விளையாட்டு: ஜனவரி முதல் மார்ச் வரை...!
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே இறகுப் பந்து விளையாட்டுக்குத் தனி மவுசு உண்டு. இந்த விளையாட்டில் பெரும்பாலும் வசதியான மாணவ, மாணவிகளே கலந்து கொள்கிறார்கள் என நினைக்கின்றனர். ஆனால், எந்த வி
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே இறகுப் பந்து விளையாட்டுக்குத் தனி மவுசு உண்டு. இந்த விளையாட்டில் பெரும்பாலும் வசதியான மாணவ, மாணவிகளே கலந்து கொள்கிறார்கள் என நினைக்கின்றனர். ஆனால், எந்த விளையாட்டானாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இறகுப் பந்து விளையாட்டில் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி ஜ. கோகுல லட்சுமி, இறகுப் பந்து விளையாட்டில் தேசிய அளவில் சில வெற்றிகளையும் மாநில அளவில் பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்.
அவரிடம் பேசியபோது...
Advertisement
இந்த விளையாட்டில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
எனது சகோதரர் சரவணக்குமார் 10-ம் வகுப்பு படித்தபோது, நான் 4-ம் வகுப்பு படித்தேன். எனது சகோதரர் பள்ளியில் இறகுப் பந்து விளையாடியதால், விளையாடச் செல்லும் அவருடன் பொழுதுபோக்காக நானும் சேர்ந்து கொள்வேன். முதலில் ஒரு பார்வையாளராகச் சென்ற நான், பின்னர் பொழுதுபோக்காக விளையாடினேன்.
எனது தந்தை இளங்கோ, தாய் சுந்தரி ஆகியோர் என்னை விளையாட ஊக்கப்படுத்தினர். பின்னர், இந்த விளையாட்டில் எனக்கு ஓர் ஆர்வம் ஏற்பட்டது.
எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர்எனக்கு தனியே பயிற்சி அளிக்கத் துவங்கினர். இதையடுத்து, இந்த விளையாட்டில் எனக்கு ஓர் ஈடுபாடு ஏற்பட்டது.
முதன்முதலில் எப்போது போட்டியில் கலந்து கொண்டீர்கள்?
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டேன். அந்தப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று பரிசு வாங்கியது என்னுள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது.
இதுவரை எத்தனை போட்டிகளில் பங்கு பெற்றுள்ளீர்கள்?
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகள் என இதுவரை சுமார் 150 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். 2004ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றேன்.
அதே ஆண்டு தேசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டேன். மாநில அளவிலான போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் மொத்தம் 15 பெற்றுள்ளேன்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில், சட்டீஸ்கரில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றேன். இதுவரை சுமார் 120 பரிசுகளைப் பெற்றுள்ளேன்.
மற்ற விளையாட்டுக்கும் இறகுப் பந்து விளையாட்டுக்கும் என்ன வேறுபாடு?
பொதுவாக எல்லா விளையாட்டுமே உற்சாகம் தரக்கூடியதுதான் என கூறலாம்.
இறகுப் பந்து விளையாட்டு உள்ளரங்கில்தான் விளையாட முடியும்.
இதனால் ஓரளவுக்குக் கவனம் சிதற வாய்ப்பு இல்லை. எதிராளியின் பந்து எந்தப் பக்கம் பறந்து வரும் என யூகித்து, அங்கு சென்று பந்தை அடிப்பதுதான் இந்த விளையாட்டில் உள்ள சிறப்பு.
தினசரி பயிற்சி செய்கிறீர்களா?
தினசரி காலை 5.30 மணி முதல் 7 மணி வரையும், மாலை 6.30 முதல் 9 மணி வரையிலும் பயிற்சி பெறுகிறேன். எனது பயிற்சியாளர் ராஜீவ்காந்தி எனக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்து வருகிறார்.
தேர்வு நேரங்களில் பயிற்சி பெறுவதுண்டா?
இல்லை. தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே பயிற்சியை நிறுத்திவிடுவேன். படிப்பில் முழுக் கவனம் செலுத்துவேன். பொதுவாக, ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை படிப்புதான். இதனால் வகுப்பில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிடுவேன்.
எதிர்கால லட்சியம் என்ன?
சர்வதேச விளையாட்டில் பங்குபெற்று வெற்றி பெறவேண்டும் என்பதே லட்சியமாக உள்ளது.