தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பயிற்சியும் ஆபத்தில் முடியும்!

நான் சற்று குட்டையான தோற்றம் உடையவன். நல்ல உடல் உறுதியுடன் இருந்தாலும் வலது தோள் பட்டையைச் சுழற்றினால் "கடக் கடக்' என சத்தம் வருகிறது. மூங்கில் முறிந்தால் எப்படிச் சத்தம் வருமோ அதுபோலக் கேட்கிறது. வலி

எஸ். சுவாமிநாதன்

நான் சற்று குட்டையான தோற்றம் உடையவன். நல்ல உடல் உறுதியுடன் இருந்தாலும் வலது தோள் பட்டையைச் சுழற்றினால் "கடக் கடக்' என சத்தம் வருகிறது. மூங்கில் முறிந்தால் எப்படிச் சத்தம் வருமோ அதுபோலக் கேட்கிறது. வலியும் இருக்கிறது. எப்படி ஏற்பட்டதென்று தெரியவில்லை. உடல் எடை குறைவு, உயரக் குறைவைச் சரி செய்ய கடும் உடற்பயிற்சிகளைப் பள்ளி விடுமுறை நாட்களில் செய்து வந்தேன். தசைகள் மட்டுமே வலிமை அடைந்துள்ளன. வேறு பயன் ஒன்றுமில்லை. என் உபாதை தீர வழி என்ன?.

சங்கரலிங்கம், செய்யாறு.

உடல் எடைகுறைவையும் உயரக் குறைவையும் சரி செய்யக் கடும் உடற்பயிற்சி செய்ததன் விளைவாக, உங்களுக்கு இந்த உபாதை ஏற்பட்டிருக்கலாம். உடல் வளர்ச்சியும் தனித்துத் தசை வளர்ச்சியுமே போதாதிருந்த நிலையில் திடீரென ஆர்வத்தால் முழு அளவு உடற்பயிற்சியில் ஈடுபட்டதன் விளைவு இது. உங்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள கொழுப்புச் சேமிப்பு ஈடு கொடுத்தவரை நல்ல பலனையே தந்துள்ளது. அதிக கொழுப்பு உடற்பயிற்சியினால் குறைந்துவிடும். ஆனால் கொழுப்பு சேமிப்பே இல்லாதவர், உடற்பயிற்சி அதிகம் செய்தால் தசைகளின் ஜீவ சத்தான கொழுப்பும் அதனால் கரைந்து தசைகள் வறண்டு நாராகிவிடும். தோள்பட்டையைப் பாதுகாக்கும் தசைகளை அவ்வப்போது தளர்த்திவிட்டால்தான் தசைகளில் ஊட்டம் சேரும். அப்படித் தளர்ந்த உடலுக்கு எண்ணெய் தடவிவிடுவது, பிடித்துவிடுவது, மிகவும் அவசியம். தளராதபடி மேலும் மேலும் உடற்பயிற்சியினால் முறுக்கேற்றப்பட்ட தசை குறுக்கு வலியையும் "கடக்' என்ற சத்தத்தையும் உங்களுக்கு ஏற்படுத்துகிறது.

ஒரேவிதமான பணியில் ஈடுபடுபவர்கள் நெட்டி முறித்துக் கொள்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். தசை இறுக்கத்தைத் தளர்த்தி, தசைகளை ஒரே சீராக வைத்திருப்பதற்கு இந்த நெட்டிமுறித்தல் உதவுகிறது.

புரதச் சத்துள்ள உணவு, கொத்துக் கடலை தசைகளின் இறுக்க நிலையில் ஏற்படும் ரத்தக் கட்டை நீக்கும். உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஓர் இரவு ஊற வைத்த கொத்துக்கடலையை நீங்கள் சாப்பிட்டு வந்திருந்தால், இந்தச் சத்தத்தையும் நரம்பு வலியையும் தவிர்த்திருக்கலாம். ஊட்டமின்றி வறண்ட தசைநார்கள் ஒன்றின் மேல் ஒன்று புரளும் போது "கடக் கடக்' ஒலி ஏற்படுகிறது. அதனால் நீங்கள் இந்த உபாதை நீங்க செய்ய வேண்டிய விஷயங்கள்:

-பலவந்தமாகத் தசைகளைச் சுழற்றுவதை நிறுத்தவும்.

-தோள்பட்டையைக் கூடியவரை அசையாமல் வைத்திருந்து அதன் மேல் ஊறும்படி எண்ணெய்த் துணியைச் சுற்றி வைக்கவும். ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய மஹாமாஷ தைலம், தான்வந்திரம் குழம்பு, குக்குட மாம்ஸ தைலம் முதலியவை இதற்கான ஏற்ற தைலங்கள். இவற்றைத் தோள் பட்டையில் வலி மற்றும் சத்தம் வரும் பகுதியில் சதும்பத் தடவித் தடவி துணி சுற்றி 2-3 மணி நேரம் வைத்திருத்தல் நல்லது. அவசர நாட்களில்  காலைக் குளியலுக்கு முன் சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைத் துணியில் பிழிந்து ஒத்தடம் கொடுக்கவும். அந்தத் தண்ணீரில் ஆமணக்கு இலை, நுணா இலை, முருங்கை இலை, புளிஇலை இவற்றில் கிடைத்தவற்றைப் போட்டு காய்ச்சிக் கொள்வது நல்லது.

சாதம் வடித்த சூடான கஞ்சியையோ அல்லது கஞ்சியுடன் கோர்த்துத் தளர இருக்கும் சூடான சாதத்தையோ தோள்பட்டையில் கைகளால் அப்பித் தேய்த்துவிடுவதும் நல்லதே. புரத சத்து அதிமான உணவை ஜீரண சக்திக்கேற்றவாறு சாப்பிடலாம். ஓரிரு மாதங்கள் இதைச் செய்துவர நல்ல குணம் தரும். ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி தைலதாரை, பிழிச்சல், நவரக்கிழி போன்ற சிகிச்சைகளையும் நீங்கள் செய்து கொள்வது நலம் தரும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT