தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குடலிறக்கம் தீர...

எனக்கு இரு பெண் குழந்தைகள். இரண்டும் சிசேரியன் மூலம் பிறந்தவை. இரண்டாவது பிரசவத்திற்குப் பிறகு குடலிறக்கம் ஏற்பட்டு மிகவும் துன்பப்படுகிறேன். அடிக்கடி வயிற்று உப்புசம், பசியின்மை, ஒற்றைத் தலைவலி, சாப்

எஸ். சுவாமிநாதன்

எனக்கு இரு பெண் குழந்தைகள். இரண்டும் சிசேரியன் மூலம் பிறந்தவை. இரண்டாவது பிரசவத்திற்குப் பிறகு குடலிறக்கம் ஏற்பட்டு மிகவும் துன்பப்படுகிறேன். அடிக்கடி வயிற்று உப்புசம், பசியின்மை, ஒற்றைத் தலைவலி, சாப்பிடாமலேயே சாப்பிட்டது போன்ற உணர்வு, பின்தலை, பிடறி பகுதிகளில் கனம் மற்றும் வலி, குமட்டல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த உபாதைகள்  தீர ஆயுர்வேத சிகிச்சை உள்ளதா?

கலையரசி, காரைக்குடி.

கரு வயிற்றில் வளரும் போது அடிவயிற்றின் புறத்தசைகள் விரிவடைகின்றன. தோலின் அடிப்பகுதியிலுள்ள தடிமனாக உள்ள மிருதுவான சதைப் பகுதி மெலிந்துவிடுவதால், குடலுக்கும், தோலுக்கும் உள்ள இடைவெளி குறைந்து விடுகிறது. எப்போதும் விரிந்து சுருங்கி பலத்த இயக்கத்திலுள்ள குடலில், அபானன் எனும் வாயுவின் பங்களிப்பின் வழியாக, குடலில் சேரும் மலப் பொருட்கள் தங்காமல் சுகமாக வெளியேறுகின்றன. கரு வளர வளர வயிற்றினுள்ளே ஏற்படும் இடநெருக்கடி, இந்த அபானன் வாயுவின் செயல்பாடுகளில் முடக்கத்தையோ, சீற்றத்தையோ ஏற்படுத்தக் கூடும். அதன் மூலம் ஏற்படும் தசைக் கிழிசல் அல்லது ஓட்டை விழுதல் போன்றவற்றின் வழியாகக் குடல் இறங்கக் கூடும்.

சமையலறையில் அதிக நேரம் நின்று வேலை செய்தல், கனத்த சாமான்களை அடிக்கடி தூக்கி எடுக்க நேரிடுதல், பத்து பாத்திரங்களைக் குளிர்ந்த நீரில் துலக்குதல், சூடு ஆறிப் போயுள்ள இட்லி, பருப்பு சாம்பார், மெதுவடை, பழைய சாதம் போன்றவற்றைக் காலை உணவாகச் சாப்பிடுதல், மாதவிடாய் நாட்களில் தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளித்து வீட்டு வேலைகளில் ஈடுபடுதல், அதிக நடை, வேக நடை மூலம் பேருந்தில் ஏறிப் பின்புறம் நின்று கொண்டு பயணித்தல், ஸ்கூட்டரின் பின்புறம் அமர்ந்து குண்டும் குழியுமான தார்ச் சாலைகளில் பயணம் மேற்கொள்ளுதல் போன்றவற்றின் வாயிலாக, நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகள் அடிக்கடி தென்படும். தொப்புள் அல்லது அதற்குக் கீழே, வயிறு எப்போதும் புடைத்த நிலையில் காணும் இந்த உபாதை, அடிக்கடி ஏற்படுவதால் மிகுந்த துன்பத்தைத் தரும்.

குடலிறக்கத்திற்குக் காரணமாகும் தசைப் பகுதியினுள்ளே வலை வைத்து குடலை உள்ளே தள்ளி இந்த உபாதையிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று நிபுணர்கள் கூறினாலும், ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மறுபடியும் அறுவை சிகிச்சை பல பெண்களுக்குத் தேவைப்படுகிறது.

அதனால் இந்த உபாதையைத் தவிர்க்க, நீங்கள் உணவு வகைகளைச் சூடாகவும், சரியான நேர அமைப்புடனும் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு உணவு வேளைக்கு இடைவெளியில் வெதுவெதுப்பான தண்ணீர் பருக வேண்டும். மாதவிடாய் நாட்களில் இந்த உபாதை கூடுவதற்கான வாய்ப்பு உள்ளதால், அந்த நாட்களில் அதிகம் ஓய்வு எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

மேலும் படுக்கும்போது, இடது பக்கமாகச் சரிந்து படுப்பதால், இந்த உபாதை ஏற்படாது. சாம்பாரில் பயத்தம் பருப்பு கூடுதலாகச் சேர்ப்பது நலம். 2-4 பல் பூண்டு சேர்த்து பருப்பை வேக வைத்த பின் நன்றாகக் கடைந்து சாம்பார் கொதித்து, புளிவாசனை அடங்கியுள்ள நிலையில் இந்தப் பருப்பை அதனுடன் சேர்ப்பது மிகவும் நல்லது. எந்தக் காரணம் கொண்டும் சூடு ஆறிப்போன பருப்பு சாம்பாரை மறுபடியும் சூடு செய்து சாப்பிட வேண்டாம். காரணம் வயிற்றில் வாயுவின் ஓட்டத்தை அது அதிகரிக்கக் கூடும்.

ஒரு சில ஆயுர்வேத மருந்துகளை நீங்கள் அன்றாடம் உணவில் சேர்த்துவர, வயிற்றுப் பகுதியின் தசைகளுக்கு வலுவூட்டி, அறுவை சிகிச்சைக்கான காலத்தைத் தள்ளிப் போடலாம். அதற்கான வாய்ப்பினைத் தவிர்க்கவும் செய்யலாம். சுகுமார கிருதம், விதார்யாதி கிருதம், அஷ்ட சூரணம், ஹிங்குவசாதி சூரணம், வைஸ்வானரம் சூரணம், இந்து காந்தம் கிருதம் போன்ற மருந்துகளில் எது தங்களுடைய உடல்நிலைக்குத் தகுந்தது என்பதை ஆயுர்வேத மருத்துவர்களிடமிருந்து அறிந்த பிறகு உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். உணவுடன் சேர்த்துச் சாப்பிடும் வகையில் பல ஆயுர்வேத மருந்துகளை முனிவர்கள் நமக்கு வழங்கியிருப்பது நோயைத் தீர்ப்பதற்கு மட்டுமல்ல, நோய் நொடியின்றி பல காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கும்தான். அதனால் நீங்கள் கவலை ஏதும் கொள்ளாமல், மருந்துகளைச் சாப்பிட்டு உங்கள் உபாதைகளிலிருந்து விடுபடலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT