முகப்பு
தினமணி கதிர்

விழிப்புணர்வு: திருப்பூர் முதல் பாரீஸ் வரை!

மனிதராகப் பிறந்த எல்லாருக்குமே பிரச்னைகள் இருக்கின்றன. பிரச்னைகளின் பாதிப்பில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக விழிப்புணர்வுப் பயிற்சிகளை நடத்தி

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:28 PM
பகிர்:

மனிதராகப் பிறந்த எல்லாருக்குமே பிரச்னைகள் இருக்கின்றன. பிரச்னைகளின் பாதிப்பில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக விழிப்புணர்வுப் பயிற்சிகளை நடத்தி வருகிறார் திருமதி ஜெயமணி. திருப்பூர், உடுமலைப்பேட்டை, பவானி, ஈரோடு என்று கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல விழிப்புணர்வுக் கூட்டங்களில் பேசியும் வருகிறார் அவர். தனது அனுபவத்தின் அடிப்படையில் சோதித்தறிந்த பல விஷயங்களை மக்களிடம் பரப்பி வருகிறார். பிரான்சின் தலைநகர் பாரீஸில் இருந்து ஒலிப்பரப்பாகும் "தமிழ் ஒலி' வானொலியில் இவருடைய நிகழ்ச்சி அண்மையில் ஒலிபரப்பானது.

ஜெயமணி தரும் மனரீதியான விழிப்புணர்வுப் பயிற்சிகளைப் பற்றி அவரிடம் பேசினோம்.

மனதிற்கான பயிற்சிகளைத் தர வேண்டும் என்று உங்களுக்கு முதன்முதலில் எப்படித் தோன்றியது?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருப்பூர்தான். ஸ்கூல் வரைதான் படிப்பு. குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து படிக்க முடியவில்லை. பள்ளியில் படிக்கும்போதே சுற்றுப்புறத்தில் நடக்கும் பல விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பேன். வீட்டில் வந்து அதைப் பற்றியெல்லாம் ஆர்வத்துடன் பேசுவேன். நான் நன்றாகப் பேசுவதைக் கேட்டு எனது ஆசிரியர்கள், ""நீ வருங்காலத்தில் நல்ல லாயராக ஆவாய்'' என்று கூறுவார்கள். என்னுடைய அம்மாவும் உன்னால் முடியும் என்று சொல்லி ஊக்கப்படுத்துவார்கள். திருமணம் ஆனவுடன் எனது கணவர் மாயகிருஷ்ணன் சமூகத்தில் நிலவுகிற பல பிரச்னைகளைப் பற்றி என்னிடம் பேசுவார். அந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் என்ன தீர்வு என்று சொல்வார். இப்படிப் பேசிப் பேசியே சுயசிந்தனை அடிப்படையில் நிறைய முடிவுகளுக்கு வந்தோம்.

இப்படி எனக்குத் தெரிந்த பல விஷயங்களைப் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். நான் கூறிய ஆலோசனைகளின்படி நடந்ததால் அவர்களுடைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைத்ததாகக் கூறினார்கள். இதனால் என் மேலேயே எனக்கு நம்பிக்கை வந்தது.

எனக்குத் தெரிந்த கருத்துகளை நான்கு பேருக்கு மட்டும் சொன்னால் போதாது. நிறையப் பேருக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.



ஜெயமணி

முதன்முதலில் எங்கே பேசினீர்கள்?

இந்தச் சமயத்தில் 2008 ஜுன் மாதத்தில் என் கணவர் "அமைதி இங்கே கிடைக்கும்' என்ற புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்யும்விதமாகத் திருப்பூர் ரோட்டரி கிளப்பிற்குக் கொண்டு சென்றோம். அப்போது அங்கிருந்தவர்கள் என்னை விழிப்புணர்வுக் கருத்துகளைப் பேசும்படி கேட்டுக் கொண்டார்கள். முதன்முதலில் 15 நிமிடம் பேசினேன். அப்புறம் ரோட்டரி சங்கம் மட்டுமல்லாமல், அரிமா சங்கம், நகைச்சுவை மன்றம், தமிழ்ச்சங்கம் என்று திருப்பூரில் பேச ஆரம்பித்தேன். இதுதவிர, உடுமலைப்பேட்டை, பவானி, ஈரோடு போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கெல்லாம் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளின் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான உளவியல் பயிற்சிகளைக் கொடுத்து வருகிறேன். இதுவரை பல கூட்டங்களில் பேசி வருகிறேன்.

வெளியூரில் நடக்கும் கூட்டங்களுக்குச் சென்று வருவது சிரமமில்லையா?

வெளியூர்களுக்குக் கூட்டங்களுக்குச் சென்று வருவது கொஞ்சம் சிரமம்தான். சிலநேரங்களில் கூட்டம் தான். சிலநேரங்களில் கூட்டம் முடியவே இரவு 10 மணியாகிவிடும். அதனால் அந்த மாதிரிச் சமயங்களில் எனது குழந்தைகளைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு போவேன்.

என்ன என்ன விஷயங்களைப் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துகிறீர்கள்?

மனிதர்களுக்குப் பலவகையான பிரச்னைகள் ஏற்படுகின்றன. முதலில் உடல் நலப் பிரச்னையைப் பார்ப்போம். இப்போது கண்டபடி சாப்பிட்டுவிட்டு உடல் எடையை அதிகரித்துக் கொள்கிறார்கள். இப்படி உடல் எடையை அதிகரிப்பதால் வரக் கூடிய பிரச்னைகளைப் பற்றி கூட்டங்களில் பேசுகிறேன். உதாரணமாக 1 கிலோ எடை அதிகரித்தால் நமது உடலில் 30 கி.மீ. அதிக தூரம் ரத்தக் குழாய்களில் ரத்தம் சுற்றி வர வேண்டியிருக்கும் என்று சொல்வேன். இதனால் இதயத்திற்கு அதிக வேலை தருகிறோம். எனவே சரியான உடற்பயிற்சி, சரிவிகித உணவு, மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்வேன்.

மனநலப் பிரச்னைகளைப் பொறுத்தவரை பெரும்பாலோர் எதிர்மறையான சிந்தனைகளையே கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், சிறிய வயதில் இருந்தே பல்வேறு தோல்விகளைச் சந்தித்து இருப்பார்கள். இவர்களுக்குப் பாசிட்டிவ் திங்கிற்கான பயிற்சிகளைத் தருகிறேன். இதற்கு மூச்சுப் பயிற்சி அளிக்கிறேன். மூச்சை நன்றாக உள்ளிழுத்து மூச்சை அடக்கிக் கொண்டிருக்கும்போது, "நான் விழிப்புணர்வுடன் இருக்கிறேன்' என்று அடிக்கடி சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வது ஆழ்மனதில் பதிந்து நல்ல பலன்களைத் தருகிறது.

குழந்தைகளுக்காக இக்காலத்தில் பலர் சொத்து சேர்த்து வைக்க ஆசைப்படுகிறார்கள். தான் பட்ட கஷ்டத்தை குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பற்றி மட்டும் யாரும் கவலைப்படுவதில்லை. இந்த உலகத்தில் யாருடைய துணையும் இன்றி தனியாக வாழும் அளவுக்கு அவர்களுக்கு மனதில் தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். வளர்க்க வேண்டும். வாழ்க்கை நிலையானதில்லை. எந்த நேரத்திலும் எதுவும் நேரலாம். எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் சொல்லி அவர்களை வளர்க்க வேண்டும். நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை அப்படித்தான் வளர்க்கிறோம்.

பெண்களைப் பொறுத்தவரை அவர்களுடைய சக்தி அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களுக்கு இருக்கிற கொஞ்சம் நஞ்ச சுதந்திரத்தையும் அவர்கள் பயன்படுத்துவதில்லை.

சுற்றுப்புறத்தைப் பற்றி யாருக்குமே அக்கறையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மேடையில் பேசுகிறேன். அதைவிட முக்கியமானது நாம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது முழு கவனமும் சாலையில்தான் இருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு ஊட்டும்விதமாகவும், சாலையில் செல்லும் போது ஏற்கனவே நடந்த விஷயங்களையோ, இனிமேல் நடக்கப்போகிற விஷயங்களையோ பற்றி சிந்திக்காமல் கவனத்துடன் செல்வதற்கான மனநலப் பயிற்சிகளைத் தருகிறேன். விழிப்புணர்வு ஊட்டும்விதமாகப் பேசுகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சாலையில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன.

பாரீஸில் உள்ள வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

தஞ்சாவூரில் உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாரும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அங்கே என் கணவர் எழுதிய புத்தகங்களை விற்பனை செய்வதற்காகவும், அறிமுகப்படுத்துவதற்காகவும் போயிருந்தோம். அப்போது பல வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் புத்தகத்தைப் பார்த்துவிட்டு, "இவ்வளவு நல்ல கருத்துகள் உலகம் முழுவதும் பரவலாகச் செல்ல வேண்டும்' என்று கூறினார்கள். அவர்கள் செய்து தந்த ஏற்பாட்டினால்தான் பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ் ஒலி வானொலி நிகழ்ச்சியில் நான் பங்கு பெற்றேன். நேரடி ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதுமிருந்த தமிழ் மக்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்டார்கள். நான் அவற்றிற்குப் பதில் சொன்னேன்.

உங்களுடைய இந்தப் பணிக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு?

எனது கணவர் வீ.மாயகிருஷ்ணன் எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். மேலும்

எனக்குப் பலவிஷயங்கள் தெரிவதற்கும் அவரே காரணம். எனது மகளுக்கும் எனது மகனுக்கும் நான் இப்படிப்பட்ட விழிப்புணர்வுக் கூட்டங்களில் பேசுவதில் பெருமையே.

முழு கட்டுரையைப் படிக்க →