முகப்பு
தினமணி கதிர்

முகங்கள்: நெய் போளிக்கு ரசிகர் கூட்டம்!

தன்னம்பிக்கை,முயற்சியில் பின்வாங்காமை,சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு,காரியத்தில் கவனம், தொழிலில் உள்ள ஈடுபாடு, பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளுதல் என மனம் தளராமல் இலக்கை நோக்கி பயணித்தால், யாராக இருந்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 12:46 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 7:38 PM

தன்னம்பிக்கை,முயற்சியில் பின்வாங்காமை,சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு,காரியத்தில் கவனம், தொழிலில் உள்ள ஈடுபாடு, பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளுதல் என மனம் தளராமல் இலக்கை நோக்கி பயணித்தால், யாராக இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.பானுமதி. கணவரின் மறைவிற்குப்பின், சோர்ந்துபோகாமல் வீட்டு விசேஷங்களுக்கும் ரோட்டரி போன்ற சங்கங்களுக்கும் உணவு தயாரித்து விநியோகம் செய்து வருகிறார். இவரது உணவு சுவையாக இருப்பதால், மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் படுபிஸியாக உள்ளார். அவரிடம் வெற்றிக்கான ரகசியம் குறித்து கேட்டபோது இயல்பாக நம்மிடம் பேசினார். இனி அவருடனான உரையாடல்...

உங்களைப் பற்றி கூறுங்கள்?

என் கணவர் எம்.ஜெயராமன். திருநெல்வேலியில் ஆட்டோமொபைல் தொழில் செய்து வந்தார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். மகன் சரவணராஜன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறான்.

Advertisement

சமையல் தொழிலைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரக் காரணம்...?

எனது சகோதரி வசந்தி சிவகாசியில் வீட்டு விசேஷங்களுக்காக முறுக்கு, சீடை, அதிரசம் போன்றவைகளைச் செய்து தரும் தொழிலைச் செய்து வருகிறார். அவரின் ஊக்குவிப்பால் இத்தொழிலைச் செய்ய தொடங்கினேன்.

உங்கள் தொழிலை எவ்வாறு அபிவிருத்தி செய்தீர்கள்?

இத்தொழிலைத் தொடங்கியபின், மூன்று ஆண்டுகள்வரை வீட்டுசெலவுகள் தவிர,துணி எடுப்பது, வெளியூர் செல்வது என எந்த செலவும் செய்யாமல் சிக்கனமாக இருந்தேன். நாமும் இந்த சமுதாயத்தில் நன்றாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற தாக்கம் எழுந்தது. எனவே,ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் போன்ற கிளப்புகளின் விசேஷங்களுக்கும் பல உணவுவகைகளைச் செய்து கொடுக்கத் தொடங்கினேன்.

அவை சிறப்பாக இருந்ததால், கிளப் உறுப்பினர்கள் தங்கள் வீட்டுவிசேஷங்களுக்கும் சமையல் செய்ய என்னை அழைத்தார்கள். இவ்வாறு என் தொழிலை உயர்த்திக் கொண்டேன்.

நீங்கள் தயாரிப்பதில் எது சிறப்பானது?

என் தயாரிப்பில் அனைத்து உணவு வகைகளும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் நான் எந்த உணவிலும் சோடா உப்பு உள்ளிட்ட ரசாயன பொருள்களைச் சேர்ப்பதில்லை.

நான் செய்யும் நெய் போளிக்கு இங்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. அனைவரும் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள். ஒரு மாதம் ஆனாலும் நெய் போளி கெட்டுப் போகாது.

பண்டிகைகளுக்குப் பலகாரங்கள் செய்து தருவதுண்டா?

பண்டிகை காலங்களில்தான் நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். தீபாவளிக்குமுன் 15 நாட்கள்வரைமட்டுமே ஆர்டர்கள் பெறுவேன். இச்சமயங்களில் என் சகோதரிகளான வசந்தி, சாந்தி, அண்ணி காஞ்சனா ஆகியோர் உதவி செய்வார்கள். மற்ற ஆர்டர்களுக்கு எந்த உதவியாளரையும் வைத்துக்கொள்வதில்லை.

நீங்கள் கடந்து வந்த பாதை குறித்து...?

சிலருக்கு வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். சிலருக்கு வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். அந்த சமயத்தில் கலங்காமல் நம்பிக்கையுடன் செயல்படவேண்டும் என்பதை மட்டும் கற்றுக்கொண்டேன். மேலும்,பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக் கொண்டேன். எதிர்பார்ப்புகளையும் குறைத்துக் கொண்டேன். எதிர்நீச்சல்தான் வாழ்க்கை என்பதையும் புரிந்துகொண்டேன்.

உங்களின் எதிர்காலம் குறித்து...?

பொறியியல் படித்துவரும் மகன் சரவணராஜனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். அவனுக்குச் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். இதில்தான் என் எதிர்காலம் அடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.