தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பது கவிதை வரிகள். ஆனால், அந்தத் தமிழுக்காக தனது உயிரையும் பணயம் வைத்து மோட்டார் பைக்கில் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோவையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார்.
ஒரு மொழியின் தொன்மையும், அது பிற மொழிகள் எதனையும் சாராது தனித்து இயங்குவதற்குரிய ஆற்றலைப் பெற்றிருந்து, அந்த மொழி காலத்தால் அழியாத பல இலக்கியங்களை ஈன்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தனித்தன்மையோடு மக்களுடைய பயன்பாட்டில் தொடர்ந்து இருக்குமானால் அந்த மொழி உலகச் செம்மொழி என அறிவிக்க தகுதியுடையதாகும்.
தமிழ் மொழி தொன்றுதொட்டு இன்னமும் பேச்சு வழக்கில் வழங்கிவரும் செம்மொழியாகப் பாராட்டப்படுகிறது. கோவையில் இம்மாதம் 23ம்தேதி முதல் 27ம்தேதி வரை செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டை பிரபலப்படுத்தும் வகையிலும், இம்மாநாட்டைக் குறித்து பட்டி தொட்டிகளிலெல்லாம் இருக்கும் மக்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் மலை மாவட்டமான நீலகிரியிலிருந்தும் செம்மொழி விழிப்புணர்வு பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தனி நபராக நடத்தி வருபவர் அருவங்காடு பகுதியை சேர்ந்த என்.ஆர்.செந்தில்குமார்.
தமிழுக்கு உயரிய அந்தஸ்து வழங்கப்பட்ட செய்தி உயர்ந்த சிகரமான தொட்டபெட்டாவில் வெளியானதால், தற்போது கோவையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார பயணத்தையும் அங்கிருந்தே தொடங்கியுள்ளார் செந்தில்குமார்.
உதகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மேலாளராகப் பணியிலுள்ள செந்தில்குமார், கடந்த 6ம் தேதியன்று இந்தப் பயணத்தை தொடங்கினார். இதற்காக அவரது மோட்டார் பைக்கில் 1330 திருக்குறள்களும் ஒட்டப்பட்டு, பைக்கின் முற்பகுதியில் செம்மொழி மாநாட்டுக்கான இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் தொடங்கி தமிழகம் முழுதும் சுமார் 4,000 கி.மீ.தூரத்தை மோட்டார் பைக்கிலேயே சுற்றி வந்து, 23ம் தேதியன்று கோவையை அடைவதுதான் செந்தில்குமாரின் திட்டம்.
இந்த பிரசார பயணம் தொடர்பாக செந்தில்குமார் நம்மிடம் கூறியதாவது:
""செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளில் உலகில் ஏழாவது மொழி தமிழாகும். நம் தாய்மொழியை, ஆங்கில மோகத்தின காரணமாக நிராகரிப்பதும், பிற மொழிகளின் கலப்பால் அதனைச் சிதைப்பதையும் கைவிட்டு உலகத்தமிழ் செம்மொழியை அனைவரும் போற்ற வேண்டுமென்பதற்காகவே இந்த மோட்டார் பைக் பிரசாரப் பயணத்தை தொடங்கியுள்ளேன்.
இந்த பிரசாரப் பயணத்தின்போது தமிழ் மொழியைக் குறித்து அச்சிடப்பட்டுள்ள கைப்பிரதிகளை ஆங்காங்கே விநியோகித்து செல்கிறேன். இதுவரை 1 லட்சம் கைப்பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் செம்மொழி என்றாலே என்னவென அறிந்திருக்கவில்லை. கோவையில் நடைபெறும் மாநாடும் தமிழுக்காக நடத்தப்படும் மாநாடு என்பதைக்குகூட மக்கள் உணராமலுள்ளனர்.
அவர்களிடத்தில் தமிழைக் குறித்தும், செம்மொழி அந்தஸ்த்தைக் குறித்தும் விளக்கமளிக்கிறேன். இந்த முயற்சியை சாதனைக்காக அல்லாமல் தமிழ் மொழிக்கு எனது சிறு பங்காகவே தொடங்கியுள்ளேன். எனது முயற்சிக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமைக்கொறடா பா.மு.முபாரக் மற்றும் உதகை நகர்மன்ற துணைத்தலைவர் ஜே.ரவிக்குமார் ஆகியோர் துணை நின்றுள்ளனர்'' என்றார்.
தினந்தோறும் காலை 7 மணிக்கு தொடங்கும் அவரது பயணம் இரவு 10 மணி வரை தொடர்கிறது. இந்த பயணத்தின்போது தான் சந்தித்த பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெற்ற குறிப்புரைகளைத் தொகுத்து, தனது மோட்டார் பைக்கில் வைக்கப்பட்டுள்ள செம்மொழி மாநாட்டு இலச்சினையையும் இம்மாதம் 23ம்தேதியன்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் நேரில் வழங்குகிறார் செந்தில்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.