முகப்பு
தினமணி கதிர்

மருத்துவம்: ஒரு மருந்து...​ ஒரு ​ பயிற்சி...​ ஒரு தியானம்!

''சித்த மருத்துவமா? ஆயுர்வேதமா? அதெல்லாம் இந்தக் காலத்துக்குப் பொருந்துமா? இந்த மருத்துவமுறைகளுக்கு அறிவியல் அடிப்படை என்று ஏதாவது இருக்கிறதா?'' என்று கேட்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். வெறும் அ

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:45 PM
பகிர்:

''சித்த மருத்துவமா? ஆயுர்வேதமா? அதெல்லாம் இந்தக் காலத்துக்குப் பொருந்துமா? இந்த மருத்துவமுறைகளுக்கு அறிவியல் அடிப்படை என்று ஏதாவது இருக்கிறதா?'' என்று கேட்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். வெறும் அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு பரம்பரையாக இந்த மருத்துவங்கள் செய்யப்படுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் நம்பிக்கைகளைப் பொய்யாக்கும்விதமாக, நமது தமிழ்நாட்டின் சித்த மருத்துவத்தை அறிவியல் அடிப்படையில் சரியென்று மெய்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் சித்த மருத்துவரான கோ.அன்பு கணபதி.

அவர் சித்த மருத்துவர் மட்டுமல்ல, நாமக்கல்லுக்கு அருகேயுள்ள பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் கல்லூரியில் விலங்கியல்துறையில் பேராசிரியராகவும், பின்னர் அந்தக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்.

தனது நவீன அறிவியல் கல்வியறிவின் அடிப்படையிலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல நோயாளிகளுக்குச் சித்த மருத்துவ அடிப்படையில் மருத்துவம் செய்த அனுபவத்தின் அடிப்படையிலும், சித்த மருத்துவம் அறிவியல்பூர்வமானதே என்று நிரூபித்திருக்கிறார் அவர்.

சென்னை வேளச்சேரியில் உள்ள அவருடைய "சித்த யோக நுட்ப ஆய்வு மையத்தில்' அவரைச் சந்தித்துப் பேசினோம்.

"" நமது தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவமுறையான சித்த மருத்துவத்தைப் பற்றி யாரிடமாவது கேட்டுப் பாருங்களேன். அது வெறும் அனுபவ அடிப்படையில் செய்யப்படும் மருத்துவம் என்பார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. ஏனென்றால் சித்த மருத்துவத்தை சில குடும்பத்தினர் மட்டுமே பரம்பரையாகச் செய்து வந்தனர். எனவே அது வெறும் அனுபவ அறிவாக நின்று போனது.

அறிவியல் அடிப்படை என்றால் ஆய்வுக் கூடத்தில் சோதனைக் குழாய்களை வைத்துக் கொண்டு சோதனை செய்து பார்ப்பது என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள். சயின்ஸ் என்ற ஆங்கிலச் சொல் சியன்ஸ் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. சியன்ஸ் என்றால் உண்மை என்று பொருள்.

சித்த மருத்துவத்தில் ரத்தசோகைக்கு கரிசலாங்கண்ணியைச் சாப்பிடச் சொல்வார்கள். அதைச் சாப்பிட்டால் சிலநாட்களில் ரத்த சோகை சரியாகிவிடும். காரணம், கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதை அனுபவ அடிப்படையில் சித்த மருத்துவம் உண்மையென்று சொல்லும்போது, அதே கரிசலாங்கண்ணியை விலங்குகளுக்குக் கொடுத்து, விலங்குகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களை அளந்து, நவீன மருத்துவம் அதை அறிவியல் அடிப்படை என்கிறது. இதுதான் வித்தியாசம்.

நான் பரம்பரையாகச் சித்த மருத்துவம் பார்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன். பதிவு பெற்ற அரசு அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய மருத்துவன். தினமும் நோயாளிகளைச் சந்தித்து மருத்துவம் பார்ப்பவன்.

பிற மருத்துவமுறைகளைக் காட்டிலும் சில நோய்களைச் சித்த மருத்துவத்தின் மூலம் மிகச் சிறப்பாகத் தீர்க்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டவன். எனவே சித்த மருத்துவத்திற்குட்படுத்தப்படும் நோயாளிகளின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைச் சோதனை செய்து பார்க்கலாம் என்ற முடிவு செய்தேன்.

மிகக் கொடிய வியாதி என்று கருதப்படும் ஹெபடைட்டீஸ் பி என்ற மஞ்சள் காமாலை நோய்க்கு சித்த மருத்துவத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை செய்தேன். வேலிப் பருத்தி, குப்பை மேனி, நாயுருவி போன்ற மூலிகைகளைக் கொண்டு செய்யப்பட்ட லிவரான் மற்றும் லிவாக் போன்ற மருந்துகளை அவர்களுக்குக் கொடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை நவீன மருத்துவ அடிப்படையில் செயல்படும் உடல் பரிசோதனை ஆய்வுக் கூடங்களில் டெஸ்ட் எடுக்கச் சொன்னேன். ஒவ்வொரு 15 நாட்களிலும் அவர்களுக்கு நோய்களுக்கான தன்மை உடலிலிருந்து குறைந்து கொண்டே வந்தது. பின்னர் முற்றிலும் நோய் நீங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக ஏஆந அஞ் பாசிட்டிவாக இருந்தது, முற்றிலும் நெகட்டிவாக ஆகிவிட்டது. அதாவது ஹெபடைட்டீஸ் பி என்ற மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகிவிட்டது. இது உலக அளவில் புதிய முயற்சி என்று துணிந்து சொல்வேன். இந்த மருத்துவப் பரிசோதனைகளுக்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. இப்படி பிற நோய்களுக்கும் சித்த மருத்துவம் செய்யப்படும்போது நோயாளிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து அவற்றையும் தொகுத்து சித்த மருத்துவத்திற்கான அறிவியல் அடிப்படையை நிரூபித்திருக்கிறேன்.

இதற்காக நவீன மருத்துவத்தைக் குறை சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். நவீன மருத்துவம் காலரா, பிளேக், மலேரியா, டிபி போன்ற பல தொற்றுநோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றியுள்ளது. தடுப்பூசி மருந்துகளைக் கொடுத்திருக்கிறது. விபத்துகளின் போது நிறைய ரத்தத்தை இழந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு ரத்த மாற்று சிகிச்சை செய்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. பிள்ளைப் பேறின் போது சிசேரியன் எனப்படும் அறுவைச் சிகிச்சை செய்து பல தாய்களையும், சேய்களையும் காப்பாற்றியிருக்கிறது. பல நவீன மருத்துவப் பரிசோதனை முறைகள் நவீன மருத்துவமுறையில் உள்ளன. இவற்றை எல்லாம் மறுக்கவே முடியாது.

அதேசமயம், தொண்டையில் டான்சில் கட்டி, ஆஸ்த்துமா, இதய நோய், சர்க்கரை வியாதி, கல்லீரலில் பழுது ஏற்படுதல், வயிற்றுப் புண், சிறுநீரகக் கல், மூட்டு வலி, கழுத்துவலி, தலையில் முடி கொட்டுதல், இளநரை, அடிமுதுகு வலி, சோரியாஸிஸ், புற்றுநோய், மூலநோய் போன்றவற்றிற்கு சித்த மருத்துவத்தில் பல அற்புதமான மருந்துகள் உள்ளன. எந்தவிதமான பக்கவிளைவுகளோ, பின் விளைவுகளோ, எதிர்விளைவுகளோ சித்த மருத்துவத்தில் கிடையவே கிடையாது.

ஆனால் சிலர் சித்த மருத்துவ மருந்துகளைச் சாப்பிட்டால், சிறுநீரகம் செயல் இழந்துவிடும் என்பார்கள். அதற்கு அவர்கள் கூறுகிற காரணம், சித்த மருத்துவத்தில் உலோகங்களைப் பயன்படுத்துகிறார்கள்; அது சிறுநீரகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே.

சித்த மருத்துவத்தில் உலோகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையே. ஆனால் உலோகங்களை அப்படியே நேரடியாகப் பயன்படுத்துவதில்லை. உலோகங்களை உலோக உப்புகளாக மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, துத்தநாகம் துத்தநாக ஆக்ûஸடாக மாற்றப்படுகிறது. இரும்பும், கந்தகமும் சேர்ந்து ஃபெரஸ் சல்பேட் ஆகிறது. கந்தகம், குப்பிரிக் சல்பேட்டாக மாற்றப்படுகிறது. எனவே உடலில் இதனால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேலும் நமது உடலே உலோகங்களால் ஆனதுதானே? நமது உடலில் இரும்பு இல்லையா? துத்தநாகம் இல்லையா? ஒரு மனிதனின் உடலில் உள்ள ரத்தம் முழுவதையும் எடுத்து அதை எரித்தால் கடைசியில் இரண்டு ஆணிகள் செய்யும் அளவுக்கு இரும்பு கிடைக்கும்.

சித்த மருத்துவம் "உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற அடிப்படையைக் கொண்டது. நமது தமிழர்களின் உணவுப் பழக்கமும் இன்றைக்கு இருப்பதைப் போல வெறும் அரிசி, கோதுமையாக முற்காலத்தில் இருந்ததில்லை. தமிழர்களின் உணவில் மிக முக்கியப் பங்கு, சிறு தானியங்களுக்கு இருந்தது. சிறு தானியங்களில் நார்ச்சத்தும், புரதமும் அதிகம். சிறுதானியங்கள், காய்கறிகள் உள்ள உணவை அதிகம் உட்கொண்டால், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படாது. ஆனால் இப்போது நாம் மாவுச் சத்துள்ள உணவுகள், இனிப்பு, எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவுகளையே அதிகம் உண்கிறோம். அதனால்தான் நாம் அதிக அளவு நோய்களைச் சநதிக்கிறோம்.

சித்த மருத்துவ அடிப்படையில் நான் 42 மருந்துகளைத் தயாரித்து இருக்கிறேன். சித்த மருத்துவத்தை வெறும் மருந்து கொடுத்துச் செய்யும் சிகிச்சையாக நான் பார்க்கவில்லை. நமது சித்தர்கள் யோகக் கலையிலும் வல்லுநர்கள். எனவே ஒரு வியாதிக்கு மருந்து, ஒரு யோகாசனப் பயிற்சி, ஒரு தியானம் ஆகியவை அவசியம் என்பதால் நான் என்னிடம் வரும் நோயாளிகளுக்கு இவற்றில் பயிற்சி தருகிறேன். இதைச் சித்த யோக மருத்துவம் என்று சொல்கிறேன். ஆஸ்த்துமா, மூட்டுவலி, சிறுநீரகக் கற்கள், கர்ப்பப்பைக் கட்டி, மலட்டுத்தன்மை போன்றவற்றை நிரந்தரமாகக் குணமாக்கக் கூடிய மருந்துகளும் அதற்கான யோக, தியானப் பயிற்சிகளைச் செய்யப் பயிற்றுவிக்கும் 15 டிவிடிகளையும் தயாரித்திருக்கிறேன். சித்த மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் இந்த டிவிடிகளைப் பார்த்து யோகப் பயிற்சியும், தியானப் பயிற்சியும் செய்து கொள்ளலாம்.

குறிப்பாக வயதான காலத்தில் நினைவாற்றல் குறைபாடு எல்லாருக்கும் வந்துவிடுகிறது. படிக்கிற மாணவர்களுக்கும் நினைவாற்றல் அவசியம். இதற்காக வல்லாரை டானிக், மெமரி அப் கேப்ஸ்யூல் போன்றவற்றைத் தயாரித்திருக்கிறேன். ஸ்டோன் நில் என்ற மாத்திரையை சிறுநீரகக் கற்கள் உள்ள நோயாளிகளுக்குத் தயாரித்திருக்கிறேன். கருப்பையில் நீர்க்கட்டி, கர்ப்பப்பை கட்டி உள்ள பெண்களுக்கு கைனவில் என்ற மருந்தையும், நரசிம்ம கர்ஜனாசனா என்ற பயிற்சிமுறையையும் தருகிறேன். முடி உதிர்வதைத் தடுக்க பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, பிரம்மி வழுக்கை போன்ற மூலிகைகளைக் கொண்டு த்ரீ இன் ஒன் என்ற ஹேர் ஆயிலைத் தயாரித்திருக்கிறேன். இவையெல்லாம் எனது 15 ஆண்டு கால அறிவியல் அடிப்படையிலான ஆராய்ச்சியின் விளைவுகளாகும்.

சித்த மருத்துவத்தை அறிவியல் அடிப்படையில் ஆராயும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை பல பன்னாட்டு, தேசிய கருத்தரங்குகளில் சமர்ப்பித்திருக்கிறேன். மருத்துவ இதழ்களிலும் வெளியிட்டிருக்கிறேன். இதனால் என்னைப் பாராட்டி சிலம்பொலி செல்லப்பன் எனக்கு அறிவியல் சித்தர் என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறார்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →