அந்த நாள்: ""நாங்க 40 வருஷத்துக்கு முந்தி 11 ஆம் வகுப்புப் படிச்சோம்!''
""டே,சின்ன வயசுல உனக்குச் சுருள்சுருளா முடியிருக்குமே. இப்ப எங்கடா, தலை வழுக்கை விழுந்து போச்சு. ஆனால் ஆள் மாறினாலும் உன் குரல் மாறலைடா. அப்படியே இருக்கு'' என்று சொன்னதும் பாரதிதாசன் தனது வழுக்கைத் தல
""டே,சின்ன வயசுல உனக்குச் சுருள்சுருளா முடியிருக்குமே. இப்ப எங்கடா, தலை வழுக்கை விழுந்து போச்சு. ஆனால் ஆள் மாறினாலும் உன் குரல் மாறலைடா. அப்படியே இருக்கு'' என்று சொன்னதும் பாரதிதாசன் தனது வழுக்கைத் தலையைத் தடவியவாறே சிறு பையன் போலச் சிரிக்கிறார்.
""இந்த ரமேஷ் இருக்கானே, இவனும் முகுந்தன்னு இன்னொருத்தனும் பண்ற கலாட்டா கொஞ்சநஞ்சமல்ல. படிக்கிற பசங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு பேர் வச்சிருப்பான்க. ''
ரமேஷ் இப்போது சென்னை வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
அந்த ஹால் முழுக்க சிரிப்பும் மகிழ்ச்சியும் நிரம்பி வழிகிறது. எல்லாரும் 55 வயதைக்€ கடந்தவர்கள். ஆனால் முகத்தில் அந்தப் பதினாறு வயது சந்தோஷம் தெரிகிறது. சுமார் 40 வருடங்களை ஒரே தாண்டாக பின்னோக்கித் தாண்டிக் குதித்துப் போன துள்ளல் அவர்களது கண்களில், பேச்சில் தெரிகிறது.
1970 ஆம் ஆண்டு சென்னை தங்கசாலையில் உள்ள டாக்டர் குருசாமி முதலியார் தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள் சென்னை திருவொற்றியூரில் நீண்ட காலத்திற்குப் பின்பு சந்தித்துக் கொண்டபோது தான் இந்தக் காட்சிகளைக் காண முடிந்தது.
அந்தப் பள்ளியில் படித்த பழைய மாணவர் டாக்டர் அன்புசெல்வம். அவருடைய வீட்டில்தான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
"" நாங்க எல்லாரும் 1970 இல் 11 ஆம் வகுப்பு படித்த செட். இன்னைக்கு லைஃப்ல ஆளாளுக்கு எப்படி எப்படியோ செட்டில் ஆயிட்டோம். ஏகப்பட்ட டென்ஷன். ஏகப்பட்ட பிரச்னை. ஆனால் பழைய கால வாழ்க்கையை நினைச்சுப் பாக்கிறப்ப வர்ற ஒரு சந்தோஷம். நான் இப்ப டாக்டராயிட்டேன். என்னை யார் "வாடா, போடான்னு கூப்பிடப் போறாங்க. இப்ப எங்களில் பலபேர் தாத்தா ஆயிட்டாங்க. இன்னும் சில பேர் தாத்தா ஆகப் போறாங்க. இந்த வயசுல போடா, வாடான்னு பேசிக்கிட்டு இருக்கிற அந்தப் பழைய அட்மாஸ்பியர். அதுக்காகத்தான் இந்தச் சந்திப்பை ஏற்பாடு பண்ணினோம். இதுக்கு மூணுபேர் முக்கிய காரணம். ஒண்ணு லக்ஷ்மி நரசிம்மன். இவனை எல்லாரும் "சிங்கா சிங்கா'ன்னுதான் கூப்பிடுவோம். ஃபேப்ரிக்கேஷன் வேலை பண்றான். அடுத்து போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷனரா இருக்கிற பாலசுப்ரமணியம். நாங்க மூணு பேரும் சேர்ந்துதான் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தோம். 40 வருஷத்துக்கு முன்னால எங்க மனதில் இருந்த ஃபிரண்டஸ்களின் பழைய உருவம் இன்னைக்கு எப்படியிருக்கு என்று பார்க்கிறதில் ஒரு த்ரில். ஒரு சந்தோஷம்'' என்றார் சிரித்துக் கொண்டே.
""ஏய்...இன்னும் யாருப்பா வரலை? ஆரம்பிச்சிடலாமா?'' என்று குரல் கொடுத்தார் ரமேஷ்.
""நம்ம ஹரிபரந்தாமன் வந்துக்கிட்டு இருக்காப்ல. பத்துநிமிஷத்துல வந்துருவான்''
கொஞ்ச நேரத்தில் ஹரிபரந்தாமன் வந்துவிட்டார். எல்லாரிடமும் என்னை அடையாளம் தெரியுதா? என்று கேட்டார்.
""அந்தக் காலத்தில மல்யுத்தப் போட்டியில எல்லாம் கலந்துக்குவியே'' என்று ஞாபகப்படுத்தினார் பாரதிதாசன். புதுச் சட்டையைப் பார்த்த சின்னப் பையன் போல் ஹரிபரந்தாமன் முகத்தில் சந்தோஷம்.
அடுத்து விருந்து ஆரம்பமானது. சைவம், அசைவம் என்று வேண்டியதைச் சாப்பிடுவதற்காக இரண்டையும் செய்திருந்தார்கள். ""ஏய்... நல்லாச் சாப்பிடு..'' என்று ஒவ்வொரு வரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார் அன்புசெல்வம்.
எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் மீட்டிங்.
ஒவ்வொருவராய் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்கள். அரசுப் பொது மருத்துவமனையில் நிர்வாக அலுவலரான பாரதிதாசன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரிபரந் தாமன், டாக்டராக உள்ள துரைராஜ், தலைமைச் செயலகத்தில் செக்ஷன் ஆபிஸராக இருக்கும் புருஷோத்தமன், பேங்கில் வேலை செய்த இளஞ்செழியன், ராஜசேகரன், வழக்க றிஞர் ராஜநாராயணன், ஆசிரியர் மனோகர், ரயில்வேயில் வேலை செய்யும் சுந்தரமூர்த்தி... இன்னும் பலர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்கள்.
மரத்தில் ஏறி விளையாடியது, பழங்களைத் தின்றுவிட்டு தோலை ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண்டு விளையாடியது என்று சிறுவயதுக் குறும்புகளை ஞாபகப்படுத்தினார்கள்.
வழக்கறிஞர் ராஜநாராயணன் பேசும்போது, ""என் அம்மா ஸ்கூலில் டீச்சரா வேலை பார்த்தாங்க. நான் ஸ்கூலில் ஆளும் கட்சி உறுப்பினர் போல. மத்த பசங்க எல்லாம் எதிர்க்கட்சி உறுப்பினருங்க. எங்கம்மாகிட்ட அடிவாங்கின பசங்க எல்லாம் என்ன செய்வாங்க தெரியுமா? நேரே வந்து என் சைக்கிளில் காத்தைப் புடுங்கி விட்டுட்டுப் போயிடுவாங்க. எத்தனையோ நாள் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குப் போயிருக்கேன்''
உடனே குறுக்கிட்ட அன்புசெல்வம், ""நான் ஒருநாளும் உன் சைக்கிளில்ல காத்தை இறக்கிவிட்டதில்ல. இவுங்க அம்மா பயாலஜி அருமையாச் சொல்லித் தருவாங்க. அவுங்க கிட்ட பயாலஜி படித்ததால் ஏற்பட்ட ஆர்வத்தால்தான் நான் டாக்டராகவே ஆனேன்'' என்றதும் சந்தோஷத்துடன் எல்லாரும் கை தட்டினர்.
ராஜநாராயணன் தொடர்ந்தார்.
""நான் என் தந்தையார் நினைவாக ஆண்டுதோறும் பள்ளியில் முதல் மாணவனாக வருபவருக்குப் பரிசு தர ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்திருக்கிறேன்.
இதுபோல பழைய மாணவர் சங்கத்தை ஆரம்பிக்கணும்னு இப்போ இல்ல. பியுசி படிக்கிற காலத்திலேயே ஒரு தடவை முயற்சி பண்ணினோம். தியேட்டர்ல மார்னிங் ஷோ நடத்தி, லெட்டர் ஹெட் எல்லாம் அடிச்சோம். ஆனால் அது நடக்கவில்லை.''
அடுத்து ஆசிரியர் மனோகர் பேசியது ரொம்ப உருக்கமாக இருந்தது.
""நாங்க படிக்கிற காலத்தில 5 வது வரைக்கும் பீஸ் கட்டித்தான் படிக்கணும். அதுக்கப்புறம் காமராஜர் ஆட்சி வந்த பின்னால் ஆறாவதிலிருந்து இலவசக் கல்வி வந்தது. 5 வது பீஸ் எவ்வளவு இருக்கும்னு நினைக்கிறீங்க. டியூஷன் பீஸ் 5 ரூபாய். பில்டிங் பீஸ் 5 ரூபாய். நோட்புக் வாங்க 5 ரூபாய். இந்தப் பணத்தைக் கட்டவே முடியாது. பில்டிங் பீஸ் 5 ரூபாயை 1 ரூபாயாகக் குறைக்கச் சொல்லி தலைமையாசிரியர் மீனாட்சி சுந்தரம் சார்கிட்ட போவோம். ""டே நான் ஒங்க வீட்டுக்கு வந்தால் போண்டா, காபி வாங்கித் தரமாட்டியா, அதுக்கே 1 ரூபாய் 20 பைசா ஆகும். நான் ஒங்க வீட்டுக்கு வந்ததா நினைச்சுக்க. ரெண்டு ரூபாய் கட்டிடு'' என்பார். நாங்க அழுதுகிழுது 1 ரூபாய் கட்ட அனுமதி வாங்குவோம்.
இப்ப நாம என்ன செய்யலாம்னா, நல்லா படிக்கிற ஏழைப் பசங்களுக்கு நாம் எல்லாரும் சேர்ந்து பீஸ் கட்டலாம்.''
அவருடைய யோசனைக்குப் பலத்த ஆதரவு இருந்தது.
டாக்டர் துரைராஜ் சொன்னார்.
""நான் நாலாம் வகுப்பில் இருந்து இந்த ஸ்கூலில்தான் படித்தேன். இந்த ஸ்கூலில் படித்தவர்கள் எல்லாரும் வசதியானவர்கள் அல்ல. எல்லாரும் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்குச் சாப்பாடு போட்டது ஸ்கூல் ஹாஸ்ட்டல். அங்கே மதிய உணவைச் சாப்பிட்டு வளர்ந்தோம். நான் மெடிக்கல் காலேஜ் இன்டர்வியூவிற்குப் போன போது அங்கே எங்கள் பள்ளியின் நிறுவனர் குருசாமி முதலியார் சிலை இருந்தது. அதில் இப்படி எழுதியிருந்தது. Friend of the poor.
உண்மையிலேயே ஏழைகளின் நண்பனாகத்தான் அவர் இருந்தார். அவர் சம்பாதிச்ச எல்லாவற்றையும் ஏழைப் பிள்ளைகள் படிக்கும் இந்தப் பள்ளிக்காகத்தான் செலவு செய்தார். அந்தப் பள்ளியில் படித்த நாம் எல்லாரும் இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம். அந்தப் பள்ளிக்கு நாம் இப்ப ஏதாவது செய்ய வேண்டும்'' என்றார் உணர்ச்சிகரமாக.
இடையில் பேசிய அன்புசெல்வம், ""நாம எல்லாரும் வசதியானவங்கன்னு சொல்ல முடியாது. பதினோராவது படிக்கும் போதே சோற்றுக்கே லாட்டரிதான். இப்ப நான் டாக்டராகியிருக்கேன். என் பையன் டாக்டருக்குப் படிக்கிறான்னா அதுக்கு நாங்க படிச்ச பள்ளிதான் காரணம். அடுத்து நாம் கூடும் கூட்டம் பள்ளியில் நடக்க வேண்டும். நமக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை அழைத்துக் கெüரவிக்க வேண்டும் '' என்றார்.
அந்தநாள் மாணவர்கள் 20 பேர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது மீண்டும் சிறுவர்களாக மாறிவிட்ட சந்தோஷம்.
உணர்வுகளிலும் சொற்களிலும் வெளிப்பட்டது தங்களை இந்த அளவுக்கு உருவாக்கிய பள்ளி மீதான கட்டற்ற நன்றியுணர்வு.
எல்லாருடைய மனதிலும் இருந்தது நாம் படித்த பள்ளிக்கும், கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற துடிப்பு.
எல்லாருடைய வாயிலும் இருந்த உதிர்ந்த ஒரே வாக்கியம்: ""அடுத்த கூட்டம் எங்க வீட்டிலதான்...அடுத்த கூட்டம் எங்க வீட்டிலதான்...''