முகப்பு
தினமணி கதிர்

முரண்சுவை 26: கண்டிப்பும் கருணையும் ஒரே இடத்தில்!

ஐ.ஜி. என்றால் அருள். அருள் என்றால் ஐ.ஜி. என்று எல்லோருடைய மனதிலும் நீக்கமற நிறைந்தவர்தான் பிரெட்ரிக் விக்டர் என்கிற அருள். காவல்துறை அதிகாரிகளில் இன்றும் சிகரமாக நிற்பவர். காவல்துறையில் அவர் ஒரு கலங்க

தினமணி கதிர்

முரண்சுவை 26: கண்டிப்பும் கருணையும் ஒரே இடத்தில்!

ஐ.ஜி. என்றால் அருள். அருள் என்றால் ஐ.ஜி. என்று எல்லோருடைய மனதிலும் நீக்கமற நிறைந்தவர்தான் பிரெட்ரிக் விக்டர் என்கிற அருள். காவல்துறை அதிகாரிகளில் இன்றும் சிகரமாக நிற்பவர். காவல்துறையில் அவர் ஒரு கலங்க

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:45 PM
பகிர்:

ஐ.ஜி. என்றால் அருள். அருள் என்றால் ஐ.ஜி. என்று எல்லோருடைய மனதிலும் நீக்கமற நிறைந்தவர்தான் பிரெட்ரிக் விக்டர் என்கிற அருள். காவல்துறை அதிகாரிகளில் இன்றும் சிகரமாக நிற்பவர். காவல்துறையில் அவர் ஒரு கலங்கரை விளக்கம். காக்கிச் சட்டைக்குள் ஒரு காமராஜர் என்று அந்தக் காலங்களில் நாங்கள் அன்போடு கூறுவோம்.

மிகவும் கண்டிப்பானவர். அதேசமயம் எதையும் மனிதத் தன்மையோடு அணுகுவார். இந்தத் தலைமுறைக்குத் தெரிந்திராத வார்த்தை "காட்டன் பெட்டிங்' என்கிற சூதாட்டம். அந்த மாதிரி சூதாட்டங்களை எல்லாம் ஒழித்துக் கட்டினார். அதன் மூலம் ஏழை எளிய மக்களைக் காப்பாற்றினார். பத்தானிக்காரன் என்று சொல்லக்கூடிய வட்டிக்கு விடுபவர்களின் கொட்டங்களை ஒடுக்கினார். அதன்மூலம் பல நடுத்தர ஏழை மக்கள் பலன் அடைந்தனர்.

அதிகாரத்திற்கு வளைந்து கொடுப்பதோ, பயப்படுவதோ அவரிடம் என்றுமே இருந்ததில்லை. லஞ்சம் என்ற வார்த்தை அவரது சிந்தனையிலும் கிடையாது.அது அவரிடம் நெருங்கவும் முடியாது. நன்றாக வேலை செய்யும் காவல்துறை அதிகாரிகளை உடனுக்குடன் பாராட்டுவார். அதிலே அவரிடம் கஞ்சத்தனம் கிடையாது.

ஐ.ஜி அருள், 1917-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் என்னும் ஊருக்கு அருகிலுள்ள வாழையடி என்ற கிராமத்தில் பிறந்தார். 1942-ம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சியில் அவர் காவல்துறையில் சேர்ந்தார். மனைவியின் பெயர் மேபெல். அவர் பிரபல தொழில் அதிபர் ஏ.வி.தாமஸ் என்பவருடைய மூத்த மகள்.

காவல்துறையில் உள்ள அனைத்துத் துறைகளும் அருளுக்கு அத்துபடி. சட்டம் ஒழுங்கு, குற்றப்புலனாய்வு, போக்குவரத்துக் கட்டுப்பாடு, ஊழல் தடுப்பு கண்காணிப்பு, பயிற்சி அளித்தல், தகவல்களைச் சேகரித்தல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவு, பரந்துபட்ட அனுபவம், நல்ல முறையில் செயலாற்றுதல், பிறரையும் நல்ல முறையில் செயலாற்ற வைப்பது போன்றவற்றில் முழுமையான ஞானம் உள்ளவர்.

அருள் பதவியில் இருந்த காலம், காவல்துறையின் பொற்காலம் என்றே கூறலாம். சர்வதேச காவல்துறை நிறுவனத்தின் உதவித் தலைவராக இருந்தார். இது ஆசியக் கண்டத்தின் முதல் உயர்ந்த அதிகாரி என்ற பொறுப்பு.

ரிவால்வர் சுடுவதில் தன்னிகரற்று விளங்கினார். சிறந்த ஆக்கி விளையாட்டு வீரர். புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர். கோவையில் நடந்த பரபரப்பான கள்ள நோட்டு வழக்கை எல்லோரும் வியக்கத்தக்க அளவில் விசாரணை செய்த நிபுணர். அழகாக ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அவருடைய கையெழுத்தும் மிக அழகாக இருக்கும்.

1948-ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு மீறல்களில் மதுரை தத்தளித்தது. ஐ.ஜி அருள் தான் துணிவு மிக்க நடவடிக்கைகளை எடுத்து அமைதிக்குக் கொண்டு வந்தார். காவல்துறை மாவட்டங்கள் அனைத்தையும் திட்டம் தீட்டித் தணிக்கை செய்த முதல் காவல்துறை அதிகாரி. காவல்துறையில் நன்றாகப் பணிபுரிபவர்களைப் பார்த்த இடத்திலேயே வெகுமதி வழங்குவார்.

தமிழ்நாட்டுக் காவல்துறையில் இருந்து டில்லி சென்று சி.பி.ஐ இயக்குநராகப் பணியாற்றி புகழ் பெற்றார். காவல்துறைக்குக் களங்கம் கற்பிக்கக்கூடிய கறுப்பு ஆடுகளைத் தீவிரமாகக் களை எடுத்தார். ஒரு முறை ஒரு கொலையைக் கண்டுபிடிக்க ஒற்றை மாட்டு வண்டியில் அதுவும் சதுப்பு நிலத்தில் 40 மைல் பயணம் செய்திருக்கிறார். அவர் ஓமந்தூரர் ராமசாமி ரெட்டியார் முதல் கலைஞர் கருணாநிதி வரை ஏழு முதலமைச்சர்களின் கீழ் பணிபுரிந்திருக்கிறார்.

கலைஞர் ஆட்சிக்கு வந்த புதிதில் காவல்துறை முன்வைத்த 133 பரிந்துரைகளில், 115 பரிந்துரைகளை உடனே ஏற்று அவற்றை நிறைவேற்ற 4 கோடியே 80 லட்ச ரூபாயை ஒதுக்கினார். ராஜாஜி மேல் உள்ள பாசத்தினாலும், மரியாதையினாலும் அவரது இறுதி ஊர்வலத்தில் அருள் நடந்தே சென்றார்.

பத்தரை மணிதான் அலுவலக நேரம். ஆனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்திற்குச் சென்றுவிடுவது அவரது வழக்கம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் எந்த காவலரும், எந்தவித முன் அனுமதியுமின்றி அவரைச் சந்திக்க வழி செய்தார். அவருக்கு யார் கடிதம் எழுதினாலும், உடனே பதில் எழுதும் பழக்கமுள்ளவர். அவர் மறைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, அவரைச் சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டு, உரையாடி மகிழ்ந்தேன்.

1976 மே மாதம், 31-ம் தேதி, 36 ஆண்டுகள் கடும் போலீஸ் வேலையில் இருந்து ஓய்வு பெற்றார். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், வழி அனுப்பு விழா நடத்தினார்கள். காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் குடும்பத்துடன் வந்து விழாவில் கலந்து கொண்டார்கள்.

காக்கிச்சட்டைகாரர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் கண் கலங்க மாட்டார்கள். ஆனால் அன்று பலரின் கண்கள் குளமாகின. ஐ.ஜி. அருளுக்குப் பிறகு அந்த இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்ற கேள்விக்குறியோடு விழா முடிந்தது.

அவர் மறைந்த அன்று, எழும்பூரில் அவரது இல்லத்தில் இருந்த அவரது உடலுக்கு கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்தேன். அங்கு வந்திருந்த காவல்துறை அதிகாரிகளும், அவரது மகன் மைக்கேலும் வீட்டுக் வேலைக்காரர்களும் கண்ணீருடன் நின்ற என்னைப் பார்த்து வியந்தனர். ஒரு நடிகருக்கு காவல்துறை அதிகாரியிடம் என்ன நெருக்கம் என்று நினைத்திருக்கலாம். என்னுடைய 11 வயதில் இருந்து என் மனதில் இருந்த ஹீரோ அவர்தான் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

முரண்பட்டு நிற்கும் கண்டிப்பையும் கருணையையும் ஒரே இடத்தில் தக்க வைக்க முடியும் என்பதற்கு உயிருள்ள உதாரணமாக இருந்தவர் அருள்.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →