார்கள். இதற்குக் காரணம் அவர்கள் எதிர்பார்த்தபடி வெளியுலகம் இல்லாமல் இருப்பதுதான். வெளியுலகத்தில் எப்போதும் பல காரணங்களால் பிரச்னைகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரச்னைகளைக் கண்டதும் உடனே எதிர்வினை புரிவது சிலருடைய இயல்பு. இதனால் மனஇறுக்கம் அடைகிறார்கள். அவர் இப்படியிருக்கிறாரே? அது இப்படியிருக்கிறதே? அவர் இப்படிப் பேசிவிட்டாரே? இப்படி நடந்துவிட்டதே? என்று பிரச்னைகளைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டேருப்பார்கள். அப்படி யோசிப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர மாட்டார்கள்.
யாராக இருந்தாலும் வெளியுலகத்தை, சமுதாயத்தை உடனே மாற்ற முடியாது. எனவே வெளியில் இருப்பதை அது அவ்வாறுதான் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் மனநிலை முதலில் வர வேண்டும். அப்படி ஒத்துக் கொண்டால் அந்தப் பிரச்ûனைக்கு என்ன தீர்வு என்று யோசிக்க முடியும்.
ஒருவர் தனது மிகுந்த அன்புக்குரிய ஒருவரை இழந்துவிட்டார் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக எவ்வளவு காலம் வருந்திக் கொண்டிருக்க முடியும்? அதிலிருந்து மீண்டு, அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தால் மன இறுக்கத்தில் இருந்து தப்பிப்பதோடு, பிரச்னைகளையும் தீர்க்க முடியும். பிரச்னைகளுக்கு உடனே எதிர்வினை செய்யாமல் அவற்றை நிதானமாக அணுகும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை உதவுகின்றன. என்னுடைய பிஎச்டி ஆய்வே இதையொட்டித்தான். பெண்களுக்கு ஏற்படும் மன இறுக்கத்தைக் குறைப்பதில் தியானம், மூச்சுப் பயிற்சி எந்த அளவுக்கு உதவுகிறது என்பதைப் பற்றித்தான்'' என்றார்.