தினமணி கதிர்

ஆதரவு: கால்நடைகளின் கருணை இல்லம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சின்னகள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ளது செல்வகணேசபுரம். கரடு முரடான மலைகள். பவானிசாகர் நீர்வீழ்ச்சியின் தொடுமுனையில் சுமார் 30 ஏக்கர் பரப்பில் கால்நடைகளுக்காக அமைக

மனோஜ் கிருஷ்ணா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சின்னகள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் உள்ளது செல்வகணேசபுரம். கரடு முரடான மலைகள். பவானிசாகர் நீர்வீழ்ச்சியின் தொடுமுனையில் சுமார் 30 ஏக்கர் பரப்பில் கால்நடைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது அந்தக் கருணை இல்லம். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் 100 பேர் ஒன்று சேர்ந்து கால்நடைகளுக்குச் சேவை செய்வதற்காக இந்த நலச் சங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

பராமரிப்பு இன்றி விடப்பட்டவை, நோய்வாய்ப்பட்டவை, போதிய மருத்துவ வசதி கிடைக்கப் பெறாதவை என்று பல விதமான கால்நடைகளைத் தங்களது கால்நடை பராமரிப்பு சங்கத்தில் வைத்து முழு கவனத்துடனும்,தங்களது முழுமையான அனுபவத்துடனும் பிராணிகள் மேல் கருணையுடனும் கண்காணித்து சேவை வழங்கி வருகிறார்கள் இவர்கள்.

கௌரவத் தலைவர் இரா.இரத்தினகிரியின் தலைமையில் தலைவர் சின்னச்சாமி,செயலாளர் துரைசாமி, நிர்வாக குழு உறுப்பினர் குப்புசாமி ஆகியோர் பணியாளர்களுடன் இக் கால்நடை நலச் சங்கத்தை நிர்வகித்து வருவதோடு இந்திய பிராணிகள் நலவாரியத்தில் அங்கீகாரம் பெற்றும் செயல்பட்டு வருகிறார்கள். இங்கு அமைக்கப்பட்டிருக்கும் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படும் கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல், காளைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்துதல் மற்றும் குடல் புழு நீக்கம் போன்ற பல்வேறு வகையான சிகிச்சைகள் இலவசமாக செய்கிறார்கள். அத்துடன் மாதந்தோறும் ஒவ்வொரு கிராமங்களிலும் இலவச கால்நடை பாதுகாப்பு முகாம் நடத்தி முகாமில் கால்நடைகளுக்குத் தேவைப்படும் அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக செய்கிறார்கள். கால்நடை வளர்ப்பு முறை மற்றும் நோய் தடுப்பு முறை பற்றி விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கால்நடை சங்கத்தின் செயலாளர் துரைசாமி கூறுகையில், ""எங்களின் பணி ஓய்வு ஊதியத்தில் இருந்தும் இதன் உறுப்பினர்கள் வழங்கும் தொகையிலிருந்தும் இந்தக் கால்நடை நலச்சங்கத்தை நடத்தி வருகிறோம். கால்நடை ஆய்வாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கவனிக்கப்படாமல் இருக்கும் கால்நடைகளை நிறைய பார்ப்போம். பசுவோ, எருதோ பயன்படாத நிலைக்குத் தள்ளப்படும்போது அதை மக்கள் கைவிட்டுவிடுவதைக் கவனித்தோம்.

இந்தியாவில் பெரும்பாலும் பசுவையோ, வீட்டில் வளர்த்த காளைகளையோ இறைச்சி மாடாக விற்பதற்குத் தயக்கம் இருக்கிறது. அதே சமயத்தில் அதை வீட்டில் வைத்து பாதுகாப்பதும் அதிக செலவு பிடிப்பதாக இருக்கிறது. அதனால் அவற்றை பராமரிக்க முடிவதில்லை. எனவே இதுபோன்ற கால்நடைகளைப் பராமரிக்க முடிவெடுத்தோம்.

கால்நடைகளுக்குத் தீவனம்தான் முக்கிய தேவை. எனவே, 30 ஏக்கர் பரப்பில் உள்ள பண்ணையில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாய பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சொட்டு நீர் பாசனம் அமைத்து அதன் மூலம் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், 500க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களையும் வளர்த்து வறண்ட பூமியாகவுள்ள இவ்விடத்தைப் பசுஞ்சோலையாக மாற்ற உள்ளோம்.

எதிர் காலத்தில் விவசாயிகளுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கால்நடை வளர்ப்பு, ஆடு வளர்ப்பு,கோழி வளர்ப்பு பற்றிய குறுகிய கால பயிற்சி அளித்து அவர்கள் அரசின் நிதி உதவியோடு தொழில் தொடங்கும் திட்டம் நடைமுறைபடுத்த உள்ளோம். இளநீர்,கோமியம், சாணம். பால்,தயிர்,நெய் இவற்றுடன் கரும்பு சர்க்கரையைச் சேர்த்து பஞ்ச கவ்யம் எனப்படும் அரிய இயற்கை பயிர் பாதுகாப்பு மருந்து தயாரிக்க இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

பணியாற்றி ஓய்வெடுக்க வேண்டிய இவர்கள் தமிழ் நாடு முழுவதும் ஓடோடி ஓயாது கால்நடைகளுக்காக சேவை ஆற்றி வரும் இவர்களது பண்ணை விவசாயத்திற்கு மின்சாரம் வணிகரீதியாகவே கணக்கிடப்பட்டு வருவது பெரும் சுமையாக உள்ளது.

விவசாயத்திற்கு அரசு வழங்கும் இலவச மின்சாரமும்,தாங்கள் கால்நடைச் நலச் சங்கத்திற்கு வாங்கிய நிலத்திற்கு அரசு பட்டாவும் வழங்க வேண்டும் என்பதே இவர்களது வேண்டுகோள்.

கால்நடைகளுக்காகப் பாடுபடும் இவர்களுக்கு அரசுத்துறையில் இருக்கும் மனிதர்கள் செவி சாய்ப்பார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT