என்னுடைய மகள் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள். காலையில் சுறுசுறுப்பாக எழுந்து எனக்கு உதவிகள் செய்ய வேண்டிய அவள், அப்படி இல்லாமல் சோம்பலுடன் படுத்தேயிருக்கிறாள். கேட்டால் களைப்பாக இருக்கிறது என்கிறாள். அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்றே புரியவில்லை. அவளுடைய சோம்பலும் களைப்பும் மாற வழி என்ன?
பார்வதி, தேவகோட்டை.
உங்களுடைய மகளுக்கு உடலில் சக்தி இருக்கிறது. ஆனால் வேலை செய்வதில் மனம் ஈடுபடவில்லை. அதாவது உடலால் செய்யும் வேலைகளில் வெறுப்பும், சுகமாக இருப்பதில் விருப்பமும் அவளுக்கு இருப்பதால், சோம்பல் உடலில் அதிகம் இருக்கிறது. ஆனால் அவளிடம் கேட்டால் களைப்பாக இருக்கிறது என்கிறாள். களைப்பு என்பது ஒரு காரியத்தில் மனது ஈடுபாடு கொள்ளாமலிருப்பதும், அப்படி மனது அக்காரியத்தைச் செய்ய நினைத்தாலும், உடல் அதற்கு சம்மதிக்காமலிருப்பதாகும். அம்மா அழைக்கிறாளே, காரியங்களைச் செய்ய வேண்டுமே என்று மனம் நினைத்தாலும் உடல் பல காரணங்களால் செய்ய மறுப்பதும் களைப்பாகும். அதனால் சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல.
மனிதர்களுக்கு மூன்றுவித காரணங்களால் உண்டாகலாம். அவை 1. வியாதியினால் 2. ஆகாரக் குறைவினால் , உண்ட உணவைச் சரிவர உடல் உபயோகப்படுத்தாததால் 3.மனோ வியாதியால். உங்களுடைய மகளுக்கு ரத்தப் பரிசோதனையில் சோகை நோய் உள்ளதா என்ற பரிசோதனையைச் செய்தீர்களா? ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை உபாதை உள்ளதா என்பதைக் கவனித்தீர்களா? மாதவிடாய் சரியாக ஏற்படுகிறதா? ஏனென்றால் இவற்றில் உடல் சக்தி குறைந்து களைப்பு ஏற்படுவது உண்டு. அவளுடைய வயதிற்கே உரிய மனப்போராட்டங்கள் என்ன? என்று அவளுடன் அமர்ந்து அம்மாவாகிய நீங்கள்தான் பேச முடியும். அப்பாவிடம் கூற பெண் குழந்தைகள் கூச்சப்படும் என்பதால், இந்த விஷயத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அந்தந்த வியாதிகளைக் குணப்படுத்துவதால் களைப்பு நீங்கி விடும்.
போதுமான அளவு அவள் உணவை விரும்பிச் சாப்பிடுகிறாளா? படிப்பில் செலுத்தும் கவனம், உணவிலும் இருக்க வேண்டும். அவள் உண்ணும் ஆகாரம், காய்கறி, மாமிசம், அரிசி, கோதுமை என்று எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் ஜீரண உறுப்புகள் என்ற ரசாயன சாலையில் உடலுக்குத் தேவையானால் பொருள்களாகப் பிரிக்கப்பட்டு, தாது பரிணாமம் செய்யும் கல்லீரல் முதலிய ரசாயன சாலைகளில் ரசாயன மாற்றங்களை அடைந்து அந்தந்த அவயவங்களுக்குத் தகுந்த மாதிரி மாற்றப்பட்டு ரத்தத்தின் மூலமாகச் செலுத்தப்படுகிறது. சர்க்கரைச் சத்தின் மூலப் பொருளாகிய க்ளைகோஜின், தசை நார்கள் உழைக்கும் போது, சர்க்கரையாக மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது. அதன் கழிவானது, ரத்தத்தில் சேர்ந்து வெளியே தள்ளப்படுகிறது. இவற்றை மாற்றுவதில் நமது மூச்சுக் காற்றாகிய பிராண வாயு மிகவும் உபயோகமாகிறது.
களைப்பு ஏற்படாதிருக்க மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியம். மனிதர்களுடைய மூளை உடலின் எடையில் 2 சதவிகிதம் தானிருக்கிறது. ஆனாலும் அதற்கு 14 சதவீதம் ரத்தம் தேவைப்படுகிறது. 23 சதவிகிதம் பிராண வாயுவை உபயோகப்படுத்துகிறது. மற்ற அவயவங்களைவிட சர்க்கரைச் சத்தையும் அதிகமாக உபயோகிக்கிறது. ஆக மூளைக்குப் போதுமான ரத்தமோ, பிராணவாயுவோ அல்லது சர்க்கரைச் சத்தோ இல்லாவிட்டால் மூளை தனது வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகிறது. நரம்புகளினால் இயக்கப்படுகிற பல சுரப்பிக் கிரந்திகளும் வேலை செய்யாமல் போகிறது. அப்போது களைப்பு ஏற்படுகிறது. அதனால் பள்ளிகளில் யோகாசனப் பயிற்சியை நன்கு கற்றறிந்த வல்லுனர்களை நியமித்து மாணவ மாணவியருக்கு மூச்சுப் பயிற்சியைக் கற்றுத் தருவது காலத்தின் கட்டாயமாகும்.
பள்ளியில் ஏற்படும் சில விரும்பத்தகாத சம்பவங்களினால் உங்களுடைய மகளுக்கு பயம், சோகம் போன்றவை ஏற்படுகிறதா? ஏனென்றால் அவற்றின் மூலம் நம் உடலிலுள்ள பல கிரந்திகள் அதிகமாக இயங்கி சாரமற்றதாகவோ அல்லது இயங்காமலேயோ போய்விடும்பட்சத்தில், போதுமான சத்துக்கள் ரத்தத்தில் குறைந்து போய்விடுகிறது. அப்போதும் களைப்பு ஏற்படுகிறது.
தாதுக்களின் மிக உயர்ந்த சத்தான ஓஜஸ் எனும் தாது இதயத்தை இருப்பிடமாகக் கொண்டு, உடலெங்கும் பரவி உயிர்நிலைத்திருக்க உதவுகிறது. இந்த ஓஜோ தாது, பசி, கோபம், அதிக சிந்தனை, துயரம், சாகசம் போன்றவற்றால் குறைவடையும். அப்போது வேலைகளில் உற்சாகம் உண்டாகாது. எப்போதும் களைத்தே உடல் காணப்படும். அதனால் களைப்பு ஏற்படாமலிருக்க நல்ல உணவும், மன நிம்மதியும் இருக்க வேண்டும்.
உங்களுடைய மகள் சுறுசுறுப்பாக காலையில் எழ, அவள் இரவு உணவிற்குப் பிறகு, கற்றாழையை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்தாகிய "குமார்யாஸவம்' எனும் மருந்தை சுமார் 25-30 மி.லி. சாப்பிடச் சொல்லவும். தொடர்ந்து சாப்பிடலாம். பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்ல மருந்தாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.