விளையாட்டு: பெரிய வீரர்களின் தவறையும் சுட்டிக்காட்டுவேன்!
தற்போது பள்ளி மாணவ, மாணவிகளைக் கவர்ந்துள்ள விளையாட்டுகளில் ஒன்று செஸ். மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு. இளைஞர்களின் மத்தியில் இந்த விளையாட்டுக்குத் தனிச் சிறப்பு உண்டு. செஸ் விளையாட்டுக்கு இந்தியா
தற்போது பள்ளி மாணவ, மாணவிகளைக் கவர்ந்துள்ள விளையாட்டுகளில் ஒன்று செஸ். மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு. இளைஞர்களின் மத்தியில் இந்த விளையாட்டுக்குத் தனிச் சிறப்பு உண்டு.
செஸ் விளையாட்டுக்கு இந்தியாவின் முதல் சர்வதேச நடுவராக ஒரு தமிழர் இருக்கிறார் என்பது பலரும் அறியாத விஷயம். அவர் பெயர் ஆர்.அனந்தராம். விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர். அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் 36 ஆண்டுகள் வேதியியல் துறைப் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
தனது அந்தஸ்து சிறிது உயர்ந்துவிட்டாலே ஏ.சி.காரில் வலம்வரும் இந்த கால கட்டத்தில் அனந்தராம், சிவகாசியில் சைக்கிளில் வலம் வருகிறார். செஸ் விளையாட்டு மற்றும் சர்வதேச நடுவரானது குறித்து அனந்தராம் நம்மிடம் பேசியதிலிருந்து...
Advertisement
""நான் ஓய்வுபெற்று மூன்று வருடங்கள் ஆகின்றன. பள்ளியில் படிக்கும்போது, எனது வீட்டருகே ஞாயிற்றுக்கிழமை செஸ் விளையாடுவார்கள். அப்போது அச்சக அதிபர் என்.பி.எஸ்.எஸ். ரத்தினநாடார், மதுரையில் இருந்து வீரர்களை வரவழைத்து போட்டிகள் நடத்துவதும், பலருக்கு பயிற்சி அளிப்பதுமாக இருந்தார். அப்போது எனக்கு செஸ் என்றால் என்னவென்று தெரியாது.
கல்லூரியில் படிக்கும்போது, மற்றவர்கள் செஸ் விளையாடுவதை சென்று பார்க்கத் தொடங்கினேன். பின்னர் படிப்படியாக செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. பல நுட்பங்களைத் தெரிந்துகொண்டேன். 1978 ஆம் ஆண்டு சிவகாசி செஸ் கிளப் தொடங்கப்பட்டது. அதற்கு நான் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டேன்.
இதையடுத்து, மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் நடுவராகப் பணிபுரிய தொடங்கினேன். பின்னர், வேறு மாவட்டங்களிலும் நடுவராகப் பணியாற்ற அழைத்தார்கள். சில ஆண்டுகளில் மாநில போட்டிகளில் நடுவராகும் வாய்ப்புக் கிடைத்தது.
1980-ஆம் ஆண்டு அகில இந்தியப் போட்டிக்கு உதவி நடுவராகப் பணிபுரிந்தேன்.
படிப்படியாக 1995 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த செஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய இளைஞர் அணிக்குத் தலைவரானேன். இதையடுத்து, பல நாடுகளில் நடைபெறும் சர்வதேச செஸ் போட்டிக்கு நடுவராகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த 5 வருடங்களாகத் தொடர்ந்து சர்வதேச ஆண்கள் இறுதிப் போட்டியில் முதன்மை நடுவராக பணிபுரிந்த இந்தியாவின் முதல் நபர் நான்தான் என்பதை அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.
2008 ஆம் ஆண்டு 160 நாடுகள் கலந்து கொண்ட ஒலிம்பியாட் செஸ் போட்டியில் நடுவராகப் பணிபுரிந்துள்ளேன். விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ள நார்வே நாட்டு வீரர் ஹால்ஸ்சன் உள்ளிட்ட பல வீரர்கள் எனக்கு நல்ல அறிமுகம் உள்ளவர்கள்.
நடுவராகப் பணிபுரியும்போது, பெரிய வீரர்கள் விளையாடினாலும், தவறு என்றால் சுட்டிக் காட்டத் தயங்கமாட்டேன். நடுவராகப் பணிபுரிய செஸ் விளையாட்டின் சட்டதிட்டங்கள் குறித்தும், தொழில்நுட்பம் குறித்தும், களத்தில் விளையாடும் வீரர்கள் குறித்த விவரமும் தெரிந்திருக்கவேண்டும்.
செஸ் குறித்த புத்தகங்கள் அதிகமாகப் படிக்கவேண்டும். தற்போது நடுவராக வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்தியா செஸ் விளையாட்டில் தற்போது தர வரிசைப் பட்டியலில் 5-ஆம் இடத்தில் உள்ளது.
இந்திய அளவில் செஸ் வீரர்கள் தமிழகத்தில் 35 சதம் பேர் உள்ளார்கள் என்பது தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகும். நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எனக்கு முழு ஆதரவாக என் மனைவி சீமைப்பழம் இருக்கிறார்.