தினமணி கதிர்

திரைக்கதிர்: பவனாவுக்குப் பிடித்த 'பாவனை'!

தமிழில் படங்கள் கைவசம் இல்லாததால் மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் பாவனா. தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாதது குறித்து பாவனாவிடம் பேசினால், ""தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத

ஜி. அசோக்

தமிழில் படங்கள் கைவசம் இல்லாததால் மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் பாவனா. தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாதது குறித்து பாவனாவிடம் பேசினால், ""தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாதது குறித்து நான் என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. திடீரென "அசல்' பட வாய்ப்பு கிடைத்தது.

அஜித்தே அந்தப் படத்துக்கு என்னை தேர்வு செய்ததாக சொன்னார்கள். சினிமா வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான விஷயமாக அதை நான் நினைக்கிறேன். ஒரு சில பட வாய்ப்புகள் அவ்வப்போது வந்தன. அந்த சமயங்களில் கன்னடப் படங்களில் பிஸியாக இருந்ததால் தமிழில் நடிக்க முடியவில்லை. "அசல்' மாதிரி பெரிய வாய்ப்புகள் வந்தால் உடனே வந்து விடுவேன். தற்போது "குடும்பஸ்ரீ டிராவல்ஸ்' என்ற படத்தில் ஜெய்ராமின் ஜோடியாக நடித்து வருகிறேன். படத்தில் வரும் திருமணக் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும். கேரளத்தின் சம்பிரதாயங்களின் அடிப்படையில் அந்தக் காட்சியில் எனக்கும் ஜெயராமுக்கும் திருமணம் நடைபெற்றது. பாரம்பரிய நகைகள், புடவை என அணிந்த ஒரு மணப் பெண்ணாகவே மாறிவிட்டேன். அது திருமண உணர்வை தந்து சென்றது. ஆனால் இப்போதைக்குத் திருமணம் இல்லை'' என்றார் பாவனா.

சிங்கப்பூர் நடிகர்கள்.. சர்வதேச கதை!

மெட்ரோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் சிங்கப்பூர் பிலிம் கமிஷன் இணைந்து தயாரிக்கும் படம் "சிங்கையில் குருஷேத்திரம்.' சிங்கப்பூரைச் சேர்ந்த விஷ்ணு,விக்னேஷ்வரி, சிவகுமார், மதியழகன் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். டி.டி.தவமணி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். படம் குறித்து இயக்குநரிடம் பேசியபோது, ""சிங்கப்பூரில் நல்ல படைப்பாளிகள் தோன்றியிருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் சிறந்த சான்றாக இருக்கும். சிங்கப்பூர் நடிகர்களைக் கொண்டு சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத பின்தங்கிய மக்களின் வாழ்க்கை, அதன் போராட்டத்தால் தடம் மாறும் இளைஞர்கள் போதை பொருள் கடத்துதல், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு சீரழியும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் படங்களுக்கு நிகரான கதை என்பதால் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லூகாஸ் ஜோடோன் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளரான இவர் முதன் முதலில் தமிழ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். "ஜக்குபாய்' படத்துக்கு இசையமைத்த ரஃபி இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி ஒரு பாடலை எழுதி கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்'' என்றார் இயக்குநர் டி.டி.தவமணி.

அமீர் படத்தில் அமர்க்களம்!

அமீர்கான் தயாரிப்பில் புதியவர் அபினவ்டியோ இயக்கியுள்ள படம் "டெல்லி பெல்லி'. இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்த நிலையில், இயக்குநருக்கும் அமீர்கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதனால் படத்தின் எடிட்டிங் பணிகளை அமீர்கானே செய்து வருகிறார். படத்தை ஜனவரியில் வெளியிட திட்டமிட்டார். இந்நிலையில் படத்தைத் தானே வாங்கி கொள்வதாக அபினவ் தெரிவித்துள்ளார். படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்ததும் படத்தைத் தானே வாங்கி கொள்வதாக ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் இது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறார். இரு தரப்பையும் அழைத்து விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் படத்தை இயக்குநர் அபினவ்விடம் கொடுத்து விடும்படி அமீர்கானைக் கேட்டுக் கொண்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த "தாரே ஜமீன் பர்' படத்திலும் இயக்குநரிடம் பிரச்னை வர அப்படத்தை அமீரே இயக்கி முடித்தார்.

கேபிள் டி.வி. காதல்!

"உங்கள் விருப்பம்' படத்தில் அம்ருத் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக "பட்டாளம்' படத்தில் நடித்த அஞ்சனா நடிக்கிறார். ஜெயசூர்யா, ரோஷ்னா, நெல்லை சிவா, சுவாதிவர்மா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். கருணாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ""உள்ளூர் கேபிள் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றும் நாயகனுக்கும் அவருடன் தொலைபேசியில் தினமும் பேசி, பாடல் கேட்கும் நாயகிக்கும் காதல் அரும்புகிறது. தங்களது காதலை அடைய அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் திரைக்கதையாக்கி இருக்கிறேன். காதல் காட்சிகள் நிச்சயம் வித்தியாசப்பட்டு இருக்கும். பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ""கல்லூரிக் காற்றே...'', ""உன்னோடு பேசும் போது..'' உள்ளிட்ட ஆறு பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இளையராஜா என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரவண கணேஷ் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மதுரை மாவட்டப் பின்னணியில் படம் உருவாகியுள்ளது'' என்றார் இயக்குநர் கருணாகரன்.  

ஜெனியாவுக்கு போட்டியாக நானா?

தமிழில் "கனிமொழி' படத்தில் நடித்தவர் ஷாசங் பதம்சி. தற்போது தெலுங்கில் "ஆரஞ்ச்' என்ற படத்தில் ராம்சரண் தேஜா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஒரு பாடலுக்கு ராம்சரணுடன் ஜெனிலியா நடிப்பதாக இருந்தது. கடைசியில் ஷசாங் பதம்சியை அந்தப் பாடலில் நடிக்க வைத்தனர். இதற்கு ராம்சரண் தேஜாதான் காரணம் எனக் கூறப்படுகிறது. அவர் ஷாசங் பதம்சிக்கு சிபாரிசு செய்ததாகவும் அதனால்தான் ஜெனிலியாவை அந்தப் பாடலில் நடிக்கவைக்கவில்லை என மீடியாக்களில் செய்தி வெளியானது. இதனால் ஜெனிலியா கோபமாக இருப்பதாகவும், இனி வரும் காலங்களில் ராம்சரண் தேஜாவின் படங்களில் நடிப்பது இல்லை என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்து ஷாசங்கிடம் பேசியபோது, ""தமிழில் "கனிமொழி' படம் நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. "ஆரஞ்ச்' படமும் நன்றாக வந்திருக்கிறது. ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழிகளில் இரண்டு நல்ல படங்களில் நடித்ததில் மகிழ்ச்சி. ஜெனிலியாவுக்கு "ஆரஞ்ச்' படத்தில் ஒரு பாடல் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் திடீரென என்னை அதில் நடிக்க வைத்து விட்டனர். அது ஜெனிலியா நடிக்கவிருந்த பாடல் என எனக்கு தெரியாது. எந்த நேரத்திலும் ஜெனிலியாவுக்கு நான் போட்டியாக முடியாது'' என்றார் ஷாசங் பதம்சி.

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு!

ஐயப்பன் மகிமையை விளக்கும் வகையில் உருவாகி வரும் படம் "சாமி மணிகண்டன்'. அனஸ்வராஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில் கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார் விஜேஷ்மணி. பிரபல தொலைக்காட்சித் தொடரான ஐயப்பனில், ஐயப்பனாக நடித்து புகழ்பெற்ற கௌசிக்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். ஹரிப்பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். சுமன், கலாபவன் மணி, லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஒரு குக்கிராமம் தண்ணீர் இல்லாமல் வறட்சியை சந்திக்கிறது. அதற்கான பரிகாரம் செய்ய ஒரு ஜோசியரை வரவழைத்து குறி கேட்கிறார்கள். உங்கள் கிராமத்தில் உத்திர நட்சத்திரத்தில் பிறந்த சிறுவனை, ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு அழைத்து வந்தால் கிராமத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்று சொல்கிறார். அப்படி அனுப்பட்ட சிறுவன் பாதி வழியில் காணமல் போய்விடுகிறான். குருசாமி கண்ணில் அந்த சிறுவன் பட, அவனை அழைத்துக் கொண்டு குருவாயூர் உள்ளிட்ட பல கோயில்களுக்கு அழைத்து செல்கிறார். மீண்டும் அந்த சிறுவன் காணமல் போகிறான். பின் அந்த சிறுவன் என்ன ஆனான்? அந்த கிராமம் வறட்சியின் பிடியில் இருந்து மீண்டதா? என்பதுதான் கதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT