பயிற்சி: வெற்றி பெற்றவர்கள் வழிகாட்டுகிறார்கள்..!
எந்த ஒரு செயலுக்கும் ஊக்குவிப்பும், சரியான வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. தொழிலில் நாம் எடுக்கும் முடிவுகளே தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும். கருவிகளை இயக்கத்தான் பயிற்சி அளிப்பார்கள். ஆனால
எந்த ஒரு செயலுக்கும் ஊக்குவிப்பும், சரியான வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.
தொழிலில் நாம் எடுக்கும் முடிவுகளே தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும். கருவிகளை இயக்கத்தான் பயிற்சி அளிப்பார்கள்.
ஆனால், மாறிவரும் சூழ்நிலையில் தொழில் முனைவோருக்கும் நிர்வாகத் திறனை வளர்க்கவும், புதிய தொழில் வாய்ப்புகள் குறித்துக் கூறவும், அனுபவமிக்க தொழிலதிபர்களின் ஆலோசனைகளையும் பயிற்சியாக அளித்தால் மேலும் தொழில் வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் உள்ளன.
Advertisement
தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இளம் தொழில்முனைவோர் பயிற்சிப் பள்ளி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இதற்கு தலைவராக ஏ.எம்.எஸ்.ஜி. ஜெயகண்ணனும், செயலாளராக கே.பிரபாகரனும், பொருளாளராக என்.இளங்கோவனும் உள்ளனர்.
பயிற்சிப் பள்ளியின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து தலைவர் ஜெயகண்ணனிடம் கேட்டபோது:
தொழில்முனைவோருக்குப் பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டதன் நோக்கம் என்ன?
இளம் தொழில்முனைவோருக்கு நல்ல வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அவர்கள் திறந்த மனதுடனும், ஒற்றுமையுடனும் செயல்படவும் பயிற்சி தேவைப்படுகிறது.
முன்பு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருளை நுகர்வோர் சந்தையில் வாங்கிக் கொள்வார்கள். தற்போது நுகர்வோர் விரும்பும் பொருளை தயாரித்தால்தான் தொழிலில் ஜெயிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
எனவே, இலகுவான நடைமுறை, அதிக வருமானம் கிடைப்பதற்கான வழிமுறைகள், வெளிப்படையான நிர்வாகம் ஆகியவை குறித்து பயிற்சி அளிப்பது அவசியம் எனக் கருதி இந்தப் பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டது.
எந்த ஆண்டு யாரால் துவங்கப்பட்டது?
12.3.2008 அன்று தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் ரத்தினவேலு தலைமையில் அருண் ஐஸ்கிரீம் உரிமையாளர் ஆர்.ஜி. சந்திரமோகன் துவக்கி வைத்தார். ஆரம்பத்தில் 54 உறுப்பினர்கள் இருந்தனர்.
தற்போது 97 உறுப்பினர்கள் உள்ளனர்.
உறுப்பினர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?
ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் அறிமுகப்படுத்த வேண்டும். பின்னர், புதிய உறுப்பினருடன் நேர்காணல் நடைபெறும். இதில் திருப்தி இருந்தால் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வோம்.
எத்தகைய பயிற்சிகளை அளிக்கிறீர்கள்?
நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், மாறுதல்களை எதிர்கொள்வதற்கும், கணக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும், புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சிஅளிக்கிறோம்.
மேலும் நேர மேலாண்மை, தொழிலாளர்களை நடத்தும் விதம், தொழிலாளர்களை எப்படி ஊக்குவிப்பது என்பது உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கிறோம்.
அந்தந்தத் துறையில் சிறந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் நாங்கள் எங்கள் உறுப்பினர்களின் வெற்றியைப் பாராட்டுகிறோம்.
அவர்களது தொழில் வளர்ச்சியில் அக்கறை கொள்கிறோம்.
உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?
சிறந்தவர்களையே உறுப்பினர்களாகத் தேர்வு செய்கிறோம். பயிற்சி துவங்கும் முன்னர் உறுதிமொழி எடுக்க வேண்டும். பள்ளியின் சட்ட திட்டப்படி குறிப்பிட்ட நேரத்தில் பயிற்சியில் பங்கேற்பது, பயிற்சிக்கு வரும்போது குறிப்பேடு,, பேனா கொண்டு வருவது, பயிற்சியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது என உற்சாகமாக செயல்பட்டு வருகிறார்கள்.
பயிற்சியின் காலநேரம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது?
மாதம் ஒரு நாள் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நான்கு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை பெரிய தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று பயிற்சி பெறுவது, ஆண்டுக்கு ஒரு முறை வெளியூரில் இருநாள் பயிற்சிமுகாம் நடத்துவது என திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம்.
உறுப்பினர்களுக்கிடையே சிறு குழுக்கள் அமைத்து, தொழில் குறித்த ஆலோசனைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்கிறோம்.
இதனால் மாறிவரும் வர்த்தக உலகத்துக்கு ஏற்ப தங்களைத் தொழில்முனைவோர் தயார்படுத்திக் கொள்ள இயலும்.
எதிர்காலத் திட்டம் என்ன?
முன்பு அண்ணன், தம்பி, என குடும்பமாக இருந்து செயல்பட்டு தொழிலை வளர்த்தனர்.
தற்போது அதுபோன்ற தொழில்கள் பிரிக்கப்பட்டு, துண்டுதுண்டாகி விடுகிறது.
இதனால் தொழிலில் சிதைவு ஏற்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும்.
கூட்டுத் தொழிலால் ஏற்படும் நன்மைகள், குடும்ப உறவு இல்லாவிட்டாலும், நான்கு பேர் சேர்ந்து தொழில் துவங்க ஊக்கமளிப்பது உள்ளிட்டவற்றில் எங்கள் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த உள்ளோம்.
தொழில்முனைவோர் திறந்த மனதுடனும், ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இன்னும் பத்து ஆண்டுகளில் தொழில்முனைவோரிடம் மிகப் பெரிய மாற்றம் வரும்.